Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போரூர் அருகே ஏற்பட்ட அடுக்குமாடி கட்டட விபத்துக்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் !!

போரூர் அருகே ஏற்பட்ட கட்டட விபத்து தமிழகத்தையே அதிர வைத்துள்ளது . இந்த விபத்தில் பல உயிர்கள் பலியாகியுள்ளது . பலர் படுகாயம் அடைந்துள்ளனர் . இந்த கட்டடத்தின் அருகாமையில் உள்ள சிறிய வீடுகளும் விழுந்துள்ளது. வடமாநில தொழிலாளர்களும் , ஆந்திராவை சேர்ந்த பலரும், தமிழகத்தை சேர்ந்த சிலரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம். பலியானவர்கள் பலரும் அடித்தட்டு மக்களாக உள்ளனர் . உழைத்தால் தான் வாழ்கையை நடந்த முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள் . யாரோ செய்த தவறுக்கு யார் பலியாவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படியான கட்டட விபத்து நமக்கு நமக்கு ஒரு முன்னெச்சரிக்கை செய்தியை வழங்குகிறது. இது இன்னும் பல விபத்துகள் வருங்காலத்தில் நடைபெறலாம். மனிதர்களின் பேராசை எல்லை கடக்கும் போது இதுபோன்ற அவலங்களையும் நாம் சந்தித்தே ஆகவேண்டும் . இயற்கையை சீரழித்து நாம் உருவாக்கும் வளர்ச்சி என்பது உண்மையில் வீழ்ச்சியே ஆகும் . ஏரிகளை சுற்றி வீட்டு மனைகளை உருவாக்குகிறோம் , காடுகளை, மரங்களை அழிக்கிறோம், விளை நிலங்களை கூறுபோட்டு மனைகளாக மாற்றுகிறோம் . இப்படி தொடர்ந்து செய்வதால் அதன் பலனையும் நாமே அனுபவிக்கிறோம்.

ஏரிகளை பாதுகாக்க வேண்டிய அரசு , அதை ஆக்கிரமிக்கும் போது வேடிக்கை பார்க்கிறது . இது போன்ற அடுக்குமாடியை  கட்டும் போது , அந்த கட்டடங்களின் உறுதியை சோதனை செய்வதுண்டா . கட்டடங்கள் கட்டும் தொழில் நுட்ப கலைஞர்களிடம் அரசு தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தியதுண்டா ? கட்டட உரிமையாளர்கள் யார் , இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் , இவர்களது பின்னணி என்ன என்று அரசு ஆய்வு செய்வதுண்டா ? பல வடநாட்டு பெரு முதலாளிகள் சென்னையில் வந்து பெரு முதலீடு செய்து இது போன்ற தரமற்ற கட்டடத்தை கட்டி அதை தமிழக மக்களின் தலையில் கட்டி விட்டு சென்று விடுகிறார்கள் . சென்னையை சுற்றிலும் பல நூறு அடுக்கு மாட்டி குடியிருப்புகளை வடநாட்டு நிறுவனங்கள் புற்றீசல் போல அசுர வேகத்தில் கட்டி வருகின்றனர் . இதை பற்றி தமிழக அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை . தமிழக அரசுக்கு பணம் வந்தால் போதும், யாரும் இங்கு வந்து நிலங்களை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட உரிமையை வழங்குகிறது. இந்தக் கட்டடங்கள் சுற்றுப்புற சூழ்நிலையை எந்த அளவிற்கு பாதிக்கிறது , நீர் வளத்தை எவ்வாறு பாதிக்கிறது , அருகில் உள்ள கிராமங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி அரசு ஆய்வு செய்வதில்லை . மேலும் இப்படியான பெரிய கட்டடங்கள் ஒவ்வொரு படியாக எவ்வாறு கட்டி எழுப்பப்படுகிறது என்பதையும் அரசு ஆய்வு செய்வதில்லை. இந்த கட்டடத்தின் நிலைத் தன்மை , வலிமை எந்த அளவில் உள்ளது என்பதை தொடக்க காலத்தில் இருந்தே ஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது . கட்டடம் கட்ட அனுமதி அளித்து பணம் பார்க்கும் அரசு , ஏன் கட்டடத்தின் உறுதியை ஒவ்வொரு நிலையிலும் சோதனை செய்வதில்லை . அரசின் அலட்சிய போக்கே தமிழகத்தில் பல கட்டடங்கள் விதிமுறை மீறி , தரமற்ற முறையில் கட்டப்படுகிறது.

இந்த கட்டட விபத்திற்கு சில தனியார் முதலாளிகளை மட்டுமே அரசு கைது செய்து எந்தப் பலனுமில்லை. இந்த விபத்திற்கு அரசே முழுப் பொறுப்பேற்று , சமந்தப்பட அரசு அதிகாரிகளை , மாநகராட்சி அலுவலர்களை தண்டிக்க வேண்டும், பணி நீக்கம் செய்தல் வேண்டும். பெரிய கட்டடங்களை கண்காணிக்கும் திறமை வாய்ந்த குழுவை ஒவ்வொரு மாநகராட்சியும்  உருவாக்க வேண்டும். கட்டடத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கு இந்த குழுவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் . புதிய கட்டடங்கள் மட்டுமின்றி பழைய கட்டடங்களின் உறுதித் தன்மையையும் இந்த குழு சோதனை செய்ய வேண்டும். அப்போது தான் இப்படியான விபத்துகளை எதிர்காலத்தில் தவிர்க்க இயலும். அரசு இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுகிறோம்.


[vuukle-powerbar-top]

Recent Post