Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தி தெரிந்தும் 'இந்தி' யர்களால் ஒடுக்கப்படும் வடகிழக்கு மாநிலத்தவர்கள்! சென்னையிலும்  ஆர்ப்பாட்டம் செய்தனர்!

இந்தி தெரியவில்லை என்றால்  எவரும் இந்தியாவில் வாழத்தகுதி இல்லை என்ற மாயையை இந்திய அரசும், 'இந்தி' யர்களும் கட்டமைத்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் வடகிழக்கு மாநிலத்தில் வாழும் மக்கள் கல்விக்காக , பிழைப்புக்காக 'இந்தி' யாவிற்கு சென்றால் அங்கு அவர்கள் இனத்தால் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். வடகிழக்கு மாநில மக்கள் இந்தி பேசுவார்கள் இந்தியர்களுடன் இந்தியில் சரளமாக உரையாடுவார்கள். எனினும் இன ரீதியாக அவர்களை இந்தியர்கள் பிரித்துத் தான் பார்க்கிறர்கள்.

வடகிழக்கு மக்கள் இனத்தால் சீன மக்களை ஒத்து இருக்கிறார்கள் . அவர்களை நாம் சீனர்கள் என்றே அடையாளம் காண்கிறோம். சிலர் அவர்களை சிங்கி என்றும் , சீனர் என்றும் , கூர்க்கா என்றும் பலவாறு அழைக்கிறோம். ஆனால் அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் . இந்திய குடியுரிமை பெற்ற மக்கள். அவர்கள் பிரச்சனைகள் குறித்து இந்தி ஊடகங்கள் பேச மறுக்கிறது. இவர்களுக்கு இந்தி தெரிந்தாலும் இவர்களை இந்தியர்களாக இந்தி மக்கள் ஏற்கவில்லை. இந்தி மக்கள் இவர்கள் மீது இனவெறியை காட்டுகிறார்கள். அண்மையில் நடத்த நிகழ்வு அதற்கு நல்லதொரு சான்றாகும்.

டெல்லியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் மகன் நிடோ தானியா இந்திய வெறியர்களால் அடித்தே கொல்லப்பட்டார். 18 வயதே நிரம்பிய இவரின் தலைமுடி குறித்து கேலி பேசிய போது ஏற்பட்ட தகராறில்  இவரை ஏழு இந்தி வெறியர்கள் கடுமையாக தாக்கி கொன்றுள்ளனர். இந்தி இனவெறியின் உச்சம் இது. தமிழக மக்களை மதராசி என்று அழைக்கும் இந்தியர்கள், இந்தி தெரியவில்லை என்றால் தமிழர்களை ஏளனமாகவும் , நம்மை அண்டிப்பிழைக்க வந்த அகதிகள் போலவும் பார்க்கும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இந்தியை திட்டமிட்டு அனைத்து மாநிலத்திலும் புகுத்திய இந்திய அரசு அம்மொழியை கட்டாயப்படுத்தி மக்களிடம் திணித்து வருகிறது. இந்தியில் தான் அனைவரும் பேச வேண்டும், உறவாட வேண்டும்  என்று நினைக்கிறது இந்திய அரசு. இந்தியர்களும் அவ்வாறே கருதுகின்றனர். தமிழர்களின் மொழி உரிமையை குழிதோண்டி புதைத்து விட்டு தமிழர்களை மொழியால் ஒடுக்கி வரும் 'இந்தி' வெறியர்கள்  இப்போது வடகிழக்கு மக்களை இனரீதியாக தாக்கி வருகிறது .

நிடோ தானியா கொல்லப்பட்ட செய்தி அறிந்த அனைத்து வடகிழக்கு மாநில மக்களும் இப்போது கொதித்து எழுந்துள்ளனர். 'எங்களை ஏன் ஒடுக்குகிறீர், நாங்களும் இந்தியர்கள் தானே'  என்ற கேள்வியை இந்தியர்களிடம் எழுப்பி உள்ளனர். ஒருவர் கொல்லப்பட்டவுடன் , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சென்னையிலும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இனவெறிக்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் போராட்டம் நடத்தியதால் தமிழ் மொழியிலும் பதாகைகள் ஏந்தி போராட்டம் செய்துள்ளனர்.

மொழி வெறிக்கு எதிராக தமிழர்கள் மொழி உரிமை சட்டத்தை வேண்டுவது போலவே இனவெறிக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர் வடகிழக்கு மாநில மக்கள். இவர்கள் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் இந்திய அரசை பொறுத்தவரை 'இந்தி'யர்களை தவிர வேறு யாரையும் தன்னுடைய குடிமக்களாக இந்தியா ஏற்காது என்பது கடந்த கால வரலாறு. 600 தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்ட பின்பும் , ஒட்டுமொத்த தமிழகமே போராட்டம் செய்த பிறகும் இலங்கை அரசுடன் உறவை பேணும் இந்திய அரசு எவ்வாறு இந்தி அல்லாத பிற மாநில மக்களுக்கு நீதி வழங்கும் என்ற கேள்வி எழுகிறது.

இப்போது இந்தியாவில் உள்ள பிற மாநில மக்கள் விழித்துக் கொண்டனர் . புதிய அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர் . இனத்தால் , மொழியால் , மதத்தால் , சாதியால் எவரையும் ஒடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் சட்டங்கள் தான் உண்மையில் காலத்தின் தேவையாக உள்ளது . வடகிழக்கு மக்களின் ஒற்றுமையை பாராட்டும் அதே வேளையில் அவர்களைப் போலவே மொழியாலும் , பண்பாட்டாலும் ஒடுக்கப்படும் தமிழர்கள் நாம் அவர்களுக்கு துணை நிற்போம் . நமக்கான உரிமைகளை போராடிப் பெறுவோம் . இந்தி மொழி வெறியை, இந்தி இன வெறியை இந்தியாவை விட்டே துரத்தி அடிப்போம். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்டம் வெல்லட்டும்.



[vuukle-powerbar-top]

Recent Post