Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிற மதங்கள் தழுவும்  தமிழர்களின் கனிவான கவனத்திற்கு!    

அண்மைக் காலமாக தமிழர்கள் பல மதங்களுக்கு மாறுவதையும் அதனை விளம்பரப்படுத்துவதையும்  காண முடிகிறது. அதிலும் சில நடிகர், நடிகைகள் ஏன் தாங்கள் மதம் மாறினார்கள் என்பதை காணொளி பதிவுகளில் கூறி வருகின்றனர். இதன் மூலமாக அந்தந்த மதங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்கிறது. ஒரு சிலர் தங்கள் நோய் குணமானது அதனால் நான் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறுகின்றனர். ஒரு சிலர் எனக்கு இஸ்லாம் மார்க்கம் பிடித்துள்ளது, அதனால் நான் அந்த மார்க்கத்தை விரும்பி ஏற்றுள்ளேன் என்கின்றனர். நகரங்களில் வாழும் தமிழர்கள் தாங்கள் விரும்பாமலே ஆரிய இந்து மதத்தை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அதாவது சமஸ்க்ரித்த பண்பாட்டை, வழிபாட்டை ஏற்றுக் கொள்ளும் நிலை அவர்களுக்கு உருவாகி உள்ளது. திராவிட நாத்திக மதத்தை தழுவியர்கள் பலரும் மொத்தமாக தமிழையும், தமிழர் பண்பாட்டையும் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி ஒதுக்கித் தள்ளிவிட்டனர்.  

தமிழர்களின் இப்படியான மதமாற்றத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, தமிழர்கள் தங்கள் மதத்தை , பண்பாட்டை, வரலாற்றை அறியாதது தான். உலகில் முதலில் மொழியை வழங்கிய மூத்த இனம் தமிழினம் என்பதற்கு நாம் பல வரலாற்று, இலக்கிய, தொல்பொருள்  ஆய்வு சான்றுகளை முன்வைத்து உள்ளோம். மொழியை மட்டும் கொடுக்கவில்லை தமிழர்கள். உலக மதங்களாக  விளங்கும் கிருத்துவம், இஸ்லாம், ஆரிய இந்து மதம், சமணம், பௌத்தம், பார்சி மதம், ஜென் மதம்  போன்ற பல்வேறு மதங்களுக்கு அடிப்படையாக விளங்குவது தமிழர் மதம் என்பது தமிழர்கள் பலருக்கும் தெரியாத உண்மை. பல்வேறு உலக சிந்தாந்தங்கள், தத்துவங்கள் என அனைத்திலும் தமிழியத்தின்  தத்துவக் கூறுகள் இருப்பதை நாம் காணமுடியும். இந்தியாவில் தோன்றிய ஆரிய வேதமதம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்களுக்கு மூலக் கூறாக தமிழர் மதம் தான் விளங்குகிறது. இந்திய கண்டத்தை கடந்து தமிழர் நாகரீகம் சுமேரியம், கிரேக்கம், மாயன் நாகரீகம் என பரந்து விரிந்துள்ளது . இந்த உலக நாகரீகங்கள் தான் பிற்காலத்தில் பல மதங்களை தோற்றுவித்தன. அதனால் இம்மதங்களில் எல்லாம் தமிழர்களின் மெய்யியல் சித்தாந்தம் இரண்டறக்கலந்து உள்ளது. இதனால் தான் இன்று தமிழர் வரலாறு அறியவேண்டுமெனில் நாம் வேதமத புராணங்கள், சுமேரிய , அரபு, எகிப்து , கிரேக்க புராணங்களை படிக்க வேண்டி உள்ளது. இவைகளில் தமிழர்களின் வரலாறு புதைந்துள்ளது. 

சரி, தமிழர்கள் அப்படி என்ன தான் இந்த உலகிற்கு கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுத்துள்ளது. உலகம் போற்றும் இலக்கண அறிவியல் நூல் தொல்காப்பியம், உலகப் பொதுமுறை திருக்குறள் முதற்கொண்டு உலக இயற்கை தத்துவத்தை, சமூக நீதியை வழங்கிய சித்தர் நூல்கள், ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகிற்கு வழங்கிய சமரச சன்மார்கம் வரை தமிழர் மதம் கொடுத்துள்ளது. உலக சித்தாந்தங்கள் எல்லாம் வியக்கும் பொதுநெறிக் கொள்கைகள் அடங்கிய நாலடியார், ஒளவைக் குறள், சங்க இலக்கியங்கள் என்ன தமிழர் மதத்தின் சிறப்பியல்புகள் நீண்டு கொண்டே போகும். இயற்கையை விளக்கமாகிய இறைவனை அறிய மெய்யியல் அறிவு தேவை . அந்த மெய்யியலை தமிழர் மதத்தை காட்டிலும் வேறு எந்த மதமும் நேர்பட, தெளிவுறக் காட்டியதில்லை என்றே கூறலாம். பழந்தமிழர் வகுத்த விண்ணிலை அறிவியல் இறைவனின் பேரொளித் தன்மை அண்டத்தில் விளங்குவதை தெளிவாகக் கூறியுள்ளது. ஒளிநெறிக் கொள்கையை தமிழர் மதத்தை காட்டிலும் வேறு எந்த மதமும் தெளிவுறக் காட்டவில்லை. அப்படி ஒரு பெருமை வாய்ந்த சிறப்புகள் உலகின் மூத்த இனமான தமிழர் இனத்திற்கு உள்ளது. இதை அறிய நாம் தமிழின் தொன்மை, வரலாறு, மெய்யியல் நூல்களை படித்துத் தெளிய வேண்டும். நாம் அறியவேண்டிய ஏராளமான விடயங்கள் தமிழர்களின் பண்பாட்டில், வரலாற்றில் பொதிந்து உள்ளது. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல நம்மிடம் பெரும் புதையல் இருக்கையில் நாம் வேறு மதங்களிடம் சிறிய செல்வத்தை தேடுகிறோம். 

