Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

 திருவள்ளுவர் முன்னிலையில் திருக்குறள் வழித் திருணம் !

அது ஒரு வித்தியாசமான திருமணம். அந்தத் திருமணத்தில் புரோகிதர் இல்லை. சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்படவில்லை. வழக்கமான திருமணச் சடங்குகள் என எதுவும் இல்லை. ஆனால் அது சீர்திருத்தத் திருமணமும் இல்லை. திருக்குறள்தான் அந்தத் திருமணத்தின் மந்திரம். திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர் திருவள்ளுவர். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? தேனி அருகேயுள்ள நாகலாபுரத்தில் நடந்த குறள்வழித் திருமணத்தில்தான் மேற்கண்ட ஆச்சரியங்கள்.

பொதுவாக, இந்தக் கிராமத்தின் பெரும்பாலான திருமணங்கள் குறள்வழித் திருமணங்களாகவே நடந்து வருகின்றன. வழக்கமான எந்தச் சடங்குகளும் இல்லாமல் திருக்குறள் கருத்துக்களை மட்டும் பிரதானப்படுத்தி இந்தத் திருமணங்கள் நடத்தப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் கட்டுண்டு கிடந்த கிராமத்தினரிடையே இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததின் பின்னணியில் இருப்பது நாகலாபுரத்தில் இயங்கி வரும் திருக்குறள் மன்றத்தின் 23 வருட உழைப்பு.

25 ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லாக் கிராமங்களையும் போல் ஒரு சராசரியான கிராமம்தான் நாகலாபுரம். என்னுடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகள். என் அப்பா இலவசமாக மூலிகை வைத்தியம் செய்பவர். மூலிகை பறிப்பதற்காக காட்டுக்குச் செல்லும்போது நல்ல தங்காள், புராணக் கதைகள் போன்றவற்றை அப்பா சொல்லிக்கொண்டே வருவார். அந்தக் கதைகளிலிருந்து தமிழ் மேல் இயல்பான தாக்கம் ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, நூலகத்தில் தமிழ்வாணனும், சாண்டில்யனும், பாரதியும், பாரதிதாசனும் எனக்கு அறிமுகமாகி என் தமிழ் ஆர்வத்திற்கு மேலும் தீனி போட்டனர். தமிழ் மேல் ஆர்வம் இயல்பாக வளர்ந்தாலும்,அதை நெறிப்படுத்தவோ, தமிழை முழுமையாக கற்றுத் தேறவோ எனக்கு வழியில்லை.

இந்தச் சூழலில் எங்கள் கிராமத்தில் இருந்த சிவசங்கரன் என்பவர் 1984-ஆம் ஆண்டு தமிழ்க்குடிமகன் தலைமையில் திருவள்ளுவர் மன்றம் ஒன்றைத் தொடங்கினார். சிவசங்கரனார் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை. ஆனால், யாரும் கற்பிக்காமல், தானாகவே முயன்று சங்க இலக்கியங்களிலும் இலக்கணத்திலும் கற்றுத் தேர்ந்தவர். தன் உயிர் மூச்சான தமிழை திருக்குறள் மூலம் நாகலாபுரத்தில் பரப்ப வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த முயற்சியே திருக்குறள் மன்றம். ஆனால், அந்த மன்றம் சில காரணங்களினால் அந்த வருடமே நின்று போனது.

வீட்டில் பண வசதி இல்லாததால் 12-ஆம் வகுப்பிற்கு மேல் என்னால் படிக்க இயலவில்லை. எல்லா விடலைப் பருவத்தினரைப் போலவே தெரு முனையில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பது எங்கள் வாடிக்கை. அப்போது அங்குள்ள மிதிவண்டி நிலையத்தில் வந்து உட்காரும் சிவசங்கரனாரின் திருக்குறள் பேச்சால் ஈர்க்கப்பட்டேன். எங்கள் விடலைப் பருவத்திற்கேற்ப இன்பத்துப் பாலில் உள்ள காதல் சார்ந்த குறள்களை எடுத்துக் கூறி எங்களை திருக்குறள் வசப்படுத்தினார். இதனால் சிவசங்கரனாரைப் போலவே தமிழை ஊர் மக்களிடம் பரப்ப வேண்டும் என்கிற எண்ணம் எனக்கும் மேலோங்கியது.

