Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் - தமிழர் பண்பாட்டு நடுவம் பாராட்டு !!

2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தை அமல்படுத்தாததால், தமிழ் அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழிப் பாடத்தை, முதல் பாடமாக படித்து வருகின்றனர். இவர்கள், எப்படி, தமிழை, பொது தேர்வாக எழுதுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்டாய தமிழ் மொழிப் பாடம் குறித்த சட்டம் 2006-2007 ஆம் கல்வி ஆண்டிலேயே தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது . எனினும் தனியார் பள்ளிகள் இதை நடைமுறைப் படுத்தாமல் தமிழக மாணவர்களை வேற்று மொழி பாடங்கள் எடுக்க ஊக்குவித்தன. பல பள்ளிகள் கட்டாய இந்தித் திணிப்பை வேறு செய்தன. இந்நிலையில் தற்போது 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்க மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக படித்திருக்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளது . உண்மையில் இது அரசின் குற்றமில்லை . தமிழை படிக்க விடாமல் செய்த பள்ளிகளின் குற்றம். இருப்பினும் தமிழக அரசின்  இந்த சட்டத்தை எதிர்த்து மெட்ரிக்  பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் வழக்கு தொடர்வதாக கூறியுள்ளார்.

தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்வதாக கூறும் நந்தகுமார் , கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தில் இந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். தமிழர்களுக்கு அவசியமில்லாத இந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என கூறும் இவர், தமிழை தமிழ்நாட்டில் கட்டாயமாக்க கூடாது என்று எதிர்க்கிறார்.  இவர் உண்மையில் தமிழ்நாட்டின் குடிமகன் தானா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழர்கள் தங்கள் தாய் மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என சொல்வது தவறு என்று கூற வருகிறார் இவர். இவரைப் போன்றவர்களால் தான் இன்று தமிழ் மொழி பள்ளிகளில் முக்கியத்துவம் பெறாமல் போனது.

ஏற்கனவே தமிழ் மொழியின் நிலை தமிழகத்தில் கவலைக்கிடமாக உள்ளது. தமிழ் படிப்போரின் எண்ணிக்கை சரிந்து வருகிறது . மேலும் நடுவண் அரசுப் பள்ளிகளில் இந்தியை மட்டுமே கற்றுத் தருகிறார்கள் . தமிழை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தமிழை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டாயமாக்குவது ஒன்று தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஓரளவு நன்மை பயக்கும். அப்படி ஒரு நன்மை ஏற்பட்டுவிடக் கூடாது என்று நந்தகுமார் போன்றவர்கள் நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ்.  தமிழ்நாட்டில் வாழ வேண்டுமெனில் அனைவருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் மொழியை மாணவர்கள் ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும் . அதற்கு வழிவகுக்கும் தமிழக அரசின் கட்டாய தமிழ்ப்பாட சட்டம் என்பது உண்மையில் பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது. அதனால் தமிழக பள்ளிகள் இயக்குனரின் இந்த துணிச்சலான முடிவை தமிழர் பண்பாட்டு நடுவம் பாராட்டுகிறது. மேலும் இந்த தமிழை கட்டாய பாடமாக்கும் செயலை எதிர்க்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமாருக்கு நம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.


[vuukle-powerbar-top]

Recent Post