Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன நலமா ? தொகுதி நலமா ? யாரை பாராளுமன்ற உறுப்பினராக  நாம் தேர்வு செய்ய வேண்டும் ?

பாராளுமன்ற தேர்தலில் நல்ல செயல்படக்கூடிய ஒரு நபரை நாம் செய்ய வேண்டும் எனவும் , தொகுதி மேம்பாட்டிற்காக  கடினமாக  உழைப்பவர்களை , மக்கள் பணத்தை சுயநலத்திற்கு பயன்படுத்தாதவர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும் என பலரும் கருதுகின்றனர். இப்படியாக தொகுதிக்காக கண்டினமாக உழைக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். இவர்களை நாம் தேர்வு செய்யாமல் பின் எதற்கு நாம் திராவிடக் கட்சி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை எதிர்க்க வேண்டும் ? இவர்களையே தேர்வு செய்து விட்டுப் போகலாமே ? தமிழர்களை தொடர்ந்து இழிவு செய்து வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரிணி தன்னுடைய தொகுதிக்கு பல நன்மைகளை செய்துள்ளார் . தொகுதியில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது . ஒருவேளை அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்திருந்தால் அவரை நாம் ஆதரிக்கலாமா ?  சரி தமிழர்கள் அதிகமாக அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியை நாம் ஆதரிக்கலாமா ?

இப்போது தமிழர்களுக்கு பிரச்சனை என்பது நம் தொகுதியை சார்ந்தது மட்டுமல்ல , ஒட்டுமொத்த தமிழகம் சார்ந்தாக உள்ளது . இதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். வீட்டின் அருகாமையில் உள்ள குப்பை , சாக்கடை , நூலகம் , சாலை இவைகள் மட்டும் தான் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளா ? இவை தீர்த்து வைக்கப்பட்டால் தமிழர்களுக்கான எல்லா பிரச்னையும் தீர்ந்து விடுமா ? அடிப்படை பிரச்சனைகளை ஒரு தொகுதி பா.ம உறுப்பினர் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . மக்களின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியது தான். ஆனால் இதையெல்லாம் கடந்து தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டதை தமிழர்கள் உணர வேண்டும் .

இங்கு தொகுதிப் பிரச்சனைகளுக்கு மேல் தமிழினம் சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் உள்ளன . இவைகள் இந்திய அரசு எடுக்கம் தவறான கொள்கை முடிவுகளால் நமக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் ஆகும் . இவைகள் தீர்க்கப்பட வேண்டும் எனில் பாராளுமன்றத்தில் நம் பிரச்சனைகள் பற்றி விவாதிக்க உண்மையான தமிழினப் பற்றாளர்கள் தேவைப்படுகின்றனர் . தொகுதியில் ஏற்படும் பிரச்சனைகளை ஒரு மலையாளியோ , ஒரு தெலுங்கரோ கூட தீர்த்து வைத்து விடலாம் .   ஆனால் இனம் சார்ந்த பிரச்னையை ஒரு இனமான தமிழரால் தான் தீர்த்து வைக்கபடமுடியும். எடுத்துக் காட்டாக தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் , தமிழ் நீதிமன்ற மொழியாக வேண்டும் , தமிழகத்தில் விவசாய நிலங்களை வெளிமாநில மக்கள் வாங்கக் கூடாது, கெயில் குழாய்கள் தமிழக நிலத்தில் பதிக்கக் கூடாது போன்ற  கோரிக்கையை யார் முன்வைக்க இயலும் , யார் இதற்கான முன்னெடுப்பை எடுப்பார்கள்? ஒரு மலையாளி , தெலுங்கு பாராளுமன்ற உறுப்பினர் இந்த கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்றத்தில் போராடுவாரா ? நிச்சயம் மாட்டார் .

அதனால் நாம் தேர்தெடுக்கும் வேட்பாளர்கள் ஒட்டுமொத்த இனம் சார்ந்த சிக்கலை தீர்க்கும் தமிழ்த் தேசிய சிந்தனையாளராக,  தொலைநோக்கு பார்வை உடையவராக இருக்க வேண்டும் . அதனால் இவர்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்கப் போவதில்லை. ஒட்டுமொத்த தமிழர் நலனில் அக்கறை உடையவர்கள் நிச்சயம் தங்கள் தொகுதியில் உள்ள சிக்கல்களை பார்க்காமல் இருக்க மாட்டார்கள் . அதையும் சரி செய்வார்கள் . ஆனால் அந்த வரம்புக்குள் மட்டுமே அவர்கள் நிற்கப்போவதில்லை.   அதையும் தாண்டி தமிழர்களின் மொழி உரிமை , கல்வி உரிமை , விவசாய உரிமை, நீர் உரிமை, இயற்கை உரிமை, பண்பாட்டு உரிமைகள், தொல்லியல் வரலாற்று உரிமைகள்  போன்றவற்றிலும் அக்கறை உடையவர்களாக இருப்பார்கள் .

அதற்குத் தான் தமிழ்த் தேசிய சிந்தனையுடைய நல்ல மனிதர்கள் தமிழகம் சார்பாக பாராளுமன்றம் செல்ல வேண்டும் என நாம் விரும்புகிறோம் . இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர நமக்கான பிரதிநிதியை பாராளுமன்றம் அனுப்பவேண்டும் . நம் மாநிலத்திற்கான அதிகாரங்களை பெற்றிட பா.ம உறுப்பினர்கள் போராட வேண்டும் , குரல் கொடுக்க வேண்டும் .
அண்மைக்கால நிகழ்வுகள் மூலமாக தமிழர்கள் நிறையவே பாடம் படித்துள்ளனர். எல்லா உரிமைகளையும் இழந்த அதிகாரமற்ற அனாதைகளாக தமிழர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இனியும் நாம் ஏமாற முடியாது. சுயநலமாக மட்டுமே சிந்திக்க இயலாது. நாம் தமிழர்கள் , நமக்கான தேசம் தமிழ்த் தேசம் . இந்த மண்ணையும் , மொழியையும் , மக்களையும் பாதுகாக்கும் கடமை தமிழகத்தில் இருந்து செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

வெறும் ஒரு தொகுதியோடு மட்டும் நம் பிரச்சனைகள் தீர்ந்து விடுவதில்லை . அதையும் தாண்டி இந்திய தேசிய அளவில் , சர்வதேச அளவில் நம் பிரச்சனைகள் பேசப்பட வேண்டும். எடுத்தச் செல்லப்பட வேண்டும். அப்படி முனைப்பாக நம் பிரச்சனைளை எடுத்துச் செல்லும்  நபர்களையே நாம் தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இதுவே நம் அனைவர்க்கும் நன்மை பயக்கும் .



[vuukle-powerbar-top]

Recent Post