Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இனத்திற்காக அயராது போராடியவர் இப்போது கட்டாய ஓய்வில் ... 

இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு அதியமான் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வந்தேன் . எப்போதும் ஏதாவது ஒரு வேலையை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்கும் அவருக்கு  இப்போது ஒரே இடத்தில் இருக்கும்படியான நிலை வந்துவிட்டது. இன நலம் தான் பெரிதென்று தன்னலம் பாராது இயங்கிக் கொண்டிருக்கும் அவரை காலம் ஓரிடத்தில் இயங்க விடாமல் கட்டிப் போட்டுவிட்டது. ஒரு மாத காலத்திற்கு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இன்று அவரை நலம் விசாரிக்க சென்ற போதும் நம் இனம் சார்ந்த விடயங்களை பேசிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து நம் இனம் என்ன செய்யவேண்டும், நம் இனத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இருவரும் அளவளாவினோம். பல போராட்டங்களை வீரியமாக முன்னெடுத்துள்ள அதியமானுக்கு இப்படி ஒரு விபத்து ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை . 

கடைசியாக அவர் முன்னெடுத்த போராட்டம் ராஜபக்சே வருகையை கண்டித்து பெரம்பூரில் தொடர்வண்டி மறியல் செய்தது தான் . தொடர்வண்டியை அரைமணி நேரம் நிறுத்தி இந்திய அரசை கண்டித்து முழக்கமிட்டார் . அதன் பின்பு அவரை காவல்துறை கைது செய்து அழைத்து செல்லும் போது தான் இந்த விபத்து ஏற்பட்டது . காவலாளி ஒருவர் சாலைவழியாக காவல்துறை அலுவலகம் செல்லாமல் , குறுக்கு வழியாக , ஒரு பள்ளத்தில் இறங்கி அதியமானை அழைத்து சென்றார் . அப்போது அதியமான் அந்த பள்ளத்தில் கீழே இறங்கும் போதும் உடல் சமநிலை இழந்து தலைகுப்புற கீழே விழுந்தார். தலை நேரடியாக நிலத்தில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கை மணிக்கட்டு எழும்பும் உடைந்தது.   அதுமட்டுமல்லாமல் தலையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவரது முதுகெலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் . அதனால் முதுகெலும்பு கூடும்வரை ஒரு மாதம் எந்த வேலையும்  செய்யக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.  

அவரது உடல்நிலை பற்றி அறிந்த பல தோழர்கள் அவரை நேரில் சந்தித்தும் , அலைப்பேசியில் அழைத்தும் ஆறுதல் கூறிவருகின்றனர். அதியமான் தோழரின் கடந்த கால செயல்பாடுகளை அறிந்தவர்கள் அவரை தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்லலாம். இனத்திற்காக பாடுபடும் இவரைப் போன்றவர்களுக்கு தான் பிரச்சனைகளும் அதிகமாக வருகிறது . பாராளுமன்ற தேர்தலில் தன்னிடம் உள்ள கடைசி சொத்தையும் விற்று தேர்தலை சந்தித்தார். பெரும் பொருட்செலவு செய்து  இனம் சார்ந்த தமிழ்த் தேசியக் கருத்துக்களை மக்களிடம் பரப்புரை செய்தவர்  அதியமான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் தமிழர் ஆட்சியை நிறுவவேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் அயராது பாடுபடும் அதியமான் தோழருக்கு இத்தருணத்தில் நாம் பக்கபலமாக இருப்போம்.    

     
[vuukle-powerbar-top]

Recent Post