Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அலைப்பேசி சேவையில் இந்தி மொழித் திணிப்பு மற்றும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை இல்லை !! என்ன செய்யலாம் ? 

தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் பல்வேறு அலைபேசி சேவைகளில் இப்போது அறிவிப்புகள் மாற்றம் பெற்றுள்ளதை பார்க்கலாம். நாம் யாராவது ஒரு நபரை அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டால் அந்த நபர் நம் அழைப்பை எடுக்கவில்லை என்றாலோ அல்லது அந்த நபரின் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தாலோ நமக்கு அந்த நபரின் அலைபேசி நிறுவனம் அறிவிப்பு கொடுக்கும். அந்த அறிவிப்பானது முதலில் தமிழில் இருக்க வேண்டும். காரணம் தமிழகத்தின் ஆட்சி மொழி தமிழ் மொழியே. அதற்கு பின்னர் ஆங்கிலம் இருக்கலாம். காரணம் அது தமிழ் தெரியாத வெளிமாநில மக்களுக்கு இணைப்பு மொழியாக பயன்படுகிறது. ஆனால் இந்த அறிவிப்புகள் நிலைமை இவ்வாறு இல்லை. 

இப்போது பெரும்பான்மையான  அலைபேசி நிறுவனங்களும் முதலில் ஆங்கிலத்தில் அறிவிப்புகளை கொடுக்கிறது. பிறகு தமிழில் அறிவிப்பு கொடுக்கிறது. இதற்கு மேலும் ஒரு கொடுமை என்னவெனில் முடிவில் இந்தியிலும் அறிவிப்பு கொடுக்கிறது. இது குறித்து போதிய விழிப்புணர்வு தமிழ் மக்களுக்கு இல்லாத காரணத்தால் தமிழ் மொழி பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியும் நாம் கேட்காமலே திணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த அலைபேசி நிறுவனங்கள் வணிகம் செய்ய நாம் உரிமம் வழங்கி உள்ளோம். இவர்கள் மொழியை நம் மீது திணிக்க நாம் யாருக்கும் உரிமை வழங்கவில்லை. தமிழகத்தின் மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கையே ஆகும். முதலில் தமிழும் அதன் பின் ஆங்கிலமும் இடம்பெறலாம். இந்தி திணிப்பு கூடவே கூடாது. இதன் அடிப்படையில் தான் அலைபேசி நிறுவனங்கள் மட்டுமல்லாது அனைத்து நிறுவனமும் செயல்பட வேண்டும். 

இந்தி தேசங்களில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே அலைபேசி சேவைகளில் பயன்படுத்தப்படுகிறது. வேற்று மொழித் திணிப்புகள் அங்கு இல்லை. தமிழ்த் தேசத்தில் மட்டும் ஏன் வேற்று மொழிகள் திணிக்கப்படுகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். தமிழுக்கும் முன்னுரிமை வழங்காத , இந்தியை திணிக்கும் நிறுவனங்களை நாம் தட்டிக் கேட்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் அலைபேசி சேவைகளில் தமிழ் முன்னுரிமை பெறாமல், இந்தியும் திணிக்கப்பட்டால் தயவு செய்து உங்கள் அலைபேசி சேவை உதவி எண்ணை அழைத்து இது குறித்து புகார் அளியுங்கள். நாம் ஒவ்வொருவரும் அளிக்கும் புகார் தான் மாற்றத்தை ஏற்படுத்தும். இல்லையெனில் நாளை இந்தி அறிவிப்பே முன்னிலை வகிக்கும். தமிழ் மூன்றாம் இடத்திற்கு சென்று விடும். 

அலைபேசி நிறுவனங்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை: 

௧. அலைபேசி சேவை அறிவிப்புகள் முதலில் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் இருக்க வேண்டும். 

௨. அடுத்தது ஆங்கிலம் இருக்கலாம். 

௩. இந்தி திணிப்பு அறவே இருக்கக் கூடாது . 

தமிழ் மக்களின் மொழியுரிமை குறித்து இந்த நிறுவனங்களுக்கு நாம் புரிய வைப்போம். நம்மிடம் பணம் பெற்றுக் கொண்டு நம்மிடமே வேற்று மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அலைபேசி நிறுவனங்களுக்கு நாம் இந்த அறைகூவல் விடுப்போம். நம் மொழிக்கு முன்னுரிமை கொடு, இந்தியை திணிக்காதே  அல்லது எம் மண்ணை விட்டு வெளியேறு !    



[vuukle-powerbar-top]

Recent Post