Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏமாற்றமளிக்கும் நவநீதம் பிள்ளையின் பேச்சு !

இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஐ நாவின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை , இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . அதில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தான் கண்டவற்றை, கேட்டவற்றை , உணர்ந்தவற்றை சர்வதேச நாடுகளுக்கு  எடுத்துக் கூறினார் . நவநீதம் பிள்ளையின் பயணம் தமிழர்களுக்கு சாதமாக இருக்கும் , நீதி நிலைநாட்டப் படும் என்று ஒட்டுமொத்த தமிழ் சமூகமே எதிர்பார்த்திருந்த வேளையில் , நவி பிள்ளையின் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது . இந்த அறிக்கையை உலகத் தமிழர்கள் ஏற்பது சற்று சிரமமே .

காரணம் நவி பிள்ளை இலங்கை அரசின் சாதனைகளை மெச்சுகிறார். போர் முடிவடைந்த பின்னர் அரசு எவ்வாறு , சாலைகள் , பாலங்கள் , கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது போன்ற விடயங்களை பாராட்டுகிறார் .

புலிகள் குறித்து அவர் பேசும் போது,
பல உயிர்களை கொன்றழித்த இரக்கமற்ற அமைப்பே புலிகள் அமைப்பாகும். நீலன் திருச்செல்வத்தையும் அவர்கள் கொலை செய்தனர். இப்படியான இரக்கமற்ற அமைப்பை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இனியும் பெருமை படுத்த வேண்டிய அவசியம் இல்லை .

பிறகு , போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவி பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார் . வெள்ளை வேன் கடத்தல், ஊடகத் துறையினர் தாக்கப்படுவது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை , சிறைச்சாலையில் தமிழர்கள் கொல்லப்பட்டது , இராணுவ மயமாக்குதல், வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்  போன்ற விடயங்கள் குறித்து நவி பிள்ளை சுட்டி காட்டுகிறார் . மேலும் ஆங்காங்கே நடந்த கொலைகள் மனித உரிமை மீறல்கள் குறித்து நுணுக்கமான விடயங்களுக்கு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

போரின் போதே நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பில் இராணுவமே விசாரணை நடத்தி தீர்ப்பு தரும் என்று சொல்லிவிட முடியாது. கடந்த காலங்களில் இது போன்ற இராணுவ விசாரணைகள் தோல்வி அடைந்துள்ளது   இது தொடர்பில் தேசிய அளவிலான விசாரணை நடைமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் அல்லது சர்வதேச விசாரணை ஒன்றை முடுக்கி விடவேண்டி வரலாம் என்று தெரிவித்துள்ளார் நவி பிள்ளை. மேலும் இலங்கை அரசு சர்வாதிகார அரசாக மாறி வருகிறது என்றும் சுட்டிக் காட்டி உள்ளார் .

இது தான் நவிபிள்ளை தன்னுடிய பயணத்தின் போது கண்டறிந்ததாக சொல்லப் படுகிறது. ஆனால் நவி சொல்லாத விடயங்கள் ஏராளமாக உள்ளன ௧. காணாமல் போன உறவகளை பற்றி தாய் மார்கள் கண்ணீர் மல்கி கதறியது குறித்து சுட்டிக் காட்டிய நவி , இதற்க்கு காரணமான  இலங்கை அரசை ஏன் கண்டிக்க வில்லை.

௨.  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இறுதி போரின் போது கொல்லப்பட்டது தொடர்பாக ஏன் ஒரு தெளிவான அறிக்கை வெளியிடவில்லை.
௩.  ஆடைகள் களையப்பட்டு கைகள் கட்டப்பட்டு கொல்லப்பட்ட புலிகள் குறித்து ஏன் எதுவும் சொல்லவில்லை .

௪.அதே போல் பெண் புலிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப் பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பில் ஏன் பேசவில்லை.
௫. இலங்கை அரசு சர்வதேச விதிமுறைகள் மீறி வான் வழித் தாக்குதல் நடத்தி பல ஆயிரம் மக்களை கொல்லப்பட்டது தொடர்பில் ஏன் ஐநாவின் மனித உரிமை ஆணையம் வாய்திறக்கவில்லை .
௬. போர் விதிமுறைகள் மீறி இரசாயன குண்டுகள் பயன்படுத்திய இலங்கை இராணுவத்தை யார் விசாரிப்பது ?
௭. சிரியாவில் இரசாயன குண்டுகள் பயன்படுத்தினால் உலகநாடுகள் உடனே கண்டிக்கிறது . ஆனால் ஈழத்தில் இரசாயன குண்டுகள் பயன்படுத்தினால் அது தவிர வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று உலகம் கூறுகிறது .
௮. புலிகள் மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பு என்று கூறும் நவி பிள்ளை ஏன் இலங்கை அரசு அதை விடக் கொடூரமான தீவிரவாதத்தை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்த போதும் இலங்கை அரசை கண்டிக்க வில்லை. இலங்கை அரசு உலகின் மிகக் கொடிய பயங்கர வாத அரசு என்று ஏன் நவி பிள்ளையால் சொல்ல முடியவில்லை .
௯. தமிழர்கள் நிலம் அனைத்தும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள போதும் , ஏன் அது குறித்து கவலை கேள்வி எழுப்பவில்லை .
௧௦ . இறுதியாக தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை கருத்தில் கொள்ளாமல் , தமிழர் மொழி , பண்பாடு , நிலம் ஆகியவை அழிக்கப்பட்டு வருகிறது . இதை குறித்து எந்த செய்தியும் நவி பிள்ளை தனது அறிக்கையில் தெரிவிக்க வில்லை .

அதனால் நவிபிள்ளையின் இந்த பயணம் முழுமையானதாக இல்லை என்பது தெரிகிறது. இலங்கை விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை இது பெற்றுத் தராது என்பதும் தெளிவாகிறது . ஓரளவிற்கு இலங்கைக்கு நவி பிள்ளையில் பயணம் அழுத்தம் கொடுத்தாலும் , தமிழர்களுக்கு எந்த வகையிலும் நீதி பெற்றுத் தருவதாக இல்லை என்றே சொல்லலாம். அதனால் தொடர்ந்து நீதிக்காக , தங்கள் உரிமைகளை பெற்றுக் கொள்ள தமிழர்கள் போராட வேண்டி இருக்கும் என்றே தெரிகிறது .[vuukle-powerbar-top]

Recent Post