Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று உலகத் தமிழ் அமைப்பின் 5 வது  வட்டமேசை மாநாடு சென்னையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் என்ற விடுதியில் சிறப்பாக நடைபெற்றது .

" தமிழ் சமூகத்தின் சவால்களும் - அதை எதிர் கொள்வதற்க்கான தாய் தமிழகத்தின் யுத்திகளும் " என்ற தலைப்பில் பல்வேறு விடயங்கள் விரிவாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.  உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் திரு செழியன் அவர்கள் இம்மாநாட்டை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.  இந்த மாநாட்டிற்கு தோழர் தியாகு தலைமை தாங்கி அவையை வழிநடத்தினார் . மாணவர்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர் .

வளமான தமிழ் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்று திரு ஒளிவண்ணன் அவர்களும் , மலேசியாவை சேர்ந்த சரவணன் ததோ சங்கரலிங்கம் இவர்களும் சிறப்பாக பேசினார்கள் . தமிழர்கள் ஒரு குழுவாக இணைந்து பொருளாதார வலிமையை பெற வேண்டும் எனவும் யூதர்களைப் போல் ஒற்றுமையுடனும் திறமையுடனும் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் உள்ள தமிழீழ அகதிகள் நிலையும் அவர்களுக்காக தாய் தமிழக மக்கள் செய்ய வேண்டிய கடமையும் குறித்து அருட்தந்தை குழந்தை அவர்கள் விரிவாக பேசினார் . மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் இந்திய அரசுடன் நம் ராஜதந்திர நகர்வின் அவசியம் குறித்து பேசினார் .

இறுதியாக மலேசிய தமிழ் அறிவாரியம் தலைவர் திரு பசுபதி அவர்கள் மலேசியாவில் தமிழ் வழிக் கல்வியின் தரம் , வளர்ச்சி மற்றும் தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து காணொளி காட்சி மூலமாக விளக்கினார் .  மலேசியாவில் உள்ள பள்ளிகளில் உலகத் தரத்தில் கட்டமைப்புகள் உருவாக்கி உள்ளது . அதனால் நடுத்தர மக்கள் , மேல் நடுத்தர மக்கள் அனைவரும் தமிழ் வழியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருவதாக கூறினார். அவரிடம் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியின் நிலை குறித்தும் , தமிழர்கள் பின்பற்ற வேண்டிய தமிழ்வழிக் கல்வி குறித்தும் ஒரு நேர்காணல் நாம் எடுத்தோம் .

வரும் தமிழ்த் தலைமுறை கல்வியில் , வணிகத்தில் , அரசியலில் மற்றும் பல்வேறு தளங்களில் எவ்வாறு சிறந்து விளங்க வேண்டும் என்பதை இந்த மாநாடு விளக்கியது. இது போன்ற தமிழ் சமூகத்தின் வளர்ச்சி குறித்த மாநாடுகள்  அவ்வப்போது நடக்க வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக அமைந்தது .  மாநாட்டின் முடிவில் மே 5 ஆம் தேதி மலேசியாவில் மீண்டும் ஒரு உலகத் தமிழ் அமைப்பின் வட்டமேசை மாநாடு நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது . மேலும் தமிழர் பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் 5 முக்கிய தீர்மானங்களும் இயற்றப்பட்டது. 
[vuukle-powerbar-top]

Recent Post