Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

 முடிவுக்கு வந்தது பிரேசில் நாட்டின் உலகக் கோப்பை கால்பந்தாட்ட மோகம் . . பிரேசிலிடம் இருந்து பாடம் படிக்குமா இந்தியா?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை  பிரேசில் நாட்டில் நடத்த பிரேசில் கொடுத்த விலை மிக  மிக அதிகம். இந்த போட்டியின் மூலமாக பிரேசில் நாட்டின் பொருளாதரத்தை உயர்த்தலாம் என்று திட்டமிட்ட பிரேசில் அணி உள்நாட்டில் உள்ள ஏழைகளை பற்றி கவலைப்படவில்லை. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் பிரேசில் நாட்டில் உள்நாட்டு , வெளிநாட்டு சுரண்டல்களுக்கு பஞ்சமில்லை. இன்று அவரை அதை சீர் செய்ய பிரேசில் அரசால் முடியவில்லை.  உலகின் மிக வளமையான நாடு என்று கருதப்படும் இந்த நாட்டில் தான் உலகின் மிகப்பெரிய 'பவேலா' எனப்படும் சேரிகளும் உள்ளது. மக்களுக்கு தரமான கல்வியை அந்நாட்டு அரசு கொடுக்க முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தை போல நாடெங்கிலும் சமமான  பொருளாதாரத்தை பகிர்ந்தளிக்க முடியவில்லை.

இப்படி ஒரு சூழலில் கால்பந்து போட்டியை நடத்துவதின் மூலமாக  உலகின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியது பிரேசில் அரசு . பிரேசில் அரசின் இந்த திட்டத்தை பிரேசில் நாட்டின் புரட்சிகர அமைப்புகளும் , ஒடுக்கப்பட்ட மக்களும் கடுமையாக எதிர்த்தனர். ஒருவேளை  உணவை எல்லோருக்கும் வழங்க முடியாத இந்த நாட்டிற்கு கால்பந்து விளையாட்டு ஒரு கேடா என ஒவ்வொரு நகரங்களிலும் பரப்புரை செய்தது சமூக இயக்கங்கள். வீதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். காரணம் இந்த உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டிற்காக தெருக்களில் வசிக்கும் பல்லாயிரம் மக்கள் காவல்துறையால் விரட்டி அடிக்கப்பட்டனர். செயற்கையான முறையில் நகரங்களில் வாழும் ஏழ்மை, வறுமை மூடி மறைக்கப்பட்டது. அரசின் ஒடுக்குமுறை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓங்கியது.

பிரேசில் மக்களுக்கு கால்பந்து விளையாட்டு என்பது அவர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்துள்ள ஒரு முக்கிய அம்சமாகும். திட்டத்தட்ட பிரேசில் நாட்டின் இறையாண்மை போலவே கால்பந்தும் கருதப்படுகிறது . அப்படி இருந்தும் உலகக் கோப்பை கால்பந்துக்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி பெரும் போராட்டங்கள் வெடித்தன. உலகக் கோப்பை தொடங்கிய முதல் நாளிலேயே கால்பந்து திடலுக்கு வெளியே மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டது  உலக ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது. வீதிகளில் , தொடர்வண்டிகளில் , சாலைகளின் தரையில் எல்லா இடங்களிலும் உலகக் கோப்பை போட்டிக்கு எதிரான வாசகங்கள் இடம்பிடித்தன. இந்த வாசகங்களை பிரேசில் அரசால் முற்றிலும் அழிக்க முடியவில்லை.  உண்மையை மூடி மறைக்க முடியவில்லை. புரட்சிகர பிரேசில் மக்கள் தங்களுக்கு கால்பந்தை விட ஏழை எளிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றம்  தான் தேவை  என்பதை ஆணித்தரமாக பதிவு செய்தனர். இதற்காக உண்மையில் பிரேசில் மக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும் .

இப்போது இந்திய நாட்டிற்கு வருவோம் . இந்தியாவும் பிரேசில் நாட்டை போன்றே பொருளாதார சமமில்லாத , பல்லின மக்கள் வாழும் நாடாகும் . பிரேசில் நாட்டில் இருக்கும் ஏழ்மையை விட பன்மடங்கு வறுமையை பல மாநிலங்கள் சந்தித்து வருகின்றன . வீடில்லாதவர்கள், கல்வி இல்லாதவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும். இருந்தாலும் இந்திய அரசு, இந்தியா ஒரு வல்லரசு என காட்டிக் கொள்ள நிலவுக்கு , செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி பல கோடிகளை வீணடிக்கிறது. இதை தட்டிக் கேட்கும் மக்களை தேசத் துரோகிகள் என்ற பட்டம் கொடுக்கிறது.

