Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலக சுற்றுச்சூழல் நாள் - சுற்றுச் சூழலுக்கான பதிவு !!

தமிழகத்தில் 20 - 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எண்ணிப் பார்க்கிறேன். வீட்டில் குளிரூட்டி (ஏ/சி) இல்லை. கத்திரி வெயில் காலத்திலும் வீட்டில் மின்விசிறி இருந்தால் போதுமானது . இரவில் நிம்மதியாக தூங்க முடிந்தது. நிலத்தடி நீரும் தாரளாமாக இருந்தது. வீட்டுக் கிணற்றில் நீரைப் பார்க்க முடிந்தது. பருவ மழையும் தவறாமல் பொழிந்தது . பகல் வேளையில் இன்று இருப்பது போல் வெக்கை இல்லை வியர்வை இல்லை. இல்லங்களில் கடும் சூடு இல்லை . கோடை காலம் முடிந்ததும் மெல்லிய குளிர்காற்றை உணர முடிந்தது . மொட்டை மாடியில் கொசுத் தொல்லை இல்லாமல் குடும்பத்துடன் உறங்க முடிந்தது

இப்போது தமிழகத்தின் கால நிலை என்ன ? மின்விசிறி இருந்தாலும் உடல் சூட்டினால் தகிக்கிறது . குளிரூட்டி என்பது நகரங்களில் அவசியமானது. வெளியில் சென்றால் உடல் வியர்வையினால் முற்றிலும் நனைகிறது. கோடை காலத்தில் மட்டுமின்றி எல்லா காலங்களிலும் வெப்பம் நிலவுகிறது. சுவாசிக்கும் காற்றும் கனக்கிறது . ஏழை எளிய மக்களால் ஒரு நாள்  நிம்மதியாக உறங்க முடியாத நிலை . பணம் உள்ளவர்கள் குளிரூட்டி வசதியுடன் காலத்தை கழிக்க , ஏழைகள் மின்வெட்டினால் மின்விசிறி கூட இல்லாமல் அவதிப்படும் நிலை. வீட்டில் இருக்கும் போதே வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாத நிலை உருவாகி விட்டது. பருவ மழையும் உரிய காலத்தில் நமக்கு கிடைப்பதில்லை.

புவியியல் ரீதியாக நமக்கு கீழிருக்கும் இலங்கையில் இந்த நிலை இல்லை . இந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அவர்களுக்கு இல்லை . நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் இல்லை. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது மரங்கள் அழிப்பு தான். நகர வரர்ச்சி என்ற பேரில் நாம் கோடிக்கணக்கான மரங்களை அழித்து விட்டோம் . அழிக்கப்பட வேண்டிய கருவேல மரங்களை வளர்த்து விட்டோம். வாகனங்களை பெருக்கி விட்டோம். விவசாய நிலங்களை கூறு போட்டு மனைகளாக விற்பனை செய்தோம். மழைநீரை சேமிக்க மறந்தோம். நீர் பிடிப்பு வசதிகளை விரிவாக்க தவறினோம். இன்று இவை அனைத்திற்கும் சேர்த்து நாம் இன்னல் அனுபவிக்கிறோம். இப்படியே போனால் நம் அடுத்த தலைமுறை நம்மை விட கொடுமையான கால நிலை மாற்றத்தை  அனுபவிப்பார்கள் .

இதை மாற்றிட நம்மாலான சில முயற்சிகளை செய்தல் வேண்டும் . மரம் வளர்த்தல் , நீரை சேமித்தல் , வாகனங்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தாது இருத்தல், கருவேல மரங்களை அழித்தல், நெகிழிக் குப்பைகளை உருவாக்காமல் பார்த்துக் கொள்ளுதல் போன்ற சிறு சிறு மாற்றத்தை நாம் செய்ய முன்வர வேண்டும் . தமிழக அரசு, சுற்றுப்ப்புற சூழல் மாற்றத்திற்கான காரணிகளை கண்டறிந்து அதை மாற்றவோ களையவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனை தமிழர்களின் எதிர்காலம் குறித்த பிரச்சனை . இதில் அரசு உடனடியாக அதிக கவனம் செலுத்தி கால நிலையை மீட்டெடுக்க வேண்டும். தமிழக அரசியல் தலைவர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.




[vuukle-powerbar-top]

Recent Post