எனவே நின்று போன திருக்குறள் மன்றத்தை மீள் கட்டமைக்க முயற்சி செய்து, அந்த முயற்சி 97-ஆம் ஆண்டு நடந்த என் குறள்வழித் திருமணம் மூலம் சாத்தியமானது. அன்று முதல் தொடந்து திருக்குறள் மன்றத்தின் மூலம் தமிழையும், குறள்வழித் திருமணத்தையும் மக்களிடையே பரப்பி வருகிறோம்" என்கிறார் திருக்குறள் மன்றத்தின் பொறுப்பாளரான இளங்குமரன். தற்போது தேனியில் தையலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் இயற்பெயர் பாலசுப்பிரமணி. தமிழ் மேல் உள்ள பற்றால் தன் பெயரை இளங்குமரன் என மாற்றிக்கொண்டுள்ளார். ‘தமிழ் என் போர் வாள்’ என்கிற நூலையும் எழுதியுள்ளார்.

97-ஆம் ஆண்டு நடந்த இளங்குமரனின் குறள்வழித் திருமணம் நாகலாபுர மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுவரை திருமணச் சடங்குகள் எதற்கு நடத்தப்படுகின்றன எனத் தெரியாமலேயே அதைப் பின்பற்றிய மக்கள், குறள்வழித் திருமணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து, தங்களுடைய திருமணத்தையும் குறள்வழித் திருமணமாகவே நடத்த ஆர்வம் காட்டியுள்ளனர்.

குறள்வழித் திருமணம் எப்படி நடக்கிறது? அதையும் அவரே விளக்குகிறார்:

குறள்வழித் திருமணம், மண் வழிபாடு, திருவள்ளுவர் வழிபாடு, சான்றோர் வழிபாடு, பெற்றோர் வழிபாடுஆகிய பகுதிகளைக் கொண்டது. மண்ணிலிருந்துதான் எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை மண்தான். எனவே மண் குறித்த சில விளங்கங்கள் மேடையில் கூறப்படும். அதன்பின் மண்ணிற்கு மலர் தூவி மணமக்கள் வழிபடுவார்கள்.

திருக்குறள் மட்டுமே எந்தச் சமயமும் சாராத ஒரு வாழ்வியல் இலக்கியம். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்கிற வாழ்வியலை கற்றுத்தரும் ஒரே நூல் திருக்குறள் மட்டுமே. எனவே திருவள்ளுவரைப் போற்றும் விதத்தில் திருக்குறளில் உள்ள வாழ்வியல் கருத்துக்கள் மணமேடையில் கூறப்படும். பின்னர் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர் தூவி, மணமக்கள் விழுந்து வணங்குவர். இதுவே திருவள்ளுவர் வழிபாடு.

திருமணத்திற்கு இருதரப்பிலும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வந்திருப்பர். அவர்களை நோக்கி மணமக்கள், ‘அறிந்தும் அறியாமலும் நாங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் சான்றோர்கள் பொருத்தருள வேண்டும்’ என வேண்டிக்கொள்வர். கூட்டத்தார்களும் மனதார, ‘மணமக்கள் வாழ்க! வாழ்க!!’ என முழங்குவர். பின்னர் பெற்றோர் என்றால் யார்? பெற்றோரின் பெருமை, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்த கருத்துக்கள் மேடையில் கூறப்படும். ‘பெற்றோர் வாழ்க! பெருந்தகை வாழ்க!!’ என மணமக்கள் பெற்றோர் காலில் விழுந்து வணங்க... பெற்றோர், ‘உயிரே வாழ்க! உயர்வே வாழ்க!!’ என கூறி வாழ்த்துவர். அதன் பின் திருக்குறள்கள் முழங்க,பெண்கள் குலவையிட... மங்கள் நாண் பூட்டப்படும். மணமக்களை வாழ்த்த அரிசி பயன்படுத்தப்படுவது கிடையாது. எந்தத் தமிழ் இலக்கியங்களிலும் மணமக்களை வாழ்த்த அரிசி பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்புகள் இல்லை. எனவே பூக்கள் மட்டுமே வாழ்த்தப் பயன்படுத்தப்படும்.

