Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழை கட்டாய பாடமாக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம்!

தமிழ் பாடம் - தமிழ்க் கல்வி

தமிழகம் முன் எப்போதும் இல்லாதவாறு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதில் மிக மிக முக்கியாமான பிரச்சனை மொழிப் பிரச்சனையாகும். தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்து அதை நடை முறைப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது . ஆனால் அதை தனியார் பள்ளிகள் காதுகளில் போட்டுக் கொள்ளவே இல்லை . பெற்றோர்களுக்கும் இது பற்றி விழிப்புணர்வு கொடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என பள்ளி இயக்ககம் அண்மையில் செய்தி வெளியிட்டது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் நீதிமன்றம் சென்று தமிழை கட்டாயப் பாடமாக அறிவிக்கக் கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் கட்டாய பாடமாக இருக்க , தமிழ்நாட்டில் மட்டுமே தமிழே படிக்காமல் ஒருவர் கல்லூரி முடித்து விடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாளை தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகம் தமிழகத்தில் உருவாகும். இதனால் தமிழ் மொழி பயன்பாட்டில் இருந்து முற்றிலும் அழியும் நிலையும் ஏற்படும். இதை தடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

தமிழக அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைக்கும் கோரிக்கை என்னவெனில்

தொடக்கக் கல்வி முதல் உயர்நிலை படிப்பு வரை தமிழ் மொழியை ஒரு கட்டாயப் பாடமாக பள்ளிகளில் இருக்க ஆவன செய்தல் வேண்டும். அனைத்து அரசு, தனியார் , நடுவண் அரசு, சர்வதேச பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக கற்றுத் தரப்பட வேண்டும் . இதை தமிழக அரசு உறுதி செய்தல் வேண்டும் .

அனைத்து தமிழக அரசு பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியே கற்றுத் தரப்பட வேண்டும் . ஆங்கில வழிக் கல்வியை அரசு தமிழ் மக்களிடம் திணிக்கக் கூடாது .

௧. அரசுப் பள்ளிகளை நாடாத நடுத்தர மற்றும் மேல் நடுத்தர மக்கள் விரும்பும் வகையில் தரமான தமிழ் வழிக் கல்வியை தனியார் பள்ளிகள் வழங்க வேண்டும். தனியார் பள்ளிகள் ஒரு வகுப்பிலும், ஒரு பிரிவு தமிழ் வழிக் கல்வியை  வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தமிழக மக்கள் அவர்களின் தாய் மொழியில் கல்வி கற்கும் உரிமையை பெறுவார்கள். தாய் மொழிக் கல்வி உரிமையை ஒவ்வொரு தமிழ் மாணவனும் பெறுதல் வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

௨. தமிழ் பாடத்தை கற்றுத் தராத தனியார் பள்ளிகளின் உரிமத்தை தமிழக அரசு இரத்து செய்ய வேண்டும் . நடுவண் அரசு பள்ளிகளுக்கும் தமிழக அரசு தமிழ்ப் பாடத்தை கற்றுத் தர உத்தரவிட வேண்டும்.

௩. தமிழக அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளிலும் தமிழே ஆட்சி மொழி என்பதை அரசு உறுதி செய்தல் வேண்டும் . குறிப்பாக காவல்துறை முழுவதும் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.

௪. தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க ஆணையிட வேண்டும் . இதனால் பள்ளிகளின் தரம் விரைவில் முன்னேறும் .

