Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வேகமாக வளரும் மனை வணிகம். விரைவாக கைவிட்டு போகும் தமிழர் நிலங்கள்.  

ஒரு இனம் வாழ வேண்டுமெனில் அதற்கு முக்கியமான தேவை அந்த மக்கள் வாழ்வதற்கான மண். அந்த மண் இல்லாவிட்டால் அந்த மக்கள் அகதிகள் ஆகிவிடுவார் . ஈழத்தில் மண்ணை இழந்த மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனது நாம் எல்லோரும் அறிந்ததே. அதனால் தான் உலகில் பல இனங்கள் தங்கள் மண்ணை உயிர் கொடுத்தேனும் பாதுகாத்து வருகின்றனர்.  

உலகில் தொன்மை இனமான தமிழினம் பல காலகட்டங்களில் தனது மண்ணை பாதுகாத்து வந்துள்ளது. இம்மண்ணை ஆண்ட மன்னர்கள் அந்நியர்களின் படையெடுப்பை கடுமையாக எதிர்த்து போரிட்டு வந்துள்ளனர் . எனினும் தமிழர் மண்ணை வேற்றின மக்கள் ஆளாமல் இல்லை. மராத்தியர்கள் , தெலுங்கு நாயக்கர்கள் , பிரெஞ்சு அரசு , பிரித்தானியா அரசு எனப் பலரும் இந்த மண்ணை ஆண்டு வந்துள்ளனர். இருப்பினும் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பு, தமிழ் மொழிக்கான மாநிலம் உருவான பின்னர் தமிழர் நாட்டை முற்றிலும் தமிழர் ஆளவில்லை என்பது கசப்பான உண்மை. 

இங்கு தமிழ்நாடு தனி மாநிலமாக இருந்தாலும் , இம்மண் இந்த மக்களுக்கு சொந்தமில்லை என்ற நிலை தான் இன்று வரை இருக்கிறது  . யார் வேண்டுமானாலும் , எந்த இனத்தவர் வேண்டுமானாலும் தமிழர் மண்ணை வாங்கலாம் , உரிமை கொண்டாலாம் என்ற நிலையில் தான் தமிழகம் உள்ளது . இது மொழிவழி மாநிலம் பிரிந்ததற்கு முற்றிலும் முரணானது ஆகும்.  

காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பூர்வ குடிமக்களை தவிர யாரும் நிலம் வாங்க முடியாது . அப்படி ஒரு சிறப்பு நில உரிமை சட்டம் அங்கு உள்ளது . ஆனால் தமிழகத்திலோ அப்படியெல்லாம் இல்லை . பணம் இருந்தால் போதும் யாரும் இங்கு வந்து நிலம் வாங்கலாம் . 

இதனால் என்னவாயிற்று என்று நீங்கள் கேட்கலாம். மனைவணிகம் என்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்ட காரணத்தால் பணபலம் படைத்த வடநாட்டவர்கள், மலையாளிகள் இங்கு வந்து சொத்துக்களை குவிக்கின்றனர். விவசாயிகளின் இயலாமை மற்றும் வறுமையை பயன்படுத்தி அவர்களின் நிலத்தை பிடிங்கி வைத்துக் கொள்கின்றனர் . பின்னர் அதிக லாபத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதை தமிழக வியாபாரிகளும் செய்கின்றனர் . பல நூறு ஏக்கர் விளை நிலத்தை வாங்கி விட்டு , பல முகவர்களை நியமித்து கண்மூடி கண் திறப்பதற்குள் நிலத்தை விற்று விடுகின்றனர். இதுபோல் எல்லா பணமுதலைகளும் போட்டி போட்டு இந்த வியாபாரத்தில் இறங்கி இலாபம் சம்பாதிக்கின்றனர். 

இதனால்  விலை நிலங்கள் நுகர்பொருள் போல் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகிறது. இப்படி பெரு முதலீட்டாளர்களிடம் இருந்து நிலங்களை வாங்கும் சிறு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தவர் ஆவர். இவர்கள் கைக்கு தான் தமிழர் நிலங்கள் சென்று சேர்கிறது. இவர்கள் குடும்பமும் , உற்றார் , உறவினர் அனைவரும் தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் சுபபோகதுடன் வாழ தமிழினம் தனது நிலத்தை , வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது . தமிழ் மக்கள் வெளி மாநிலத்திலும் வாழ முடியாத நிலையில் , சொந்த மாநிலத்திலும் நிலம் வாங்க முடியாத அவல நிலையில் சிக்கியுள்ளனர். மேலும் நுகர்பொருள் போல மனைவணிகம் சந்தைப் படுத்தப்பட்ட காரணத்தால்  மனையின் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டே போகிறது . தமிழ் மண்ணின் மனிந்தர்கள் இதனால் நிலம் வாங்குவது என்பது முடியாத காரியம் ஆகிவிட்டது .  

இதை நாம் தடுத்து நிறுத்தத் தவறினால் தமிழர் நிலங்கள் யாவும் அந்நியர்கள் கைக்கு சென்று விடும் . தமிழினம் நிலமில்லாமல் அந்நியர்களிடம் அண்டிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் . மக்கள் தொகையில்  சிறு பான்மை இனமாக மாறி அரசியல் உரிமைகளை கூட பெற முடியாத நிலைக்கு தமிழர்கள் தள்ளப் படுவர். இதனால் விரைவில் தமிழர்கள் தங்கள் மொழி , பண்பாடு மற்றும் அடையாளத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.  

இப்போது தேவை , விளை நிலங்கள் யாவும் வெளி மாநிலத்தவர் வாங்க முடியாது என்ற சட்டம் இயற்ற வேண்டும். இதற்கு மேலும் நிலங்களை தமிழர்கள் இழக்க முடியாது . பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழர் நிலத்தை தமிழக அரசு தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது. மேலும் வீட்டு மனையை விற்பனை செய்யும் தமிழர்கள் இன்னொரு தமிழருக்கே மனையை விற்க வேண்டும் . மனையை வாங்கும் போது வேற்றின மக்களிடம் சிக்கியுள்ள தமிழ் மண்ணை வாங்க வேண்டும் . இது தமிழர்களால் செய்யக் கூடியது. இதை தமிழர்கள் உடனே நடைமுறை படுத்த வேண்டும் . அரசியல் தீர்வாக , தமிழர்களுக்கு நில உரிமை சட்டம் இயற்ற வேண்டும். தமிழர் நாட்டில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட மக்களே மண்ணை வாங்க முடியும் என்ற சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும்.  இதை தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் . 

தமிழ்  மண்ணில் தமிழர் அகதிகளாக மாற வேண்டாம் என்று நினைத்தால் உடனே நம் நிலத்தை பாதுகாப்போம். மண் காப்போம் , மொழி காப்போம் இனம் காப்போம் .  
[vuukle-powerbar-top]

Recent Post