தாலி கட்டி முடித்ததும் மணமக்கள் மேடையிலிருந்து கீழிறங்கிச் சென்று குழுமியிருக்கும் ஒவ்வொரு உற்றார், உறவினரையும் தனித்தனியாகச் சந்தித்து வாழ்த்துகள் பெறுவர். இதனால் அனைவரின் மனம் நிறைந்த வாழ்த்துகளும் மணமக்களுக்குக் கிடைக்கும். அதன் பின்னர் ஒரு சிறிய விளக்கு இருளை விரட்டி ஒளி பரப்புவது போல, மணமக்கள் குடும்பத்தில் ஒளி பரப்ப வேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு மணமக்கள் குத்துவிளக்கு ஏற்றுவர். அத்துடன் குறள்வழித் திருமணம் நிறைவு பெறும்" என்கிறார்.

இதுவரை 104 குறள்வழித் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் இளங்குமரன். நாகலாபுரம் மட்டுமின்றி, மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் குறள்வழித் திருமணத்திற்காக இவரை அணுகி வருகின்றனர்.

நண்பர் ஒருவர் மூலம் தேனி பகுதியில் குறள்வழித் திருமணங்கள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். இயல்பிலேயே எனக்கு தமிழ் மேல் ஆர்வம் உள்ளதால், என் திருமணமும் குறள் வழியில் நடக்க வேண்டும் என முடிவு செய்தேன். என் உறவினர்களிடையே குறள்வழித் திருமணத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், திருமண நடைமுறைகளைப் பார்த்த பின்பு நல்ல வரவேற்பு இருந்தது. திருமணம் முடிந்ததும் எங்கள் கைகளால் ஆறு மரக்கன்றுகளை நட்டதோடு மட்டுமின்றி, வந்திருந்தவர்களுக்கு 600 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினோம். நான் நினைத்ததை விட மனதிற்கு நிறைவாக நடந்து முடிந்தது என் திருமணம்" என மகிழ்ச்சியாகக் கூறினார் மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார்.

குறள்வழித் திருமணங்கள் தவிர, திருக்குறள் மன்றத்தின் மூலம் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றை நடத்தி திருக்குறளை இளைஞர்களிடையே பரப்பி வருகிறது திருக்குறள் மன்றம். இதனால், இக்கிராம மாணவர்களிடையே தமிழார்வம் வளர்ந்து, வெளி இடங்களில் நடக்கும் போட்டிகளிலும் பரிசுகளைக் குவித்து வருகின்றனர். மன்றத்தின் முயற்சியால் நாகலாபுரத்தில் 70 சதவிகிதம் குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பெற்றோர் இவரை அணுகி, தூய தமிழ்ப் பெயர்களைக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர் என்பது முத்தாய்ப்பான செய்தி. இவர் மூலம் கல்லூரி மாணவர்களுக்காக இலவசமாக தமிழ் இலக்கண வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் இக்கிராம இளைஞர்கள் மரபுக் கவிதைகளை எளிதாக எழுதும் வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த மன்றத்தில் தற்போது வரை 35 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 16-32 வயதிற்குட்பட்டவர்கள். இளைஞர்களுக்கு வழி விடும் வகையில் மன்றத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி, தற்போது ஆலோசகராக மட்டுமே செயல்பட்டு வருகிறார் இளங்குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

செலவே இல்லாமல் திருக்குறள் குறித்த கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்க குறள்வழித் திருமணங்கள் மிக உதவியாக உள்ளன. ஆரியர்கள் கொண்டு வந்த திருமண முறையைத்தான் நாம் பின்பற்றி வருகிறோம். அதில் நடக்கும் சடங்குகளுக்கு என்ன அர்த்தம் என்பது கூட நமக்குத் தெரிவதில்லை. எனவே இனி வரும் காலங்களில் தமிழர்களின் அடையாளமான குறள்வழித் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும். என் வாழ்நாளில் 10,000 குறள்வழித் திருமணங்களையாவது நடத்திவிட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்கிறேன். தமிழைக் காப்பற்ற நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றி அடையுமா? தோல்வி அடையுமா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், எங்கள் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. நண்பர்கள் யாரேனும் குறள்வழித் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் என்னை அழைக்கலாம்" என்கிறார் இளங்குமரன்.

தொடர்புக்கு: 98423 70792

[vuukle-powerbar-top]

Recent Post