Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதுவையில் நடுவண் அரசு பாடத்திட்டம். சத்தமின்றி நடத்தப்படும் இன அழிப்பு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்.

யுத்தமின்றி ஒரு இனம் அழிக்கப்பட வேண்டுமெனில் முதலில் அந்த இனத்தின் மொழியை அழி என்பது சர்வாதிகாரிகளின் கூற்று . இந்த கூற்றை மெய்பிக்கும் வகையில் தமிழர்களின் தாயகமான புதுவையில் இப்போது அரசு தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.சி என்னும் நடுவண் அரசு பாட திட்டத்தை புகுத்தி உள்ளது புதுவை அரசு. நடுவண் அரசு பாடத்திட்டம் என்பது இந்தி மக்களுக்கானது. அது மண்ணின் மைந்தர்களுக்கான பாடத்திட்டம் அல்ல. நடுவண் அரசின் பாடத்தில் தமிழர் அறம், பண்பாடு , வரலாறு, தமிழ் மொழி  என எதுவும் இடம் பெறாது . வடநாட்டில் வாழ்ந்த மன்னர்கள் , வடநாட்டு பண்பாடுகள் , வடநாட்டு மொழி போன்றவைகள் தான் நடுவண் அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெறும்.

இதை பயிலும் மாணவர்கள் தாங்கள் தமிழர் என்பதையே நாளைடைவில் மறந்து விடுவார்கள். தமிழர் அடையாளத்தை அழிக்கும் பாடத்திட்டம் தான் நடுவண் அரசின் பாடத்திட்டம். இந்தியும் ஆங்கிலம் மட்டுமே இப்பாடத் திட்டத்தை பயிற்றுவிக்கும் பள்ளிகளில் முதன்மையாக கற்றுத்தரப்படும். இப்படியான பாடத்திட்டத்தை இந்திய அரசு பல இந்திய மாநிலங்களில் திணித்து வருகிறது . தாய் மொழிக் கல்வியை ஊக்குவிக்காமல் , இந்திக் கல்வியை அனைத்து மாநிலத்திற்கும் இந்திய அரசு திட்டமிட்டு திணித்து வருகிறது. இந்த  திணிப்புக்கு நடுவண் அரசு பலகோடிகள் செலவும் செய்து வருகிறது. மாநில மண்ணின்  அடையாளங்களை ஒட்டுமொத்தமாக அழித்து இந்தி அடையாளத்தை மக்களிடையே திணித்து வருகிறது இந்திய அரசு . இவ்வாறான அடையாள அழிப்பு என்பது இன அழிப்புக்கு ஒப்பானதாகும்.

இப்போது புதுவையில் புகுத்தப்பட்ட நடுவண் அரசின் பாடத்திட்டம் , சத்தமின்றி தமிழினம் அழிக்கப்படுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாகும். இதை தமிழர்கள் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் . இதில் வியப்பு என்னவெனில் தமிழகத்தை சேர்ந்த எந்த அரசியல் கட்சிகளும்  இந்த திட்டத்தை இதுவரை எதிர்க்கவில்லை என்பது தான். இதை கண்டித்து எந்த அறிக்கையும் இவர்கள் வெளியிடவும் இல்லை. காலம் காலமாக புதுவையும் தமிழகமும் தமிழர்களின் தாயகமாகும் . இப்போது புதுவையில் ஏற்பட்டுள்ள கல்வி முறை மாற்றம் நாளை தமிழகத்திற்கும் வர நிறைய காலம் பிடிக்காது . இதுவரை புதுவை மாநிலம் தமிழக அரசின் பாடத்திட்டத்தையே பின்பற்றி வந்துள்ளது. இனியும் அவ்வாறே பின்பற்றினால் தான் தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் மொழி காக்கப்படும்.   இல்லையெனில் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலே அடையாளத்தை இழந்து அகதிகள் போல் மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதுவை மக்களுக்கு நடுவண் அரசின் பாடத்திட்டம் முழுவதுமாக புகுத்தப்பட்டால், தமிழகத்திற்கும் புதுவைக்குமான இணைப்பு பாலம் உடையும் நிலையும் உருவாகும்.

தமிழகத்தின் பாடத்திட்டத்தை புறந்தள்ளி நடுவண் அரசின் பாடத்திட்டத்தை தமிழர்களின் மேல் திணிக்கும் புதுவை அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இந்த அபாயகரமான முடிவை புதுவை முதல்வர் உடனே திரும்பப் பெறவேண்டும் எனவும் கூட்டமைப்பு தமிழர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறது . தமிழக அரசும் புதுவை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தமிழக அரசின் பாடதிட்டம் புதுவையில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.



[vuukle-powerbar-top]

Recent Post