Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வியக்க வைத்த பண்டைய தமிழர்களின் போர்க்கலைகள் ஆய்வரங்கம் !

சனிக்கிழமை அன்று தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்திருந்த பண்டைய தமிழர்களின் போர்க்கலைகள் குறித்த ஆய்வரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் தமிழர்களின் போர்க் கருவிகள் , போர் முறைகள் எவ்வாறு உலக நாகரீகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பல்வேறு ஆதரங்களுடன் விளங்கினார் . உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் , இனங்களில் தமிழர்களின் போர் தந்திரங்கள் , போர் வழிமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன என்பதை ஒளிப்படங்கள் மூலமாக விளக்கினார். தமிழர்களின் தற்காப்பு கலைகளான களரி. குத்துவரிசை, மல்யுத்தம் , மல்லர்கம்பம், சிலம்பம் எவ்வாறு உலக நாடுகள் தனதாக்கிக் கொண்டது என்பதை விளக்கினார். மேலும் தமிழர்கள் பயன்படுத்திய ஈட்டி வகைகள் , அம்பு வகைகள், கொடுவாள் வகைகள் , போருக்கு பயன்படுத்திய யானை, குதிரை , தேர் வகைகள் குறித்து மிக ஆழமான புரிதலை ஏற்படுத்தினார் மணிகண்டன்.  சீனர்கள் அறிமுகப் படுத்திய வெடிமருந்துகளையும் பிற்கால தமிழர்கள் போருக்கு பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் கூறினார் . நேரமின்மையால் பல செய்திகளை அவரால் விளக்க முடியாமல் போயிற்று .

அடுத்து பேசிய கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் கடல் ஆளுமையை விளக்கினார் . வணிகத்தில் உலக நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய தமிழர்கள் , சீனர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் வணிகம் ஏற்படுத்த முடியாதவாறு தங்கள் கடல் படையை கொண்டு தடுத்து வந்தனர் என்பதை குறிப்பிட்டார் . அந்த காலத்திலேயே சர்வதேச வணிகத்தை தங்கள் கடல் ஆளுமையின் மூலமாக தமிழர்கள் கட்டுப்படுத்தினர் என்பதை விளக்கினார் ஒரிசா பாலு. மேலும் தமிழர்கள் அதற்கு பயன்படுத்திய கப்பல்கள் , கப்பல் கருவிகள் , திசைக்கருவிகள் , அறிவியல் தொழில் நுட்பங்கள் பற்றியும் விளக்கி வந்திருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். இப்படியான அறிவுக்கு சொந்தக்காரர்களா தமிழர்கள் என்று ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்தார் பாலு.

பிற்காலத்தில் தமிழர்களிடத்தே உருவான தாழ்வு மனப்பான்மை அவர்களை வீழ்த்தியது என்பதையும் பதிவு செய்தார். தமிழர் நிலங்களின் ஊடுருவிய ஆரிய திராவிடக் கருத்துக்களால் தமிழர்கள் இன்று தங்கள் சொந்த வரலாற்றை மறந்து நிற்கின்றனர் என்பது புலனாகியது . உலகமெங்கும் தமிழர்கள் ஆளுமை செலுத்தியதற்கான அத்துணை தரவுகளையும் ஒரிசா பாலு முன்வைத்தார் . குமரிக் கண்டம் குறித்து நாம் இலக்கியங்களில் படித்து உள்ளோம் . ஆனால் அதை நேரில் சென்று ஆய்வு செய்தவர் ஒரிசா பாலு என்பது குறிப்பிடத்தக்கது . இப்படியான ஆய்வுகள் தமிழக அரசிதழில் பதிவாகி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டால் தமிழர்கள் தாங்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறுவார்கள் என்பதை தெரிவித்தார் ஒரிசா பாலு.

இனிமேலும் தமிழர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை , தமிழ் மொழிக்கு எந்த பெருமையும் இல்லை என்று நம்மை நம்ப வைத்து அடிமைப்படுத்தும் ஆரிய திராவிட புளுகு மூட்டைகளை புறந்தள்ளி பெருமைமிகு தமிழர்களாக தமிழ்த் தேசத்தை கட்டி எழுப்புவோம். அதற்கு ஒரிசா பாலு, மணிகண்டன் போன்ற ஆய்வாளர்களின் ஆய்வு நமக்கு பெருமளவில் உதவி செய்யும். இந்த கருத்தரங்கை ஒழுங்கு செய்த தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு பாராட்டுகள் ! 
[vuukle-powerbar-top]

Recent Post