Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழை ஆட்சி மொழியாக்க சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் !

இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தியை முன்னெப்போதும் இல்லாதவாறு இந்தியை திணித்து வருகிறது  இந்திய அரசு. நடுவண் அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை கட்டாயமாக்கி வருகிறது. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 சென்னை ஊழியர்களுக்கு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் குறிப்பிட வேண்டி உள்ளது. அதுமட்டுமில்லாது வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஒன்றியத்தில் வாழும் அனைத்து தேசிய இன மக்களும் நடுவண் அரசு நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அதனால் நியாயமாக இந்த நிறுவனங்களில் இந்தி கட்டாயமில்லை என்ற நிலை இருந்து வந்தது . ஆனால் இந்தி திணிப்புக்கு ஆதரவான நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தியை எல்லா தளங்களிலும் கட்டாயப்படுத்தி வருகிறது. நடுவண் அரசு ஊழியர்கள் அனைவரும் பதிவேட்டில் இந்தியில் கையெழுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. இது இந்தி அல்லாத தேசிய இனங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தொடர்வண்டி துறையில் இதுவரை பயணிகள் பெயர் பட்டியல் தமிழில் இல்லை . இந்தியில் தான் முதன்மையாக எழுதப்பட்டுள்ளது . தொடர்வண்டித்துறை முன்பதிவு இணையதளம் இந்தியிலும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதே போல் வங்கி சேவைகளிலும் தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நடுவண் அரசு இந்தியை மட்டுமே இந்த நிறுவனங்களில் ஊக்குவிக்கிறது . மாநில மொழிகளை பயன்படுத்துவது இல்லது.  இந்தியை திணிப்பதற்கு இந்தி அதிகாரி ஒருவரையும் எல்லா நிறுவனங்களிலும் நியமித்து உள்ளது நடுவண் அரசு . இந்த இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு பல கோடிகள் இந்த அல்லாத மக்களின் வரிப்பணம் செலவாகிறது.

எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியைத் தான் அலுவல் மொழியாக இந்திய அரசு பயன்படுத்த வேண்டும். அது தான் நீதியாகும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இன்னொரு மாநில மொழியான இந்தியை பிற மாநிலங்களில் கட்டாயப்படுத்துவது மிகப்பெரிய சர்வாதிகார நடவடிக்கையாகும்.

இதை தமிழர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது.  இப்போது சில வழக்கறிஞர்கள், தமிழ் உட்பட 22 மொழிகளையும் இந்திய ஆட்சி மொழியாக்க வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். இந்த வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக அரசு இந்திய அரசின் மொழித் தீண்டாமை கொள்கையை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தித் திணிப்பை நிரந்தரமாக தடுக்கவும், தமிழகத்தில் செயல்படும் நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கவும், இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாகவும் நடைபெறுகின்ற சட்டமன்ற கூடத் தொடரில் தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானம் இயற்றி மொழி சமயுரிமைக்கு குரல் கொடுக்குமாறு தமிழர்கள் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இந்த கோரிக்கைக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் குரல் கொடுக்க வேண்டும் .

நன்றி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

[vuukle-powerbar-top]

Recent Post