இதுவரை மதம் மாறியவர்கள் அம்மதத்தில் இருக்கட்டும். அம்மதங்களில் இருந்து கொண்டே தமிழர் மெய்யியல் நெறிகளை பற்றி அறிய முற்படட்டும். ஆனால் இனிவரும் காலத்தில் தமிழர்கள் யாரும் மதம் மாறவேண்டிய அவசியமில்லை. மனிதனின் அறிவுக்கண்ணை திறக்கும் ஒப்பற்ற மெய்யியல் சித்தாந்தம் நம்மிடையே உள்ளது. எல்லா வளங்களும், நலன்களும் தரும் பேராற்றல் பொருந்திய கருத்தியல் நம் தமிழர் சமயத்திற்கு உண்டு என்பதை நினைவில் கொள்வோம். 

இன்னும் சிலர் தமிழர்களுக்குள் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன அதனால் தான் மதம் மாறுகிறோம் என்கின்றனர். இது முற்றிலும் தவறான கூற்று. தமிழர் மதத்தில் அனைவரும் சமமே. ஈ, எறும்பு முதல், யானை, மனிதன் ஈறாக அனைத்து உயிர்களுக்குள்ளும் கடவுள் இயற்கை விளக்கம் உண்டு என்று கூறிய முதல் நெறி தமிழர் நெறியாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவரும், சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஒளவையாரும், சாதியையும் , மதமும் , சமயமும் பொய் என்று கூறிய வள்ளலாரும் நமக்கு தந்த ஒப்பற்ற நெறி தமிழர் நெறியாகும். அதனால் இங்கு நிச்சயம் சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமில்லை. இருப்பினும், தமிழர் நாட்டில் தஞ்சம் புகுந்த ஆரியர்களும் , தமிழர் நாட்டை படையெடுத்து கைப்பற்றிய திராவிடர்களும் பிற்காலத்தில் தமிழர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கினர். நம்மை ஆள்வதற்கு நம்மை பிளவு படுத்தினர்.  இப்போது அது குறித்த தெளிவுகள் தமிழர்களிடையே வந்து விட்டது. சாதியாக இருக்கும் தமிழர்கள் இனமாக கட்டமைக்கப்பட்டு வருகின்றனர். சாதிப் பெருமை பேசுபவர்கள் இனத்திற்காக குரல் எழுப்புகின்றனர். மதமாக பிரிந்தவர்கள் கூட இப்போது இனமாகி வருகின்றனர். தமிழர் அனைவரும் ஓர் உரிமையுள்ள சகோதரர்கள் என்பதை நாம் உணரும் காலம் வந்துவிட்டது. 

இறுதியாக தமிழர்கள் அனைவருக்கும் நாம் சொல்லிக் கொள்வது. நம் பெருமையை , அருமையை , தன்மையை நாமே அறிய முற்படுவோம். நம்மிடம் இல்லாததை வெளியில் தேடுவோம். நம்மிடமே பல செல்வங்கள் இருக்கும் போது வெளியில் அதற்காக அலைந்து நம் காலத்தை வீணடிக்க வேண்டா. தமிழர்கள் நாம் தமிழர் பண்பாட்டை, தமிழர் நெறியையே பின்பற்றுவோம். தமிழர் மதமே தமிழர்களின் மதம். மதமாற்றம் என்பது தமிழர்களுக்கு தேவை இல்லை என்பதே நம் இறுதிக் கருத்து. ஏற்கனவே பிற மதங்களுக்கு மாறியவர்கள், அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்கள் முதன்மை அடையாளம் தமிழர்கள் தான் என்பதை உறுதி செய்தல் வேண்டும். அப்போது தான் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக நமக்கான எதிர்காலத்தை உருவாக்க  முடியும் . உலகத் தமிழர்களுக்கான அரசை நிறுவ முடியும். பலமான தமிழர் கட்டமைப்பை உருவாக்க முடியும். தமிழ் , தமிழர் , தமிழர்தேசம் என்பதே நமது இலக்கு . அதை நோக்கி பயணிப்போம். வாழ்க தமிழ் . 
  
[vuukle-powerbar-top]

Recent Post