Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலகின் மிகப்பெரிய சர்தார் பட்டேல் ஒற்றுமைக்கான சிலை . யாருடைய ஒற்றுமைக்கு ?

மோடி அரசு குஜராத்தை ஆட்சி செய்த போதே சர்தார் பட்டேலின் சிலையை நிறுவ வேண்டும் என முடிவெடுத்தார் . அதற்கு ஆகும் செலவு ரூபாய் 2000 கோடிகள் என அறிவிக்கப்பட்டது. இப்போது மோடி இந்திய பிரதமரான பின்பு சர்தார் சிலையை குஜாராத்தில் நிறுவ இந்திய ஒன்றியம் ரூபாய் 200 கோடிகளை கொடுப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

சரி , உண்மையில் சர்தார் பட்டேல் என்னும் குஜராத்தி இனத்தை, பட்டேல் வணிக சமூகத்தை சேர்ந்தவருக்கு உலகின் மிகப்பெரிய சிலையை நிறுவ வேண்டும் என்பது எதற்காக ? இந்த சிலையை ஒற்றுமையின் உருவகம் என்று சொல்வது எதற்காக ?

550 தன்னாட்சி கொண்ட சமஸ்தானங்களாக இருந்த பகுதிகளை இந்தியா என்ற ஒற்றை ஆட்சி வலைக்குள் கொண்டு வந்தவர் சர்தார் பட்டேல். இந்திய கூட்டமைப்பில் வர விரும்பாத பகுதிகளை ராணுவத்தை கொண்டு மிரட்டியும், பல சமஸ்தானங்களை வலுக்கட்டாயமாக இணைத்தவர் இவர். சுருக்கமாக கூறுவதென்றால் இந்திய துணை கண்டத்தில் உள்ள பல ஆளுமைகளை நசுக்கி ஒற்றை ஆளுமையின் கீழ் கொண்டு வந்தவர் இவர். இன்று இந்திய அரசும்,  இந்திய மக்களும் டாடா , பிர்லா , அம்பானிகளுக்கு நிரந்தர அடிமைகளாக மாற்றப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் சர்தார் பட்டேல் என்றால் அது மிகையல்ல.  ஏகாதிபத்திய வணிக முறையை சர்தார் நேரடியாகவும் மறைமுகமாக ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. அவர் காலத்திலேயே பெரு நிறுவங்களுக்கு சாதகமாக செயல்பட்டார். அதனால் இன்று இந்திய ஒற்றை ஆட்சி முறையில் பெரு நிறுவனங்கள் தான் அரசு முடிவுகளை, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின்  விலைவாசியை முடிவு செய்கின்றன. தேசிய இனங்கள் அனைத்தும் தன்னாட்சி உரிமைகள் இழந்து இன்று இந்தி வெறிபிடித்த அரசுக்கு கீழ் அடிமையாக இருக்கும் நிலைக்கு வந்த காரணமும் இவர் தான்.

சம நீதியும் சமூக நீதியும் வழங்கப்படாமல் இந்திய தேசங்களை ஒரு குடைக்குள் கொண்டு வருவது தான் ஒற்றுமையா என்ற கேள்வி எழுகிறது. இந்தி இந்துத்வா என்ற ஒற்றை குடைக்குள் அடைப்பது தான் நீதியா ? யாருடைய ஒற்றுமை இங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. தேசிய இனங்களுக்குள் இருக்கும் நீர் பிரச்சனை , எல்லை பிரச்சனை , கடல் உரிமை பிரச்சனை , இயற்கை சுரண்டல் பிரச்சனை என்று பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது அல்லது தீர்க்க முடியாதவாறு பார்த்துக் கொள்கிறது இந்திய அரசு . இந்த இலட்சணத்தில் ஒற்றுமைக்கான சிலை அமைப்பது என்பது ஏமாற்று வேலை இல்லையா? டாடா அம்பானிகளின் ஒற்றுமைக்கு வேண்டுமானால் இந்த நாடும் நாட்டு மக்களும் பயன்படலாம். அதனால் பெரு நிறுவனங்களுக்கு சர்தார் பட்டேலின் உருவ சிலை தேவைப்படலாம். உண்மையில் இந்தியாவில் இருக்கும் எவருக்கும் இவரது சிலை தேவை இல்லை . அதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் இத்தனை கோடிகள் சுரண்டப்படுவது அநீதியானது .

சர்தார் பட்டேல் ஏசுவை போலவோ, புத்தரை போலவோ , வள்ளுவரை போலவோ உலக மாந்தர்களுக்கு ஒரு பொது நெறியை வழிகாட்டவில்லை . இவர் இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியின் தலைவர்களுள் ஒருவர். அந்த அளவில் இவரை நினைவு கூறலாம் . ஆனால் போலியான எட்டப்படாத ஒற்றுமையின் சின்னம் என்று இவரை உருவகப்படுத்தி இவருக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை வைப்பது என்பது வீணான வேலை.







[vuukle-powerbar-top]

Recent Post