Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'கேரளா நாட்டிளம் பெண்களுடனே' - இது தமிழர்கள் தமிழினத்தை இழிவு செய்து எடுக்கப்பட்ட படம் !

'இனம்' படத்தை அனைவரும் கண்டித்தோம் . காரணம் இனம் படத்தில் ஈழத் தமிழர்களை , விடுதலைப் புலிகளை , தமிழீழ போராட்டத்தை கொச்சைப் படுத்துவதாக இருந்தது. அது நேரடியாகக் காட்டப்பட்டது . அதனால் நாமும் நேரடியாக அப்படத்திற்கு எதிர்வினை ஆற்றினோம். ஆனால் பல தமிழ்ப் படங்கள் தமிழர்களையும் , தமிழ் மொழியையும் மறைமுகமாக இழிவு செய்கிறது . இவற்றை நாம் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறோம்.

அப்படியான ஒரு படம் தான் 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' . வேற்றின மக்கள் தமிழர்களை இழிவு செய்வது என்பது வேறு. ஆனால் தமிழர்களே தமிழினத்தை இழிவு செய்வது என்பது அவமானம்.  இப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக வரும் முனைவர் ஞானசம்பந்தன் , தன்னுடைய மகனிடம் கேரள பெண்ணைத் தான் நீ திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதி மொழி வாங்குகிறார். அதற்கான அவர் சொல்லும் காரணம் நம்மை முகம் சுழிக்க வைக்கிறது. "பூவுலகத்தில் கடவுளின் தேசம் கேரளா. அங்குள்ள பெண்கள் எல்லாம் தேவகுமாரிகள் . இரம்பா , ஊர்வசி , மேனகா போன்ற தேவகுமாரிகள் வசிக்கும் நாடு கேரளா". அதனால் ஒரு கேரளாவில் உள்ள ஒரு தேவகுமாரியை மணமுடித்து ஒரு தேவகுமாரனாக தன் மகன் மாற வேண்டும் என்று கூறுகிறார் கதாநாயகனின் தந்தை.

அத்தோடு விடுவதில்லை , ஒரு சிறுவனிடம் மலையாள நடிகைகளின் படங்களை காட்டி , இப்படித் தான் கேரளப் பெண்கள் எல்லாம் அழகாக இருப்பார்கள் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார் ஞானசம்பந்தன்.  இதன் மூலம் தமிழ்ப் பெண்களை திருமணம் செய்யக்  கூடாது திட்டவட்டமாக சொல்கிறார் . இது எவ்வளவு பெரிய இனத்திற்கு எதிரான கருத்தியல். மேலும் ஒரு சிறுவனிடம் இவ்வாறு ஒரு தந்தை பேசுவது முறையா ?

அதுமட்டுல்ல , மேலும் ஒரு தவறு செய்துள்ளார் இயக்குனர் எஸ். எஸ் . குமரன். ஒரு காட்சியில் ஒரு கேரள நாட்டு சிறுமியிடம் உனக்கு தமிழ் தெரியுமா எனக் கேட்கிறார். அந்த சிறுமி தனக்கு தமிழ் , மலையாளம், ஆங்கிலம் , இந்தி என நான்கு மொழிகள் தெரியும் என்கிறாள். உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என நாயகனை திருப்பிக் கேட்கிறாள் அந்த சிறுமி . அதற்கு நாயகன் மிகவும்  பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும் என்கிறார் . உடனே அந்த சிறுமி , இது தான் தமிழ்நாட்டிற்கு இருக்கும் பிரச்சனை . இந்த நாட்டின் தேசிய மொழி கூடத் தெரியாதவர்கள் தமிழர்கள் என்கிறாள்.

இது இயக்குனரின் ஒரு நேரடியான தாக்குதல் ஆகும். முதலில் இந்திய நாட்டிற்கு என்று ஒரு தேசிய மொழியே கிடையாது . இதை இயக்குனர் அறிந்திருக்கவில்லை . மேலும் தமிழகம் இந்தி கற்கவில்லை என்பதால் நாம் இந்தியாவில் பின்தங்கிய மாநிலமாக போய்விட்டோமா ? தேசிய உற்பத்தியில் , தொழில் நுட்பத்தில் , பொருளாதாரத்தில் தமிழகம் கேரளாவை விட வளர்ந்து தானே உள்ளது . தமிழகத்தை நம்பித் தான் மலையாளிகள் படையெடுத்து  வருகிறார்கள். சரி தமிழர்கள் வேறு மொழிகள் கற்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம் , இந்தி பேசும் மக்கள் எத்தனை மொழிகளை கற்கிறார்கள் ? அவர்கள் ஏன் ஒரு மொழியை மட்டுமே கற்கிறார்கள். அவர்கள் ஏன் தென்னிந்தியா வந்து பாணிப் பூரி விற்கிறார்கள். இந்தி மட்டும் தெரிந்திருந்து அங்கேயே செல்வந்தர்களாக அவர்கள் இருக்கலாமே?

இப்படியெல்லாம் சிந்திக்கத் தெரியாமல், மொழி வரலாறு தெரியாமல் தமிழர்களை திட்டமிட்டு இழிவு  செய்துள்ளார் இயக்குனர் . முதலில் அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமைகள், சம தகுதி இந்திய  அரசு கொடுக்கட்டும் , பிறகு பாருங்கள் இந்தியாவில் எந்த மொழி சிறப்பாக வளர்கிறது என்று . தமிழ் மொழி இந்தியாவில் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழுக்கு சம தகுதி அளிக்காமல் , தமிழ் படித்தால் அது ஒன்றுக்கும் உதவாது என்று தமிழர்களே தமிழர்களிடம் சொல்ல வைத்தனர் 'இந்தி'யர்கள்.

இப்படியான தவறான கருத்தை மக்களிடம் பரப்பிய இயக்குனர் எஸ். எஸ். குமரனுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. முடிந்தால் இந்த இயக்குனரை நேரில் சந்தித்தும் நம் கண்டனத்தை தெரிவிப்போம். அதை விடக் கொடுமை தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தன் இப்படியான ஒரு பாத்திரத்தில் நடிக்க சம்மதித்தது. வைரமுத்து வேறு பாடல்களை இப்படத்திற்கு இயற்றி உள்ளார். இப்படத்தில் நடித்த தமிழர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காசுக்காக மட்டும் நடிப்பது வேதனை அளிக்கிறது. இனியாவது தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும் . எந்தப் படத்திலும் தமிழையும் தமிழர்களையும்  இழிவு செய்யும் காட்சிகள் இடம்பெறக் கூடாது. அதை தமிழர்கள் நாம் தான் உறுதி செய்ய வேண்டும் .
[vuukle-powerbar-top]

Recent Post