எல்லா மாநில மக்களுக்கும் சம நீதி , சம உரிமை மறுக்கப்பட்டதை மறைத்து கிரிக்கெட் போட்டிகளின் மூலமாக செயற்கையான தேசபக்தியை இந்திய நாட்டு மக்களிடம் திணிக்கிறது இந்திய அரசு . இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத இந்திய மக்களும் கிரிக்கெட் போட்டிகள் தான் நாட்டின் பெருமை என நினைத்து நாட்டின் உண்மையான பிரச்சனைகள் குறித்து ஆராய முன்வருவதில்லை. இது இந்திய ஆட்சியாளர்களுக்கு பெரும் நன்மையை பயக்கிறது. எந்த விளையாட்டு துறையிலும் முன்னேறாத இந்தியா , கிரிக்கெட் என்னும் ஒற்றை விளையாட்டை  வளர்ப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறது . இது இந்திய அரசுக்கு மறைமுகமாக உதவுகிறது.  உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து கவலைபடாத , கிரிக்கெட் தேசப் பற்றாளர்களை உருவாக்க கிரிக்கெட் விளையாட்டு பெருமளவில் உதவுகிறது. அதனால் தான் இங்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு எந்த எதிர்ப்பும் இதுவரை கிளம்பவில்லை.

நாட்டு மக்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள், நமக்கு கிரிக்கெட் ஒரு கேடா என எந்த அமைப்பும் போர்க் கொடி தூக்கவில்லை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், ஈழத்தில் 1.5 லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் இந்திய மக்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராட முன்வரவில்லை. அப்படி ஒரு மயக்கத்தில் மக்களை வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் நிறுவனம். செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய கிரிக்கெட் நாயகர்கள் மக்களை தங்கள் பக்கம் எப்போதும் ஈர்த்த வண்ணமே உள்ளனர் . இது இந்திய அரசுக்கு நெடுக்கடியில் இருந்து தப்பிக்க வழிவகை செய்கிறது. ஊடகங்களும் கிரிக்கெட் விளையாட்டையும் , நாயகர்களையும் ஊதி ஊதி பெரிதுபடுத்துவார்கள். மக்களின் கவனத்தை எப்போதும் கிரிக்கெட் பக்கமே இருக்கும் படி செய்வார்கள். இந்த உண்மை நிலையை பொது மக்கள் உணர மறுக்கின்றனர்.

இந்த நிலையில் தான் நாம் பிரேசில் நாட்டில் நடைபெறும் கால்பந்துக்கு எதிரான போராட்டங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பிரேசில் கால்பந்து அணி ஜெர்மனி நாட்டு அணியிடம் தோற்றது ஒருவிதத்தில் அம்மக்களுக்கு கிடைத்த நன்மை தான் . இனிமேலாவது பிரேசில் அரசு கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்களின் முன்னேற்றத்திற்கு கொடுக்கும் என நம்பலாம் . விளையாட்டு என்ற மாயை அகன்று வாழ்க்கை என்ற யதார்த்த நிலையை அரசு கவனத்தில் கொள்ளலாம். பிரேசில் நாட்டில் இப்போது காணப்படும் சமூக விழிப்புணர்வு கூட இந்திய நாட்டில் இல்லை என்பது தான் வேதனையான விடயம் . செயற்கையாக உருவாக்கட்ட  கிரிக்கெட் மோகம், நிலவு விண்கலன், செவ்வாய் விண்கலம் , ஏவுகணைகள், அணு உலைகள், செயற்கைக்கோள் களங்கள் போன்றவற்றில் மக்கள் மயங்காமல் உண்மையான நாட்டின் முன்னேற்றத்திற்கு , சமூக நீதிக்கு, அதிகாரப் பகிர்வுக்கு, இன மொழி விடுதலைக்கு மக்கள் போராட முன்வர வேண்டும். அதை வரும் தலைமுறை தான் விரைந்து முன்னெடுக்க வேண்டும் .


[vuukle-powerbar-top]

Recent Post