Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எங்கும் இந்தி எதிலும் இந்தி. மோடி அரசின் அதிரடி இந்தித் திணிப்பு தொடக்கம் !

மோடி எங்கு சென்றாலும் தனது தாய் மொழியில் பேசமாட்டார் இந்தியில் மட்டுமே பேசுவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் . இந்தியை இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக்குவது தான் ஆர்.எஸ்.எஸ் முதலிய இந்துத்வா அமைப்புகள் முன்வைக்கும் நீண்ட நாள் திட்டம். மோடி பதவி ஏற்றவுடன் அதை நிறைவேற்ற பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பாஜக.  முதல் கட்டமாக மோடி அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதாவது இந்திய அரசு அதிகாரிகள் , ஊழியர்கள் , அமைச்சர்கள் , நிறுவனங்கள் அனைவரும் முகநூல் , ட்விட்டர், வலைப்பூக்கள், மின்னஞ்சல் மற்றும் இணையம் எங்கும் இந்தியில் தான் செய்திகளை பரிமாறிக் கொள்ள வேண்டும்  என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.  சமூக வலைதளங்களில் என்ன பதிவிட்டாலும் அவற்றை இந்தியில் தான் பதிவிட வேண்டுமாம். தேவைப்பட்டால் ஆங்கிலத்தை பயன்படுத்தலாம், ஆனால் இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமாம் . இந்திய அரசின் அலுவல் மொழி சட்டத்தை முழுமையாக பயன்படுத்த சிறப்புக் குழுவை ஏற்பாடு செய்துள்ளது மோடி அரசு. இதனால் நடுவண் அரசின் கீழ் இயங்கும் வங்கிகள் , பொதுத் துறை நிறுவனங்கள் என எவையும் இந்தியில் தான் தகவல்கள் பரிமாறிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா என்பது ஒரு கூட்டாச்சி, அதில் பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கிறது  என்பதை  மறந்து இப்படியான இந்தித் திணிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது மோடி அரசு . இதன் மூலம் இந்திய அரசில் பணிபுரியும் கோடிக்கணக்கான இந்தி அல்லாத பிற தேசிய இனங்களும் கட்டாயம் இந்தி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் . இல்லையெனில் அவர்களால் பணியில் நீடிக்க முடியாது . இந்திய அரசு பணியாளர்களாக பணியாற்ற விரும்பும் தமிழர்கள் , கன்னடர்கள் , தெலுங்கர்கள் போன்ற பல தேசிய இனத்தவர்கள் இனி இந்தியை கட்டாயம் பயில வேண்டும் என்ற அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது நடுவண் அரசு . இது எவ்வளவு பெரிய அநீதி. எவ்வளவு பெரிய மக்கள் விரோத செயல்!

மோடி அமைச்சரவையில் உள்ள பிற தேசிய இன மக்கள் இதை எதிர்க்க வேண்டும் . ஆனால் அவர்கள் இதை எதிர்க்கத் தயாராக இல்லை . மாநில கட்சிகள் எதிர்க்க வேண்டும் . ஆனால் அவர்களும் உறக்கத்தில் இருக்கிறார்கள் . அதனால் மக்களாகிய நாம் தான் இந்த சர்வாதிகார இந்தித் திணிப்பை எதிர்க்க வேண்டும் . அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் இந்த காலகட்டத்தில் இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக வைத்திருக்க இந்திய அரசு முயல்வது மனித குல விரோதமான செயலாகும். மொழி சம உரிமை சட்டத்தை மாநிலங்கள் அவையில் பா. ம உறுப்பினர்கள்  முன்மொழிய வேண்டும் . அதை நடைமுறைப்படுத்த வேண்டும் . இல்லையெனில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் இந்தி மொழி மட்டுமே வாழும் , பிறமொழிகள் எல்லாம் அலுவல் மொழி என்ற தகுதியை இழந்து காணாமல் போகும் . தமிழர்கள்  உட்பட பல தேசிய இன மக்கள் தங்கள் உரிமை இழந்து இந்திக்கு முன்பு கைகட்டி நிற்க வேண்டிய சூழல் உருவாகும்.

இந்த அரசு இந்தியில் மட்டுமே மக்களிடம் இனி பேசும் என்றால் இந்தி மாநிலங்கள் இந்தியாவை விட்டு பிரிந்து போகட்டும் . மீதம் உள்ள மாநிலங்கள் ஒரு கூட்டாச்சி நாடாக உருவாக்கட்டும் . அதன் மூலம் தேசிய இனங்களில் மொழி பண்பாட்டு உரிமைகள் பாதுக்கப்படும். இந்தித் திணிப்பை நாம் கடுமையாக எதிர்ப்போம் . மோடி அரசுக்கு நம் கண்டனத்தை தெரிவிப்போம் .

- தமிழர் பண்பாட்டு நடுவம்






[vuukle-powerbar-top]

Recent Post