Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் வரலாறு - குழப்பும் ஆய்வுகள் -  எட்டப்பட வேண்டிய தீர்வுகள் !

தமிழர் என்பவர்கள் யார். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? கிடைப்பதற்கரிய    அறிவியலை , இலக்கணங்களை , மருத்துவ குறிப்புகளை, அரசுகளை எப்படி இவர்களால் உருவாக்க முடிந்தது?  உலகம் போற்றும் வள்ளுவம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொது நெறிக் கொள்கைக்கு சொந்தகாரர்கள் இந்த தமிழர்கள். சங்கம் வைத்து தமிழை மட்டுமே இவர்கள் வளர்க்கவில்லை. தமிழர் அரசு , தமிழர் கட்டமைப்பு , தமிழர் இலக்கியங்கள் , தமிழர் வாழ்வியல், தமிழர் அறம், பண்பாட்டு அடையாளங்கள் என பலவற்றையும் பல ஆயிரம் அறிஞர் பெருமக்களை வைத்து தமிழர்கள் உருவாக்கினர். இருந்தும் தமிழர்களுக்கு நிலையான வரலாறு இல்லை என்பது வேதனை. வட இந்திய  மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வரலாறு கூட தமிழர்களுக்கு கிடைக்கவில்லை . நம் வரலாறை ஆரிய வேதங்களிலும், கிரேக்க புராணங்கள் , சுமேரிய இலக்கியங்கள் , விவிலியத்திலும், இந்து புராணத்திலும் தேட வேண்டி உள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் எகிப்தில் கட்டியது போல பிரமிடுகள் கட்டவில்லை , சீனர்கள் கட்டியது போல பெருஞ்சுவர் கட்டவில்லை , சுமேரிய மக்களை போல களிமண் சுவடுகளை விட்டுச் செல்லவில்லை . இப்படி எதுவும் செய்யாத தமிழினம் எப்படி ஒரு தொன்மையான இனமாக இருக்க முடியும் ? நமக்கு கிடைக்கப்பெற்ற இலக்கியங்கள் கூட 2500 ஆண்டுகளை தாண்ட வில்லை. 3000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் இங்கு பெரிய நகரத்தை அமைத்து வாழ்ந்ததாக சான்றுகளும் இல்லை. பின்பு எவ்வாறு தமிழர்களை மூத்த குடி என்று அறுதியிட்டு கூறுவது ?

இப்படி தமிழர்களின் வரலாற்றை உறுதியுடன் எடுத்துரைக்கும் சான்றுகள் நமக்கு கிடைக்கவில்லை . ஆதிச்ச நல்லூரில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் தான் நமக்கான ஒரே தொன்மை சான்றாக விளங்குகின்றது . அதுவும் கிமு 1000 ஆண்டுகளை தாண்டவில்லை . அப்போது அதற்கு முன்பு தமிழர்கள் இங்கு தமிழகத்தில் வாழவில்லையா . ஒரு அறிவு சார் சமூகம் இங்கு எப்படி வந்தது அல்லது எப்படி அழிந்தது என்ற கேள்வி இன்னும் தமிழர்களின் நடுவே இருந்து கொண்டே தான் உள்ளது .

அண்மையில் திரு பிரபாகரன் எழுதிய ' குமரிக் கண்டமா சுமேரியமா ?' என்ற நூலை படித்தேன் . அதில் தமிழர்கள் குமரிக் கண்டத்தில் வெகு சிறப்பாக 6000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தார்கள் என்று கூறியுள்ளார். அங்கு ஆழிப் பேரலையின் தாக்கத்தில் இருந்து தப்பித்து தமிழகம் வந்தார்கள் என்று எழுதி உள்ளார். ஆனால் அவர் சொல்லும் குமரிக் கண்டம் தமிழகத்திற்கு தெற்கே இல்லை . மாறாக இப்போது உள்ள ஈரான் பகுதியில் இருந்த சுமேரிய நாகரீகத்தை தான் தமிழர் வாழ்ந்த குமரி கண்டம் என்று  உறுதியாக கூறுகிறார். அங்கு ஓடுகின்ற யுப்ரடஸ் நதி தான் பக்றுளி ஆறு  என்கிறார் . பின்பு சுமேரியா நாகரீகம் அழிவை சந்தித்த போது அங்கிருந்த அனைத்து கலைகளையும் , மொழியையும் , பண்பாட்டையும்  கடல்வழியே சுமந்து கொண்டு தமிழகம் வந்தார்கள் தமிழர்கள் என்கிறார் பிரபாகரன் .

