Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய சுதந்திர தினத்தில் பிரதமர் அவர்கள் பேசிய பேச்சு..

௧. இத்தனை ஆண்டுகள் இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக வைத்து பல தேசிய இனங்களுக்கும், அவர்களின் மொழிகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. 68 ஆண்டுகளாக இந்தி எல்லா வகையிலும் திணிக்கப்பட்டது . இனி அப்படியான திணிப்பு இருக்காது. இந்திக்கு மட்டுமே ஆட்சி மொழி என்னும் தகுதி வழங்கப்படாது. மாநில மொழிகள் அனைத்திற்கும் இந்திக்கு நிகரான ஆட்சி மொழி அதிகாரம் வழங்கப்படும்.

௨. ஆங்கிலேயர்களிடம் இருந்து பாடுபட்டு பெற்ற விடுதலைக்கு அனைத்து தேசிய இன மக்களுக்கும் பங்கு உள்ளது.  எல்லா மொழியினரும் இந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர். அதனால் மொழி வழி மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க அம்மாநிலன்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க இனி இந்திய நடுவண் வழிவகை செய்யும்.

௩. அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க நில உரிமை சட்டத்தை அந்தந்த மாநிலங்களே நிறைவேற்றிக் கொள்ளலாம். மாநிலங்களின் உடமைகளிலும் உரிமைகளிலும் இனி நடுவண் அரசு தலையிடாது.

௪. மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை நடுவண் அரசு அளித்தாலும் இனி மாநிலங்கள் எத்தகைய வளர்ச்சியை விரும்புகிறதோ அதை அடைவதற்கு முழு சுதந்திரம் மாநில அரசுக்கு வழங்கப்படும்.

௫. கல்வியும், பள்ளிகளும் இனி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் . மாநிலங்களின் கல்வி உரிமைகளில் நடுவண் அரசு தலையிடாது . இந்தியோ, சமற்கிருதமோ எவர் மீதும் திணிக்கப்படாது என்பதை உறுதி அளிக்கிறோம். தாய் மொழிக் கல்வியை தொடக்கக் கல்வியாக்கவும் , தாய் மொழிக்கே அனைத்து மாநிலங்களிலும் முன்னுரிமை வழங்கவும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது .

௬. நடுவண் அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநில மக்களையே வேலைக்கு அமர்த்துவோம் . அந்த மாநில மொழியை அலுவல் மொழியாக்கி மொழி , இன சம உரிமையை பாதுகாப்போம் .

இப்படியெல்லாம்  இந்தியப் பிரதமர் சொல்லவேண்டும் என்று தான் நாம் ஆசைப்படுகிறோம். ஆனால் அது வெறும் கனவாகவே இத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டது . இனிவரும் காலங்களிலாவது இந்திய ஒன்றிய மக்கள் உண்மையான சுதந்திரத்தை பெறுவதற்கு போராட முன்வரவேண்டும். அப்படி போராட முன்வந்தால்  ஒரு நாள் மேற்கூறப்பட்ட அனைத்தும் நிச்சயம் சாத்தியமாகும். இந்திய ஒன்றிய மக்கள் அனைவரும் மொழி, இனம், பண்பாட்டு உரிமையுடன் வளர்ச்சியை நோக்கி நகர்வார்கள்.

ஒன்றுபடுவோம் வென்றுகாட்டுவோம் !

  
[vuukle-powerbar-top]

Recent Post