Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சமூக போராளிக்கு தண்டனை! பெரு நிறுவன தூதுவருக்கு பாரத  ரத்தினா! 
விருது வழங்குவதில் குறைந்த பட்ச நேர்மை வேண்டாமா ? 

கிரிக்கெட் ஆட்டம் என்பது இந்தியாவை பொருத்தவரை ஒரு சாபம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இளைஞர்களின் ஆற்றலை மழுங்கடித்து  ஒரு விதமான போதையில் தள்ளியது இந்த கிரிக்கெட் விளையாட்டு தான். இந்திய சமுதாயத்தில் ஒரு புற்றுநோய் போல் இந்த கிரிக்கெட் ஆட்டம் பரவியுள்ளது. இந்த ஆட்டத்தின் பின்புலத்தில் இந்திய , பன்னாட்டு பெரு நிறுவனங்களின் பங்கு கணிசமானது. இந்த கிரிக்கெட் போதையால் இந்தியா கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு தலைமுறையே தங்கள் திறமைகளை வெளிக்கொணர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. உலகில் இரண்டாம் அதிக மக்கள்  தொகை நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளும் பின்னுக்கு தள்ளப்பட்டது . மற்ற விளையாட்டு வீரர்களின் சாதனைகள் மதிக்கப்படவில்லை. 

உலகமே உற்று நோக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியா ஒவ்வொரு முறையும் சந்தி சிரிக்கும் படி பதக்கங்களை வாங்கி வந்தது. சீனா ருசியா அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கங்களை வாங்கிக் குவிக்க இந்தியா மட்டும் வேடிக்கை பார்த்து வந்தது. இந்த பாதாள வீழ்ச்சி கிரிக்கெட் என்னும் ஒற்றை காரணத்தை தவிர வேறு எதுவும் இல்லை. எனினும் இதை மறக்கடிக்க ஒவ்வொரு முறையும் ஆண்டுக்கு நூற்றுக்க்கான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி இந்திய நாட்டுப் பற்றை ஊட்டி இளைஞர்களை மயக்கத்தில் வைத்தது இந்த மட்டைப் பந்து விளையாட்டு. 

இந்த கிரிக்கெட் போட்டி போதையை மக்களிடம் தக்க வைக்க சில தூதுவர்கள் இந்த வியாபாரிகளுக்கு தேவைப்பட்டனர் . அப்படியான தூதுவரில் ஒருவர் தான் இந்த சச்சின் தெண்டுல்கர் . இந்த தூதுவரை பின்னின்று இயக்குவது ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் தனியார் நிறுவனங்கள். இவரை புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி அதன் மூலம் இந்திய இளைஞர்களை கிரிக்கெட் வட்டத்திற்குள் இருந்து நீங்காமல் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த வியாபாரிகளின் திட்டமாகும் . இத்திட்டத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 

இவர் ஒரு சமூக போராளியோ அல்லது ஒரு இனத்தின் மேன்மைக்காக போராடிய நபரோ அல்ல . காலம் முழுவதும் சுக வாழ்வை வாழ்ந்தவர் . பெரு நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பதையே தொழிலாக கொண்டவர். தன்னுடைய நேரத்தை வீண் செய்யாத சிறந்த வியாபாரி . இளைஞர்களை வேறு எந்த வகையான திறமைகளையும் வெளிபடுத்த முடியாதவாறு கிரிக்கெட் போதையை அவர்களிடம் ஊட்டியவர் . அப்படிப் பட்ட நபருக்கு ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்ற விளையாட்டு விருதை அரசு கொடுத்திருக்கலாம். ஆனால் இந்திய வல்லாதிக்க அரசு கிரிக்கெட் ஆட்டக் காரருக்கு கொடுத்ததோ பாரத ரத்தினா விருது. இந்த விருது கலை, இலக்கியம் , அறிவியல் , அரசியல் , சமூக மேம்பாட்டிற்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்.    

உண்மையில் இந்த விருதுக்கு உரியவர் இரோம் சர்மிளா என்னும் சமூக போராளி தான் . இந்திய ராணுவம் மணிப்பூர் மாநிலத்தில் செய்யும் பச்சை படுகொலைகள் , பாலியல் வன்புணர்வுகள் இவற்றை கண்டித்தும், இந்திய ராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைககளை சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கடந்த 13 ஆண்டுகளாக ஒரு வேளை ஆகாரம் உண்ணாமல் போராடி வருபவர்.  இந்திய ராணுவத்தின் ஒடுக்கு முறைகளை கண்டித்து அகிம்சை வழியில் பட்டினிப் போராட்டம் செய்து வருபவர் இரோம் சர்மிளா . இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசு அவருக்கு நோபல் கிடைக்கக் கூடாது என்று பின்னின்று திட்டமிட்டு தடுத்து வருகிறது.  மேலும் ராணுவ அராஜகங்கள் மணிப்பூரில் நின்ற பாடில்லை. ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை . கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ராணுவத்திற்கு தண்டனை வழங்கப்படவில்லை. ராணுவத்திற்கு வழங்கப்பட சிறப்புச் சட்டம் பின்வாங்கப் படவில்லை . அதனால் இரோம் சர்மிளாவின் உண்ணா நிலை போராட்டமும் நின்ற பாடில்லை . இன்னும் தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்த வண்ணமே உள்ளார் மணிப்பூர்ன் இரும்பு மங்கை இரோம் சர்மிளா. இவரை தொடர்ந்து அரசு தன்னுடைய காவலில் தடுத்து வைத்துள்ளது. மருத்துவ மனையிலும் காவல்துறை கண்காணிப்பில் தான் இவர் இருந்து வருகிறார் .  

இப்போது சொல்லுங்கள் யாருக்கு பாரத ரத்தினா விருது கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்? ஒரு பன்னாட்டு பெரு நிறுவன விளையாட்டு தூதுவருக்கா அல்லது சமூக நீதிக்காக இந்த நிமிடம் வரை தன்னிடைய குடும்ப வாழ்கையை தியாகம் செய்து போராடும் இரோம் சர்மிளாவிற்கா ? 
[vuukle-powerbar-top]

Recent Post