Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com



சேனல் 4 நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள 'நோ பயர் சோன் - பாதுகாக்கப்பட்ட பகுதி' ஆவணப்படம் இலங்கையின் போர்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு மற்றுமொரு ஆதாரமாக விளங்குகிறது. 

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற உள்ள நிலையில் இக் காணொளி வெளியானது உலக நாடுகளின் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் இங்கிலாந்து நாட்டின் தொலைக்காட்சி இதை வெளியிட்டுள்ளது. புலிகளையும் விமர்சனம் செய்யும் சேனல் 4 நிறுவனம், இறுதி கட்ட போரில் இலங்கை ராணுவம் எவ்வாறு மிகக் கொடூரமான போரை தமிழ் மக்களின் மேல் கட்டவிழ்த்தது என்பதை ஆதாரத்துடன் விளக்கி உள்ளது.இதற்கு மேல் இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு என்பதை உறுதி செய்ய வேறு எந்த ஒரு சான்றும் தேவையில்லை. 

ஏற்கனவே வெளிவந்துள்ள பல காட்சிகள் இந்த ஆவணப் படத்திலும் இடம்பெற்றுள்ளது. புதிதாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டு இருந்தாலும் , இந்த ஆவணப் படத்தில் இசைப்ரியா உயிரோடு கொலைக் களத்தில் இருந்த காட்சி தான் முக்கியத்துவம் பெறுகிறது. மேலாடை இல்லாமல் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் இசை ப்ரியாவை சிங்கள ராணுவத்தினர் எழுப்பி இழுத்து வருகின்றனர். அவருக்கு வெள்ளை நிற ஆடை போர்த்தி விடுகின்றனர். மேலாடை இல்லாமல் ஒரு ராணுவ வீரன் இசைப் ப்ரியாவை இழுத்து வரும் போது தென்படுகிறான். இக்காணொளி எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஏன் இசைப் ப்ரியா மேலாடை இல்லாமல் களத்தில் அமர்ந்து இருக்கிறார்?    அப்போது தான் சிங்கள ராணுவம் அவரை கண்டு பிடித்ததா? இசைப்பிரியா மீட்கப் பட்ட பின் அதே சிங்கள ராணுவம் இசைப் ப்ரியாவை எவ்வாறு கொலை செய்தது? இசைப் ப்ரியா கொலைசெய்யப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவின் மேல்  அதே வெண்ணிற ஆடை காணப்படுகிறது. மேலும் முழுமையாக இசைப்பிரியா சிங்கள ராணுவத்தால் நிர்வாணப்படுத்தி வன்புணர்வு செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெளிவாக தெரிகிறது. இசைப் பிரியா படுகொலை  பாலச்சந்திரன் படுகொலையை போலவே மிகப் பெரிய போர் குற்ற சாட்சியாக உள்ளது. இதை சர்வதேச சமூகம் சாதரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய  விடயம் அல்ல. தொடர்ச்சியாக பல போர்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பட்ட பின்பும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவது மனித குல விரோத செயலாகும் .  

சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் மிகத் தெளிவாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல், இனப்படுகொலை, போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளன . பாதுகாக்கப் பட்ட பகுதி என்று சொல்லி மக்களை ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் வரவழைத்து அவர்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளது இலங்கை ராணுவம். இது சர்வதேச போர் முறைக்கு எதிரான செயலாகும். அப்பட்டமான போர் குற்றமாகும். இதை விசாரிக்கும் பொறுப்பு இந்தியாவிற்கும் , சர்வதேச நாடுகளுக்கும் உள்ளது . ஆனால் இதை செய்யாமல் , இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் நடக்கும் காமன்வெல்த மாநாட்டில் சர்வதேச நாடுகள் பங்கெடுப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல என்பதை இந்த ஆவணப்படம் உலகிற்கு உணர்த்து கிறது. இந்த படத்தை பார்த்த பின்பாவது பல நாடுகள் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. 
[vuukle-powerbar-top]

Recent Post