Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வை பொதிகை தொலைக்காட்சி மட்டுமே முழுவதும் ஒளிபரப்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் எவரையும் காணமுடியவில்லை. நியாயமாக தமிழக முதல்வரே நேரில் வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்க வேண்டும். தமிழகம் தழுவிய விழாவாக இதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். திராவிட அமைப்புகள், கட்சிகள் சோழர்களின் புகழ்பாட ஒருபோதும் முன்வர மாட்டார்கள் . அதேபோல் ஆரிய இந்துத்வா அமைப்புகளும் சோழர்களை சிறப்பிக்க முன்வர மாட்டார்கள். காரணம் சோழர்கள் தமிழ்த் தேசத்தின் பெருமைமிகு சின்னமாக விளங்குவதால் தான். சோழர்கள் தமிழ்த் தேசத்திற்கு ஆற்றிய தொண்டை நினைவு கூர தமிழ் ஆர்வலர்களும் கங்கை கொண்ட சோழபுரத்து மக்களுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சிங்களவன் தமிழீழ தேசத்தை 1.5 லட்சம் பேர்கள் கொண்ட ராணுவத்தை வைத்தே சிதைத்தான் கைப்பற்றினான். ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா ஒரு இலட்சம்  ராணுவ வீரர்களை கொண்டு பல சமஸ்தானங்களை மிரட்டி இந்தியாவோடு இணைத்தது. இராசேந்திர சோழன் 9 இலட்சம் போர் வீரர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் மேற்கு நோக்கி போகாமல் கிழக்கு நோக்கி படை எடுத்தான். அதன் விளைவு இன்று தமிழர்கள் அந்நியர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று சோழர்கள் இந்திய நிலப்பரப்பை முழுவதும் கைப்பற்றி இருந்தால் இன்று இந்தியாவின் அரசியலை தமிழர்கள் தீர்மானித்து இருப்பார்கள். வரலாற்றில் அப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் போனது நமக்கு வருத்தமே!

இவ்வளவு பெரிய நாவாய் படை, காலாற்படை, குதிரை படை, யானை படை வைத்திருந்த கடைசி தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் தான் . அவனுக்கு வரலாற்றை மாற்றும் வலிமை இருந்தது. பஞ்சாயத்து முறை , தேர்தல் முறை , வியக்க வைக்கும் நீர் பாசனம் , கட்டட கலை , சிற்பக் கலைகள் என பலவற்றையும் வழங்கியது சோழர்கள் தான்.  இவ்வளவு பெருமைமிக்க சோழர்களை தமிழ்ப் பகைவர்கள் இழித்தும் பழித்தும் பேசி வருகிறனர். பல தவறான ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இவர்களின் பேச்சைக் கேட்டு தமிழர்களும் இராசேந்திர சோழனுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவனது ஆயிரமாவது விழாவை சிறப்பாக கொண்டாட முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

வரலாற்றில் இருந்தே தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். நாம் பெருமை மிக்க வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என்பதை நாம் உணரவேண்டும். இழந்த நிலப் பகுதிகளையும் , மொழி வளத்தையும், தமிழர் இறையாண்மையையும் நாம் மீட்க வேண்டுமெனில் சோழர்களை நாம் நினைவு கூர்வது அவசியமாகும். அதற்கான வேலைகளை தமிழர்கள் நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். 
[vuukle-powerbar-top]

Recent Post