Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் அதிமுக , திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, பொதுவுடைமை கட்சிகள் அல்லாத புதிய கூட்டணி அமைக்க ஒரு முயற்சி . 

தமிழகத்தில் பல தீர்க்க முடியாத பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகிறது. அதில் ஈழப் பிரச்சனை, ஈழத் தமிழர் சிறப்பு முகாம், கூடங்குளம் அணு உலை, காவிரி, முல்லைப் பெரியாறு, மீதேன் எரிவாயு எடுத்தல், நியூற்றினோ, கைல் குழாய்கள் பதிப்பு, தமிழ் வழிக் கல்வி,  தமிழ் ஆட்சி மொழி கோரிக்கை போன்ற  பல பிரச்சனைகள் இன்னும் எந்த ஒரு தீர்வையும் எட்டாத நிலை உள்ளது. 

இது வரை ஆட்சியில் இருந்த கட்சிகளோ பண வெறி பதவி வெறி பிடித்து  தமிழக மக்களின் மீது எந்த அக்கறையுமின்றி செயல்பட்டு வருகிறது. தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் உள்ளது . இந்த நிலை மாற வேண்டுமெனில் , தமிழர்கள் மேல் அக்கறை உள்ள பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். இந்த கட்சிகளை ஒன்றிணைக்க தமிழர் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐயா பழ நெடுமாறன் அவர்களை நாம் சந்தித்தோம். நெடுமாறன் ஐயாவோடு புரட்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐயாவும் இருந்தார். 

தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் அதியமான் அவர்களும், நானும் ஐயாவிடம் தமிழர் நலன் சார்ந்த அதே சமயம் கணிசமான அரசியல் பலம் உள்ள பாமக, மதிமுக மற்றும் வி.சி.க கட்சிகள் கூட்டணி உருவாக வேண்டும் என்றும், இந்த கூட்டணிக்கு  ஆதரவாக நாம் தமிழர் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஒன்று சேர்ந்தால், நிச்சயம் பாராளுமன்றத்திற்கு கணிசமான அளவிற்கு எம்.பி க்ளை அனுப்பலாம். இது வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தமிழர்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல்  உள்ள ஆறு கட்சிகளை ஓரங்கட்டலாம்.  அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டலாம் என்ற யோசனையை முன் வைத்தோம். இந்த திட்டத்திற்கு நெடுமாறன் ஐயா ஆதரவு வழங்குவதுடன் , இதை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.   

எங்கள் யோசனையை கேட்ட ஐயா நெடுமாறன், தமிழர் நலன் சார்ந்த கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டும் என்று தான் கடந்த 20 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்துள்ளதாகவும், ஆனால் இது வரை அது சாத்தியப் படவில்லை என்றும் , தேர்தல் என்று வந்தால் அனைத்து கட்சிகளும் பல் வேறு காரணங்களால் பிரிந்து சென்று விடுகின்றனர் என்று வேதனையுடன் தெரிவித்தார். தமிழர் நலன் சார்ந்த கூட்டணி தமிழகத்தில் ஏற்படுவது மிகக் கடினம் , அது ஏற்பட வாய்ப்பு குறைவு என்று கருத்து வெளியிட்ட நெடுமாறன் ஐயா, அப்படி ஒரு கூட்டணி அமைய மக்கள் விரும்புகிறார்கள் ஆனால் கட்சிகள் தான் விரும்புவதில்லை என்று கூறினார் . ஐயா கூறுவது உண்மை தான் . மக்களாகிய நாம்,  தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் தமிழ் இனத்திற்காக ஒன்றிணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாலும் , தேர்தல் என்று வரும் போது இந்த கட்சிகள் பல காரணங்களுக்கு பணபலம் செல்வாக்கு படைத்த கட்சியோடு கூட்டணி வைக்கின்றன. அதனால் தமிழர் நலம் சார்ந்த கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு இடங்களே தேர்தலில் கைப்பற்ற முடிகிறது. இதனால் தமிழர் நலம் முற்றிலும் அடிபட்டு போகிறது. 

எங்களது முயற்சிக்கு வாழ்த்து சொல்லிய நெடுமாறன் ஐயா, 'மூன்றாவது அணி அமைய மக்கள் தயார் , கட்சிகள் தயாரா ?' என்ற அவர் எழுதிய புத்தகத்தை எங்களிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் அவர் எழுதி உள்ளது போல் தமிழர் நலம் சார்ந்த மூன்றாவது அணி அமைய தமிழகத்தில் என்றும் மக்கள் தயாராகவே உள்ளனர் ஆனால் கட்சிகள் தான் தயாராக இல்லை என்பது தெரிகிறது . எனினும் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம் . தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.

உங்கள் கருத்துகளையும் தெரியப்படுத்துங்கள் தோழர்களே ! 


[vuukle-powerbar-top]

Recent Post