ஆனால் பாவாணரின் கருத்து முற்றுலும் மாறுபட்டதாக உள்ளது . அவர் கூறும் குமரிக்கண்டம் , தமிழகத்தின் தெற்கே உள்ள கடலில் மூழ்கிய நிலப்பகுதியாகும் . இந்தப் பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் தான் தமிழர்கள் என்கிறார். அறிவர் குணாவும், தமிழர்கள் வாணிபம் செய்ய தமிழகத்தில் இருந்து சுமேரியாவிற்கும் , கிரேக்கத்திற்கு சென்றார்கள் . அங்கு சென்று தமிழர் நாகரீகத்தை வளர்த்தார்கள் என்கிறார் . இன்னும் சிலர் தமிழர்கள் ஆப்ரிக்காவில் இருந்து நடந்தே தமிழகம் வந்து சேர்ந்தனர் . மேலும் இங்கிருந்து நகர்ந்து ஆஸ்திரேலியா சென்றனர் என்கிறார்கள். இன்னும் சிலர் தமிழர்கள் எங்கிருந்தும் வரவில்லை , அவர்கள் எப்போதும் இங்கேயே தான் இருந்து வந்துள்ளனர் என்கிறார்கள். அப்படி தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் இங்கேயே தான் இருந்து வந்துள்ளனர் என்றால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கட்டிய ஊர்கள் , மாளிகைகள் , கட்டடங்கள் எங்கே போயின ? வரலாற்று சான்றுகள் எங்கே போயின ?

தற்போது இந்திய அரசின்  கட்டுப்பாட்டில் தமிழகம் இருப்பதால்  நம்மால் பெரிய ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை . வேத நாகரீகத்திற்கு முன்பு தமிழர்களின் நாகரீகம் செழித்து இருந்துள்ளது என்பதை இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை . அதனால் என்னதான் தொல்பொருள் ஆய்வுகள் செய்தாலும் , நம் ஆய்வுகள் அனைத்தும் இந்திய அரசால் அங்கீகரிக்கப் படுவதில்லை. உலக அரங்கில் தமிழர் நாகீரத்தின் தொன்மையை நம்மால் நிரூபிக்க முடியவில்லை. மேலும் கடலில் மூழ்கியுள்ள பூம்புகார் நகரத்தை பற்றியும் தெளிவாக அறிய முடியவில்லை. கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ள பெருமளவில் பணம் தேவைப்படுகிறது . அதனால் அந்த செலவை ஏற்க இந்திய அரசும் தயாராக இல்லை . தமிழக அரசும் தயாராக இல்லை . தமிழக அரசும் தமிழர்களின் கீழ் இயங்காத காரணத்தால் தமிழர் வரலாற்றை முனைப்புடன் ஆய்வு செய்ய இங்கு எந்த முன்னெடுப்பும் இல்லை. இப்படியான  நிலையில் தான் தமிழர்களின் வரலாறு பெரும் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் , சேர , சோழ , பாண்டியர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பதை இதுவரை யாரும் அறுதியிட்டு கூற முடியவில்லை . வரும் காலத்தில் தமிழர்கள் அரசியல் பலத்தை பெருக்கிக் கொண்டு இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கான அனுமதியை பெற்று உலகத்திற்கு உண்மையான ஆய்வுகளை வெளிக் கொண்டு வந்து தமிழர்களுக்கு பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் . தமிழர் இழந்த பெருமைமிக்க வரலாற்று அடையாளத்தை மீட்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழர் வரலாற்றை மீண்டும் பல ஆய்வுகள் செய்து முறைப்படி திருத்தி எழுத வேண்டும்  அதை ஒவ்வொரு தமிழரும் படிக்கும்படி செய்ய வேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post