Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் மொழியை, தமிழ் வழிக் கல்வியை குழி தோண்டி புதைத்த திராவிடம் !!

திராவிடர்களின் வளர்ச்சி தமிழ் மொழியின் வீழ்ச்சி என்பதை நிரூபிக்கும் விதமாக இப்போது தமிழகமெங்கும் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதை சட்டமன்றத்தில் பெருமிதத்தோடு சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. ஜெயா தலைமையிலான அரசு ஏழை எளிய மக்கள் ஆங்கில வழிக் கல்வியின் பால்  ஈர்க்கப்பட்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளை நாடிவருவதை தடுக்கும் பொருட்டு அரசே ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதோடு ஆங்கில மொழியில் சிறப்பு பேச்சாற்றல் பெறுவதற்கு தனி வகுப்புகளும் நடத்தி வருகிறது. இது தான் அதிமுக அரசின் பெருமை என்று கூறியவுடன் சட்டமன்றத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து மேசையை தட்டினார்கள். சுமார் 6500 ஆங்கில வழிப் பள்ளிகளை அரசே இப்போது நடத்தி தமிழ்வழிக் கல்வியை நிரந்தரமாக மூட உள்ளது .

இத்திட்டத்தை குறை கூறும் திமுக  தமிழ் மொழிக் கல்விக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்  ஜெயா. மு.க.ஸ்டாலின் குடும்பத்தார் தனியார் கட்டண கொள்ளை மெட்ரிக் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அந்த பள்ளிகளின் பெயரில் கூட தமிழ் இல்லை . 'சன் ஷைன்'  மெட்ரிக் பள்ளி என்று பெயர் ஆங்கிலத்தில் வைத்துள்ளனர். மு.க. ஸ்டாலின் குடும்பம் நடத்தும் அந்த பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியா சொல்லிக் கொடுக்கப்படுகிறது ? மேலும் இந்த தனியார் பள்ளிகளில் கட்டாய இந்தி பாடமும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது , இது தான் திமுக குடும்பத்தின் சாதனை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயா. அடுத்த ஆண்டு முதல் தமிழக அரசு பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பை கொண்டுவர இப்போதே அடிக்கல் நாட்டியுள்ளார் ஜெயா.

தமிழினத்தின் அரசாக விளங்கும் தமிழக அரசு தாய் மொழிக் கல்வியை மேம்படுத்த என்னென்ன திட்டங்கள் நாம் வகுக்க வேண்டும் என்பதை சிந்திப்பதை விட்டுவிட்டு திமுக எப்படியெல்லாம் தமிழ் வழிக் கல்வியை அழித்து வருகிறது என்பதை சுட்டிக் காட்டி தானும் அவ்வாறே தமிழ் வழிக் கல்வியை அழிக்க விரும்புகிறேன் என்ற தொனியில் கருத்து கூறியுள்ளார் . தாய் மொழியில் படித்தோருக்கே அரசு வேலை என்பதை ஜெயா அரசு ஏன் அறிவிக்க முன்வரவில்லை . தமிழ்வழிக் கல்வியை உலகத் தரத்தில் உயர்த்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?  தமிழகத்தில் உள்ள அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை ஏன் நடைமுறைப் படுத்தவில்லை , தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை தமிழக முதல்வருக்கு?

எல்லோரும் தமிழ் வழியில் படிப்பதற்கு இந்த அரசு ஊக்கமளிக்காமல் , எல்லோரும் ஆங்கில வழியில் படிப்பதற்கு ஏன் தமிழக அரசு ஊக்கமளிக்கவேண்டும் ? தமிழக அரசு தமிழர்களுக்கான அரசா அல்லது ஆங்கில மக்களுக்கான அரசா ? தமிழ் மொழியை கட்டாய கல்வியாக்குவது தமிழக அரசு செய்யவேண்டுமா அல்லது அமெரிக்க அரசு செய்ய வேண்டுமா ? உலகிலேயே தமிழர்களுக்கான, தமிழ் மொழிக்கான  ஒரே அரசு தமிழக அரசு மட்டும் தான். அப்படி இருக்கும் போது தமிழ் வழிக் கல்வியை மேம்படுத்த தமிழக அரசைத் தவிர வேறு யார் முன்வர முடியும்?

