Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் பண்பாட்டை புறக்கணித்து ஆரியப் பண்பாட்டை திணிக்கும் தமிழக தொலைக்காட்சிகள். 

தற்போது பல தமிழ் தொலைக்காட்சிகள் ராமாயணம் மகாபாரதம் போன்ற சமஸ்க்ரித்த இதிகாச காப்பியங்களை  தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன. இதை வீட்டில் இருக்கும் இல்லத் தரசிகள் முதல் குழந்தைகள் வரை விரும்பிப் பார்கிறார்கள். அதற்கு இந்த கதைகளில் வரும் பிரமாண்டங்கள், மாயா சாலங்கள், அதீத கற்பனைகள்  காரணமாக அமைந்துள்ளது. குழந்தைகளும் அதற்காகவே பார்கிறார்கள். அதிலும் சுட்டி தொ.கா வில் பல்வேறு வடநாட்டு கற்பனை கடவுளர்களை வெளிநாட்டு பட பாணியில்  காக்கும் நாயகர்களாக சித்தரித்து பல இல்லாத கதைகளை உருவாக்கி உயிரோவியமாக (கார்டூன்) உலா விடுகிறார்கள். பீமன், அனுமன், கிருஷ்ணன், பிள்ளையார் போன்ற பாத்திரங்களை இவர்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி புதிய புதிய கதைகள் உருவாக்கி சிறுவர்களிடையே திணிக்கிறார்கள். புராணத்தில் கூட சொல்லப் படாத விடயங்களை இதில் காட்டுகிறார்கள்.  கூடவே இந்த கதைகளில் தமிழர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத பண்பாடுகளை கற்பிக்கிறார்கள். பிராமணன் மட்டுமே சமூகத்தில் உயர்வானவன் என்ற ஏற்றத் தாழ்வுகளை குழந்தைகளிடம் கற்பிக்கின்றனர் . 

அனைத்து வடநாட்டு காப்பியங்களும் நால்வருண கோட்பாட்டை மக்களிடையே  ஏற்கனவே விதைத்துவிட்ட நிலையில் , இந்த தமிழ் தொலைக்காட்சிகள், வருணாசிரம பேதங்களை மென்மையான முறையில் இந்த காப்பிய கதைகள் மூலமாக மக்களிடம் எடுத்து செல்கின்றன. நால்வருணங்கள் தமிழர்களுக்கு இல்லை என்றாலும் இப்போது இந்த காப்பியக்கதைகள் மூலமாக இந்த பாகுபாட்டை மக்களிடையே எடுத்து செல்கின்றன இந்த பொறுப்பற்ற ஊடகங்கள். 

தமிழ் சித்தர்கள், வள்ளலார் , வள்ளுவர் , ஒளவையார் போன்றவர்கள் இத்தைகைய வடநாட்டு மதங்களில் கூறப்பட்ட வருண பேதங்கள் , ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர். இத்தகைய பேதங்களை, தமிழர்களுக்கு ஒவ்வாத பல நெறிகளை மக்களிடம் திணித்து வருகிறது தமிழ் ஊடகங்கள். குடும்ப முறை, சமூக ஒழுக்கம் , அரசியல் நெறிமுறை போன்ற அனைத்து விடயங்களிலும் ஆரியப் பண்பாடு தமிழர் பண்பாட்டிற்கு முற்றிலும் விரோதமானது. புராணங்கள் என்ற பேரில் காமக் களியாட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்கின்றனர் இந்த ஊடகங்கள். போர் நூலை என்றுமே தமிழர்கள் அறநூலக ஏற்றுக் கொண்டதில்லை. வள்ளுவமும் அதையே தெளிவாக வலியுறுத்துகிறது. 'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க' போன்ற குறள்கள் உயிர்களிடத்தில் அன்பு செய்தல் போன்ற அறங்களை மக்களிடம் சென்று சேர்த்தது. ஆனால் ஆரிய காப்பியங்கள் பொறாமை, வஞ்சகம், அழுக்காறு ,அவா , வெகுளி போன்ற தீய சிந்தனைகளை நெஞ்சில் விதைக்கிறது. 

ஏன் வடநாட்டு பண்பாட்டை தமிழர்களிடம் திணிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏன் தமிழர் நூல்கள் இல்லையா , தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் காப்பியங்கள் இல்லையா? சங்க இலக்கியங்களில் வரும் கதைகள், திருக்குறள் நெறி கதைகள், சிலப்பதிகாரம் , மணிமேகலை போன்ற தமிழ் காப்பியங்கள், கடை ஏழு வள்ளல் வரலாறு,  பத்தியும்  உருக்கத்தையும் ஏற்படுத்தும் பெரியபுராண ஆன்மீகக் கதைகள், சிவனியம் மாலியம் சார்ந்த சைவ வைணவக் கதைகள்,  தமிழ் சித்தர்கள் வாழ்க்கை வரலாறு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சமகால புதினங்கள் , தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் எண்ணிலடங்கா கதைகள் தமிழில் இருக்கும் போது ஏன் வடமொழியில் எழுதப்பட்ட புனைவுக் கதைகளை தமிழகத்தில் பரப்ப வேண்டும் ? 

மேற்கூறிய தமிழர் மெய்யியல், சமூகவியல் வாழ்வியல் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏன் தமிழக தொலைகாட்சிகள் தயங்குகின்றன? தமிழ் சமூக அக்கறையுடன் இத்தொலைகாட்சிகள் செயல்படுமே என்றால் வடநாட்டு கற்பனை காப்பியங்களின் மூலமாக ஆரியப் பண்பாட்டை தமிழர்களிடையே திணிக்கும் வேலையை தமிழக தொலைக்காட்சிகள் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆரிய கதைகள் ஆரியர்களுக்கே உரியது. அதை அவர்கள் மண்ணில் பார்க்கட்டும் ரசிக்கட்டும். பிரச்சனை இல்லை.  நாம் அவற்றை தமிழ் மண்ணில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன? 

தமிழியம் சார்ந்த அறநெறி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தமிழ் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் தமிழ்த் தொலைக்காட்சிகள் . ஆரிய இந்துத்வா கொள்கைகளுக்கு இனிமேலும் இடமளிக்காமல் , தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் உயர்ந்த கொள்கைகள் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்வர வேண்டும். தமிழ்ப் பெற்றோர்களும் இந்த கருத்தியலை புரிந்து கொண்டு தமிழர் பண்பாட்டிற்கு ஒத்த நெறிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். தாங்களும் இந்த கற்பனை மாயவலைக்குள் வீழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  

- தமிழர் பண்பாட்டு நடுவம் [vuukle-powerbar-top]

Recent Post