Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

3 வது நாளாக செந்தூரன் பட்டிப் போராட்டம். தமிழக முதல்வர் தலையிட கோரிக்கை ! 

ஈழத்தை சேர்ந்த செந்தூரன் ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமானவர் . சிறப்பு முகாம்களை மூடக் கோரியும் , சிறப்பு முகாம் வாசிகளை விடுவிக்கக் கோரியும் பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தியவர் செந்தூரன். இவர் செய்த போராட்டத்தால் சிறப்பு முகாமில் இருந்த பல ஈழத்து உறவுகள் விடுதலை செய்யப்பட்டார்கள் . செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் இவர் உண்ணா நிலை போராட்டம் செய்துள்ளார் . இறுதியில் இவரை விடுதலை செய்தது தமிழக அரசு. வெளியில் வந்த பின்பும் தமிழக கியூ பிரிவு காவல்துறை செந்தூரனை தொடர்ந்த வண்ணமே இருந்தது . பல வகைகளில் அவருக்கு தொந்தரவு கொடுத்தது . செந்தூரனின் மனைவி மூலமாக அவருக்கு சிக்கலை உருவாக்கியது. செந்தூரன் மனைவியின் உறவினர் ஒருவருடன் செந்தூரனை சண்டையிட வைத்தது . பிறகு அந்த உறவினர் காவல்துறையில் ஒரு பொய் புகார் அளிக்குமாறு செய்து , செந்தூரனை சிறையில் அடைத்தது . சிறையிலும் செந்தூரன் 40 நாட்களுக்கு மேல் பட்டினிப் போராட்டம்  நடத்தினார் . அதன் பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார் செந்தூரன். 

தீடீரென செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடியது தமிழக அரசு . மூடிய கையோடு செய்யாறில் புதிய சிறப்பு முகாம் ஒன்றை திறந்து அங்கு செங்கல்பட்டு முகாம் வாசிகளை மாற்றியது. இந்த முகாமில் உள்ள ஈழத்து உறவுகள் மேல் பல பொய் வழக்குகளை போட்டு முகாமில் நிரந்தரமாக வைத்துள்ளது கியூ பிரிவு காவல்துறை . ஐந்து நபர்களை விடுதலை செய்தால் பத்து நபர்களை கைது செய்து முகாமில் அடைத்து வருகிறது காவல்துறை . இந்த சிறப்பு முகாமில் உள்ளவர் குடும்பத்துடன் வாழ முடிவதில்லை . அயல்நாட்டவர் சட்டப்படி அகதிகள் குடும்பத்துடன் வாழலாம் என்று இருந்தாலும் தமிழக காவல்துறை முகாம்வாசிகளை குடும்பத்துடன் வாழ அனுமதி வழங்குவதில்லை. 

இந்நிலையில் செந்தூரன் மீண்டும் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கி உள்ளார். இன்றோடு மூன்று நாட்களாக பட்டினிப் போராட்டம் செய்து வருகிறார் செந்தூரன். அவர் வைக்கும் கோரிக்கை வருமாறு .. 

௧. சிறப்பு முகாமில் உள்ள அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வாழ வழிவகை செய்தல் வேண்டும் . 
௨. தன்னை நாடு கடத்தும் நடவடிக்கையை கைவிட்டு சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய ஐ.நா.அகதிகளுக்கான ஆணையத்திடம் தன்னை ஒப்படைக்கக் வேண்டும் .   

இவ்வாறு செந்தூரன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் . அரசு சார்பில் சில அதிகாரிகள் செந்தூரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் . இருப்பினும் எப்போதும் போல அரசு , காவல்துறையின் மூலமாக மீண்டும் செந்தூரனை கைது செய்து சிறையில் அடைக்கும் எனத் தெரிகிறது . என்ன நடந்தாலும்  செந்தூரன் தனது உண்ணாநிலையில் போராட்டத்தை கைவிடுவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

அரசுக்கு தமிழின உணர்வாளர்கள் வைக்கும் கோரிக்கை, சட்ட விரோதமாக இயங்கும் சிறப்பு  முகாம்களை மூட வேண்டும் . செந்தூரன் உள்ளிட்ட முகாம் வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் . செந்தூரனின் கோரிக்கையை இம்முறை அரசு நிறைவேற்றிட வேண்டும் என்பதே ஆங்கும். செந்தூரனின் கோரிக்கையை ஆதரித்து மாணவர்களும் இப்போது போராட முன்வந்துள்ளனர் . மேலும் பல அரசியல் கட்சிகளும் செந்தூரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் . தமிழக முதல்வர் இம்முறை செந்தூரன் விடயத்தில் உடனே தலையிட்டு ஒரு நல்ல தீர்வை தர வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது. 




[vuukle-powerbar-top]

Recent Post