இந்தித் திணிப்பு

புதிதாக பொறுப்பேற்று உள்ள பாஜக அரசு , காங்கிரஸ் அரசை விட பன்மஅடகு வேகத்தில் இந்தித் திணிப்பை நடைமுறைப் படுத்தி வருகிறது . நடுவண் அரசின் தொடர்பு மொழியாக இந்தியை கட்டாயப்படுத்துகிறது. இந்தி அல்லாத பிற மாநிலங்களும் இந்தியின் தான் அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது.  சமூக வலைத் தளங்களில் இந்தியின் தான் அரசு அதிகாரிகள் தகவல்களை பதிவிட வேண்டும் என வலியுறுத்தியது . பின்பு அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் அந்த ஆணையை திரும்பப் பெற்றது . எனினும் நடுவண் அரசின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்தியில் தான் கோப்புகளை வைக்க வேண்டும் என ஆணையிட்டு உள்ளது . இது முற்றிலும் ஜனநாயகத்தை மீறும் செயலாகும். பல தேசிய இனங்கள் நடுவண் அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர் . இவர்கள் அனைவரும் இப்போது இந்தி கற்றுத் தேரவேண்டும் என்று நடுவண் அரசு கட்டாயப் படுத்துகிறது. இது இனங்களின் மொழி உரிமையை மீறும் செயலாகும். ஏற்கனவே இந்திய அரசு அனைத்து துறைகளிலும் இந்தியை கட்டாயமாக திணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து தேசிய இனங்களும் தங்கள் மொழியுரிமையை நிலைநாட்ட இந்திய அரசிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை

௧. அனைத்து மாநில மொழிகளும் இந்திக்கு நிகராக ஆட்சி மொழியாகும் தகுதியை இந்திய அரசு வழங்க வேண்டும் .

௨. அதுவரை இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்ற தகுதியை உடனே நீக்குதல் வேண்டும். இந்தியாவின் தொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்க வேண்டும் .

௩. மாநிலங்களில் செயல்படும் அனைத்து நடுவண் அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழியே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.  இந்தி மொழியை அரசு எந்த வகையிலும் ஊக்குவிக்கக் கூடாது, திணிக்கக் கூடாது.

௪. மக்களிடம் தொடர்பில் உள்ள வங்கிகள், தொடர்வண்டி துறை, வானூர்தி துறை, அஞ்சல் துறை போன்ற துறைகளில் மாநில மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . இந்தி மொழியை பயன்படுத்தக் கூடாது.

௫. அஞ்சல்தலை , கடவுச் சீட்டு, நாணயங்களில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்துகிறது இந்திய அரசு. அரசு இதை உடனே நிறுத்த வேண்டும்.  தமிழ் மொழி உட்பட 8 வது அட்டவணையில் குறிப்பிட்ட அனைத்து மொழிகளுக்கும் நாணயங்களில், கடவுச் சீட்டில், அஞ்சல் தலைகளில் இடமளிக்க வேண்டும். சுழற்சி முறையிலோ அல்லது விகிதாச்சார  அடிப்படையிலோ மாநில மொழிகளை அஞ்சல் தலையிலும் நாணயங்களிலும் அச்சிடலாம். கடவுச் சீட்டில் மாநில மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

௬. தமிழகத்தில் இந்திய ஆட்சி மொழி சட்டம் செல்லுபடி ஆகாது . அதனால் தமிழகத்தில் உடனடியாக நடுவண் அரசு நிறுவனங்களில் உள்ள இந்தித் திணிப்பை அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . எ.கா. தொடர்வண்டி நிலையங்கள், வானூர்தி நிலையங்களில் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே இருக்க வேண்டும் . இந்தி இருக்கக் கூடாது.

௭. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தி மாநிலத்தில் உள்ளது போலவே இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். இந்தி மாநிலத்திற்கு ஒரு நீதி மற்ற மாநிலத்திற்கு ஒரு நீதி என்பதாக இருக்கக் கூடாது. இதன் மூலம் இந்திக்கு தேவையில்லாமல் கொடுக்கப்படும் சிறப்பு தகுதி நீக்கப்படும்.  நீதி நிலைநாட்டப்படும்.

௮ . அனைத்து துறைகளிலும் மொழி சம உரிமை பாதுக்கப்பட வேண்டும். பாராளுமன்றம் , நீதிமன்றம் , ராணுவம், வருமான வரித் துறை என எங்கும் இந்தியை திணிக்கக் கூடாது . மாநில மொழிகளுக்கு முழு உரிமை அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியின் கட்டாயப் பயன்பாடு குறைந்து விடும். மாநில மொழிகளின் உரிமைகள் மீட்கப்படும். இதை நடைமுறைப் படுத்துவதற்க்கான  செயற்குழுவை நடுவண் அரசு உருவாக்க வேண்டும் .

