Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மே 18 ஆம் நாளை தமிழர்களின் கருப்பு நாளாக அறிவிக்க  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள்.  

2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை தமிழீழத்தில் சாட்சிகளே இல்லாமல் அரங்கேறியது. இந்திய அரசும் உலக நாடுகளும் வேடிக்கை பார்க்க தமிழ் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தியது. 1.5 லட்சம் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்து 2009 மே 18 ஆம் நாளில் தனது போரை நிறைவு செய்வதாக அறிவித்தது இலங்கை அரசு.

இந்த இனப்படுகொலையை தொடர்ந்து தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே அகதிகளாக, கைதிகளாக மாற்றப்பட்ட்டனர் தமிழர்கள்.

இன்றுவரை தமிழர்கள் நிலங்கள் இராணுவதால் அபகரிக்கப்பட்டு வருகிறது. தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்கள் அச்சமின்றி வாழ முடியவில்லை. பல தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடைகளும் செய்யப்பட்டுள்ளது. தமிழர் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகள் அங்கே எழுந்துள்ளது. சிங்கள பௌத்த இனவாதம் தமிழீழ பகுதிகளில் தலைவிரித்து ஆடுகிறது.  இது ஒரு திட்டமிட்ட இன அழிப்பாகவே பார்க்க முடிகிறது. எனினும் ஐ.நா மன்றமோ, உலக நாடுகளோ இந்த இன அழிப்பை ஏற்கவில்லை. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என இதுவரை அங்கீகரிக்கவில்லை. தமிழக அரசு ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என தீர்மானம் இயற்றிய பின்பும் இந்திய அரசு அதை ஏற்கவில்லை.

2009 மே 18ம் நாளில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்குப் பின் போரை நிறுத்தியது இலங்கை அரசு. இந்த நாள் தமிழர்களின் கறுப்பு தினமாக உலகத் தமிழர்களால் கருதப்படுகிறது.

இந்த நாளை இலங்கை அரசு தமிழர்களை கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுகிறது. ஆனால் தமிழர்கள் இந்த நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறார்கள் . அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மே 18 ஆம் நாளில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்சிகளை நடத்துகின்றனர் . தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் சுடரேந்தி தமிழின உணர்வாளர்கள், போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளில் கேளிக்கை , விளையாட்டுகள் , களியாட்டங்கள் முதலியவற்றை தவிர்த்து வருகின்றனர். தமிழகத்திலும் இந்த இனப்படுகொலை துக்க நாளை தமிழக மக்கள் நினைவு கூர்தல் அவசியமாகும்.  இந்த மே 18 ஆம் நாள் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக பதிவாகி உள்ளது என்றால் அது மிகையல்ல.

மே 18 ஆம் நாளை ஒட்டுமொத்த தமிழக மக்களும் துக்க நாளாக அனுசரிக்க தமிழக அரசின் அதிகார பூர்வ ஒப்புதலும் அவசியமாகிறது. இந்த நாளை தமிழக அரசு உலக தமிழர்களின் கருப்பு நாளாகவும், தமிழினப்படுகொலை நாளாகவும் அறிவிக்க வேண்டும். இந்த நாளில் அனைத்து அரசு அலுவலங்களிலும் தமிழர்கள் 3 நிமிட மௌன அஞ்சலி செய்திட தமிழக அரசு ஆணையிட  வேண்டும். உலகில் பல்வேறு நாடுகளில் அங்கு நிகழ்ந்த துயரச் சம்பவங்களுக்கு அந்நாட்டு மக்களும் அரசும் ஒரு குறிப்பட்ட நாளில் மௌன அஞ்சலி செல்வது ஒரு அறம் சார்ந்த நிகழ்வாக கடைபிடிக்கப்படுகிறது . அது போலவே இலங்கையில் நடந்தேறிய இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நினைவு கூர மே 18 ஆம் நாளை கருப்பு நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், அதை கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என உலகத் தமிழர்கள் சார்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

இந்த கோரிக்கைக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு மே 18 ஆம் நாளை உலகத் தமிழர்களின் துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த நாளில் தமிழகத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும், மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற அனுமதி வழங்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. 

[vuukle-powerbar-top]

Recent Post