திராவிடத் தந்தை பெரியார் கூறியது போல வீட்டிலும் வெளியிலும் தமிழர்கள் ஆங்கிலம் தான் பேச வேண்டும் . வீட்டு வேலைக்காரியிடம் கூட ஆங்கிலம் தான் பேச வேண்டும். சனியன் பிடித்த தமிழ் மொழியை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஏன் கட்டிக் கொண்டு அழுகிறீர்? ஆங்கிலம் தான் அறிவியல் மொழி என்று பெரியார் கூறியதை  இந்த இருபெரும் திராவிட அரசுகள் தங்கள் மூளையில் நன்றாக பதிவேற்றி விட்டனர் என்று தெரிகிறது . பெரியார் சொன்ன மற்ற கருத்துகளை இவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ ஆனால் அவர் சொன்ன மொழிக் கொள்கையை மட்டும் திமுக, அதிமுக அரசுகள் தீவிரமாக பின்பற்றி தமிழ்வழிக் கல்வியை முற்றிலுமாக தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டது. அத்தோடு நில்லாமல் தமிழக அரசு துறைகள் எதிலும் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக செயல்படுத்தியும் வருகிறது தமிழக அரசு.

தனியார் கட்டண கொள்ளை பள்ளிக் கூடங்களை புற்றீசல் போல வளர்த்து விட்டதும் , அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயமாக்கியதும் இந்த திராவிட அரசுகளின் சாதனையாகும். அனைவருக்கும் கட்டாய தமிழ்வழிக் கல்வி என்பதை உரிமைக் கொள்கையாக இவர்கள் அறிவிக்காதது ஏன் ? தாய் மொழிக்கல்வி உரிமையை இவர்கள் பறிப்பது ஏன் ? ஆங்கிலம் படித்தால் தான் அறிவு என்ற மயக்கத்தை தமிழகத்தில் இவர்களே விதைத்து விட்டு இப்போது பெற்றோர்கள் தாய் மொழிக் கல்வியை விரும்பவில்லை ஆகவே நாங்களே  ஆங்கில வழிக் கல்வியை உருவாக்குகிறோம் என்று சொல்வதற்கு இவர்களுக்கு வெட்கமாக இல்லையா ?

தமிழ்வழிக் கல்வியே தமிழர்களின் உரிமைக் கல்வி என்பதை தமிழக அரசு உணர வேண்டும் . தமிழ்வழியில் படித்தவர்களுக்குத் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற சட்டத்தை உடனே அரசு செயல்படுத்த வேண்டும் . தாய் மொழியில் கல்வி சிறக்க தனியாக ஆய்வுகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் . அந்த ஆய்வின் அடிப்படையில் உலகத் தரத்தில் தமிழ் வழிக் கல்வியை மக்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டும். கணினித் தமிழை எல்லா பள்ளிகளிலும் உட்புகுத்த வேண்டும் . அறிவியல் தமிழை வளர்த்தெடுக்க வேண்டும் . இதுவே தமிழையும் , தமிழர் அறிவையும் அடுத்த தலைமுறைக்கு வெற்றிகரமாக கொண்டுசெல்லும் வழியாகும் . திராவிடர்களின் தமிழ் மொழி விரோத போக்கை இத்துடன் முடிவுக்கு கொண்டுவர தமிழர்கள் நாம் போராட முன்வரவேண்டும். தமிழுக்கு சமாதி கட்டிய திராவிட அரசுகள் தமிழர்களுக்கும் சமாதி  கட்டும் முன்பு தமிழர்கள் விழிப்படைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.



[vuukle-powerbar-top]

Recent Post