௯ . மொழிச் சம உரிமை சட்டத்தை இந்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் .

இவ்வாறு தமிழக அரசுக்கும் , இந்திய அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை வைக்கின்றது

 
------------------------------------------------------------
முழக்கங்கள்

தமிழக அரசே தமிழக அரசே
கட்டாயமாக்கு கட்டாயமாக்கு
தனியார் பள்ளிகள் அனைத்தினிலும்
தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்கு

ஆணையிடு ஆணையிடு
தனியார் பள்ளிகள் அனைத்தினிலும்
தமிழ் வழிக் கல்வி வழங்க ஆணையிடு

திணிக்காதே திணிக்காதே
அனைத்து அரசு பள்ளிகளிலும்
ஆங்கில வழிக் கல்வியை திணிக்காதே

ரத்து செய் ரத்து செய்
தமிழை கற்றுக் கொடுக்காத
பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்

ஆணையிடு ஆணையிடு
அரசு ஊழியர் பிள்ளைகளை
அரசு பள்ளியில் படிக்க ஆணையிடு

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
இதுவே எங்கள் கொள்கையாம்

காவல்துறையில் தமிழ் இல்லை
பள்ளிகளிலும் தமிழ் இல்லை
கோவில்களிலும் தமிழ் இல்லை
சாலைகளிலும் தமிழ் இல்லை
இந்த நிலையை மாற்றிட
தமிழ்ப்படுத்து தமிழ்ப்படுத்து
அணைத்து துறைகளையும் தமிழ்ப்படுத்து !!

வேலை கொடு வேலை கொடு
தமிழ்வழியில் படித்தோருக்கே வேலை கொடு.

முன்னுரிமை கொடு முன்னுரிமை கொடு
பொறியியல் மருத்துவப் படிப்புகளில்
தமிழ்வழியில் படித்தோருக்கு முன்னுரிமை கொடு!

புதிய பள்ளிகளை வளர்த்தெடுக்க
ஊக்கம் கொடு ஊக்கம் கொடு
தனியார் தமிழ் வழிப் பள்ளிகளுக்கு
ஊக்கம் கொடு ஊக்கம் கொடு
-------------------------------------------
இந்திய அரசே இந்திய அரசே
திணிக்காதே திணிக்காதே
இந்தியை எங்கள் மீது திணிக்காதே

நிறுத்தி விடு நிறுத்தி விடு
இந்தித் திணிப்பை நிறுத்தி விடு

சம உரிமை கொடு சம உரிமை கொடு
எல்லா மாநில மொழிகளுக்கும்
சம உரிமை கொடு சம உரிமை கொடு

நியாயமா இது நியாயமா
300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த
இந்தி மொழி ஆட்சி மொழி
5000 ஆண்டு பழமை வாய்ந்த
தமிழ் மொழிக்கு அதிகாரமில்லை
நியாயமா இது நியாயமா ?

ஆட்சி மொழியாக்கு ஆட்சி மொழியாக்கு
அனைத்து மாநில மொழிகளையும்
ஆட்சி மொழியாக்கு ஆட்சி மொழியாக்கு !

நியாயமா இது நியாயமா ?
எங்கும் இந்தி எதிலும் இந்தி
கடவுச்சீட்டு அஞ்சல்தலை
நாணயங்கள் வங்கிக் கணக்கு
நீதிமன்றம் இராணுவம்
தொடர்வண்டிகள், நெடுஞ்சாலைகள்
எங்கும் இந்தி எதிலும் இந்தி
நியாயமா இது நியாயமா ?

புறக்கணிக்காதே புறக்கணிக்காதே
தமிழ் மொழியை புறக்கணிக்காதே
இந்திய அரசு நிறுவனங்களில்
தமிழ் மொழியை புறக்கணிக்காதே

அலுவல் மொழியாக்கு அலுவல் மொழியாக்கு
அரசு நிறுவனம் அனைத்தினிலும்
மாநில மொழியை அலுவல் மொழியாக்கு.
இந்தித் திணிப்பை இத்துடன் நிறுத்தி
மக்கள் மொழிக்கு இடம் கொடு
























[vuukle-powerbar-top]

Recent Post