Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழை புறக்கணித்து இந்தியை திணிக்கும் வங்கிப் பண இயந்திரங்கள்.   இந்தித் திணிப்பை எதிர்த்து பரப்புரை வாசகங்கள் ஒட்டப்பட்டது!

தமிழகமெங்கும் உள்ள இந்திய தேசிய வங்கிகள் பலவும் தமிழை எல்லா வகையிலும் புறக்கணித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டாலும், இந்தி மொழி மட்டும் வலிந்து திணிக்கப்பட்டு வருகிறது. வங்கி சேவைகளில் தமிழ் இல்லை. வங்கிகளின் பணம் வழங்கும் இயந்திரங்களிலும் (ஏ.டி.எம்) தமிழ் இல்லை. எத்தனையோ முறை இந்த பண இயந்திரங்களில் தமிழ் சேவை வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் வங்கிகள் அதற்கு செவி சாய்ப்பதில்லை.

அதனால் தமிழர் பண்பாட்டு நடுவம் பண இயந்திரங்களில் திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து 'இந்தித் திணிப்பை நிறுத்து ' இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல', 'அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கொடு ' போன்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டிகளை தமிழைப் புறக்கணிக்கும் பணம் வழங்கும் நிலையங்களில் ஒட்டி வருகிறது. இப்போது தான் இந்த பரப்புரை தொடங்கி உள்ளது. நேற்று சுமார் பத்து நிலையங்களில் இந்த பரப்புரை ஒட்டிகள் ஒட்டப்பட்டன. இதை சென்னை நகர் முழுவதும் உள்ள அரசு , தனியார் பணம் வழங்கும் நிலையங்களிலும் எடுத்துச் செல்வோம். தமிழ் இல்லாத பண இயந்திரங்கள் தமிழகத்தில் எங்குமே இருக்கக் கூடாது என்பதே இந்த பரப்புரையின் நோக்கம்.

இதே போல தொடர்வண்டி, வானூர்தி , அஞ்சல் சேவைகள் என அனைத்து தளங்களிலும் இது போன்ற எதிர்ப்பு பரப்புரையை தமிழர்கள் நாம் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்யாமல் தமிழ் மொழிக்கு சம உரிமை கிடைக்காது. எங்கெங்கு இந்தி திணிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இது போன்ற வாசகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் நாம் ஒட்டுவோம். இதனால் வெளிமாநில மக்களுக்கும் அவர்கள் மொழி உரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இந்த பரப்புரையில் எங்களோடு சேர்ந்து செயல்பட  விருப்பமுள்ள தோழர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு தேவையான ஒட்டிகளை இலவசமாக நாங்கள் வழங்குவோம். மொழி சம உரிமை எட்டப்படும் வரும் இது போன்ற பரப்புரைகள் தொடரும்.   
[vuukle-powerbar-top]

Recent Post