Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிள்ளையார் நான்மி (விநாயகர் சதுர்த்தி) கொண்டாடும் தமிழர்களின் கவனத்திற்கு!  

தமிழ்ச் சித்தர்கள் உருவாக்கிய அறிவுக் கடவுளான யானை முகத்தனை பல காலமாக தமிழர்கள் வழிபட்டு வந்துள்ளனர். ஞானத்தின் குறியீடாக யானையை முன்னிறுத்தினர் சித்தர்கள். தங்கள் பாடல்களின் முதல் காப்பு பாடலை பிள்ளையாருக்கு வைத்து மரியாதை செலுத்தினர். பிற்காலத்தில் ஆரிய புராணங்களில் பிள்ளையார் சேர்க்கப்பட்டு பிள்ளையாரோடு  பல தெய்வங்கள், உறவுகள் , கட்டுக் கதைகளை இணைத்தனர் ஆரிய மதத்தினர்.

ஒளவையார் பிள்ளையாரின் பின்புலத்தில் உள்ள மெய்யியல் கோட்பாட்டை விநாயகர் அகவல் என்னும் நூலில் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு வடநாட்டு ஆரிய நூல்களில் இப்படியான விளங்கங்கள் இல்லை எனலாம் . பிள்ளையார் ஆரியர்களின் கண்டுபிடிப்பு என்ற பொய்யை சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழர் உலகம்  அமைப்பு ஆதாரப் பூர்வமாக ஆய்வு செய்து முறியடித்தது. அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் காணொளி ஆரிய இந்துத்வாவாதிகளுக்கு   அதிர்ச்சியை தந்தது.

தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை திருடி தமதாகிக் கொண்ட ஆரியக் கூட்டம் பின்னர் பல்வேறு புனைவுகளை  , நூல்களை உருவாக்கி முற்றிலும் ஆரியமயப்படுத்தியது . யானை என்பது தென்னாட்டில் அதிகமாக காணப்படும் விலங்கு என்பதையும், அதை தமிழர்களே பெருமளவில் பயிற்றுவித்து வந்துள்ளனர் என்பதையும் நாம் உற்று நோக்க வேண்டும் .

சரி விடயத்திற்கு வருவோம். வரும் பிள்ளையார் நாளில் தயவு செய்து ரசாயனம் இல்லாத களிமண் பிள்ளையாரை வைத்து வீட்டில் கொழுக்கட்டை, முறுக்கு, சீடை  முதலிய  பலகாரங்கள் செய்து எளிமையான முறையில் வழிபாடு செய்து பின்னர் அந்த களிமண் சிலையை நீர் நிலைகளில் மாசுபடாதவாறு கரைத்து விடவும். பிரமாண்ட பிள்ளையார், இரசாயன  பிள்ளையார், ஆடம்பர பிள்ளையார் சிலைகள்   வைப்பதை தவிர்த்தல் வேண்டும். காரணம் அது பிற்காலத்தில் வடநாட்டு ஆரிய மதத்தினர் ஏற்படுத்திய வழக்கமாகும். அது தமிழர்களின் பண்பாடு அல்ல.

மேலும் இந்துத்வா அமைப்பினருடன்  சேர்ந்து பிரமாண்ட  ஊர்வலம் செல்வது, மற்ற மதத்தினரை அச்சுறுத்துவது போன்றவற்றை  தமிழர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவும். எந்த தருணத்திலும் பிள்ளையாரை சமஸ்கிருத மொழியில் வழிபட இடமளிக்க  வேண்டாம். தமிழில் மட்டுமே  வழிபாடு செய்யவும் . கோவிலுக்கு சென்றாலும் தமிழில் வழிபாடு செய்ய பூசகரை வலியுறுத்தவும். தமிழ் பாடல்களை மட்டுமே இல்லங்களில் ஒலிக்கச் செய்யவும். தெருக்களில் ஒலிமாசு ஏற்படும்படி அதிக ஓசையுடன் பாடல்கள் ஒலிக்க வேண்டாம்.

இவ்வாறு பிள்ளையார் நாளை எளிமையாக அன்புடன், பண்புடன், அமைதியான வழியில் தமிழர்கள் கொண்டாட வேண்டுமாறு என்று கேட்டுக் கொள்கிறோம்.
[vuukle-powerbar-top]

Recent Post