Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒரு அரசு பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் ?

ஒரு காலத்தில் தமிழக பிள்ளைகள் படிப்பதற்கு  பள்ளிகள் இல்லாமல் இருந்தது. காமராஜர் ஆட்சி  காலத்தில் பல சிரமங்களுக்கு நடுவே பல நூறு பள்ளிகளை அரசு திறந்து பல பிள்ளைகளுக்கு தாய் மொழிக் கல்வியை இலவசமாக வழங்கியது. அப்படிப் படித்து வந்தவர்கள் எல்லாம் இன்று பெரிய நிலையிலும் இருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய நிலை என்ன ? தாய் மொழியில் அரசு இலவசமாக கல்வி கொடுத்தாலும் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் அணியமாக இல்லை.  புற்றீசல் போல் உருவாகியுள்ள ஆங்கில தனியார் பள்ளிகளால் தாய் மொழி வழிக் கல்வி நிலையங்களுக்கு அரசு மூடுவிழா காண்கிறது. மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இப்போது அரசே ஆங்கில வழிக் கல்வியை அனைத்து அரசு பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பெற்றோர்கள் எந்த வழிக் கல்வியில் பிள்ளைகளை சேர்ப்பார்கள் ? அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் தான் மாணவர்களை சேர்ப்பார்கள் . ஆங்கில வழியில் படித்தால் தான் பெரிய நிலைக்கு போகமுடியும் என்ற தவறான பிம்பத்தை ஊடகங்கள் , திரைப்படங்கள் ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளன .

ரஜினிகாந்து  நடித்த ஒரு பழைய படத்தை பற்றி குறிப்பிட வேண்டும். படத்தின் பெயர் படிக்காதவன் . இப்படத்தில் சிறுவயதில் ரஜினி தனது தம்பியை ஆங்கில வழி பள்ளியில் படிக்க வைப்பார். தம்பி மூடிய காலணி, கழுத்து இருக்குப் பட்டை, வெள்ளை சீருடை  அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வான் . ரஜினியோ கூலித் தொழில் செய்து தம்பியை படிக்க வைப்பார். அந்த காலத்திலேயே அரசு பள்ளியில் படிக்க வைப்பது கேவலம் என்றும் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பது தான் அறிவுடைமை என்றும் தவறான மாயை மக்களிடையே புகுத்தப்பட்டது. இது தமிழக மக்களின் மனங்களின் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் . படத்தின் முடிவில் ஆங்கிலப் பள்ளியில் படித்த தம்பி தறுதலையாக மாறிப் போவான் என்பது வேறு விடயம் .

இப்படியாக கடந்த நாற்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழர்கள் தமிழ் வழியில் படித்தால் உருப்பட முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையில் வைக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவு தான் இன்று அரசு பள்ளிகளுக்கு மூடு விழா காண நேர்கிறது . தமிழ் வழியில் படித்தால் அறிவும், திறமையும், அன்பும் , பண்பும் வளரும் என அரசே மக்களை ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கே அரசு வேலை , மருத்துவ , பொறியியல் கல்லூரியில் இட ஒதுக்கீடு போன்ற சட்டங்களை நடைமுறை படுத்தி இருந்தால் இந்நேரம் தமிழக மக்கள் அனைவரும் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுத்து இருப்பார்கள் . மேலும் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் பயில வேண்டும் என்ற சட்டம் இயற்றினால் அரசு பள்ளியின் தரமும் உயர்ந்திருக்கும்.

இனியாவது அரசு தரமான தாய் மொழி கல்வியை  வழங்கவும், ஊக்குவிக்கவும் அதிரடியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் . புற்றீசல் போல் விரவிக் கிடக்கும் கட்டணப் பள்ளிகளுக்கு மூடுவிழா காண வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு அல்ல.



[vuukle-powerbar-top]

Recent Post