Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காலத்தினால் செய்த உதவி - நல்ல மனிதர்கள் என்றும் வாழ்கின்றனர்  !

நேற்று இரவு குடும்பத்துடன் ஒரு நிகழ்சிக்கு சென்று விட்டு மகிழுந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். வரும் வழியில் கடைகளோ, வீடுகளோ, ஆட்கள் நடமாட்டமோ இல்லாத இடத்தில் மகிழுந்து திடீரென்று நின்று விட்டது. அப்போது நேரம் 11 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.  மகிழுந்தின் மின்கலவடுக்கு முழுவதும் தன்னுடைய மின்னாற்றலை இழந்து விட்டது. அதனால் மகிழுந்து முற்றிலும் இயங்காமல் அப்படியே நின்று விட்டது. நாங்கள்  தள்ளிவிட்டும்  மகிழுந்தை இயக்க முடியவில்லை. குழந்தையை வேறு வைத்திருந்தோம். அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அந்த வழியே ஒரு மகிழுந்தில் பயணம் செய்த சில இளையோர்கள் அவர்கள் ஊர்தியை நிறுத்தி ஏதேனும் உதவி வேண்டுமா என ஆங்கிலத்தில் வினவினர். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . ஆனால் அந்த மகிழுந்தில் ஏற்கனவே இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் இருந்தனர். அதனால் அவர்களால் யாரையும் கூடுதலாக ஏற்றுக் கொண்டு போக முடியவில்லை. அதனால் அவர்களுக்கு நன்றி சொல்லி வழி அனுப்பினோம்.

அடுத்து இருசக்கிர வாகனத்தில் ஒருவர் வந்தார். அவரும் ஏதுனும் நமக்கு உதவ முடியுமா என்று பார்த்தார். ஊர்தியை தள்ளி விட்டும் பார்த்தார். மகிழுந்து கருவிகளை சரி பார்த்தார் அவராலும் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அதனால் அவருக்கும் நன்றி சொல்லி வழி அனுப்பினோம். அதன் பிறகு நான்கு தமிழ் இளைஞர்கள் ஒரு மகிழுந்தை ஒட்டிக் கொண்டு எங்கள் அருகில் வந்து நின்றனர்.  பிரச்சனை என்னவென்று பார்த்தனர். மின்கலன் முற்றிலும் செயலிழந்து விட்டது என்பதை கணித்தனர். ஏதாவது வகையில் எங்களுக்கு உதவ வேண்டும் என எண்ணினர். இந்த நிலையில் குழந்தையை வைத்துக் கொண்டு பெண்களும் இருப்பதை பார்த்து, அவர்கள் தங்கள் மகிழுந்தை என்னிடம் கொடுத்து முதலில் பெண்களையும் குழந்தையையும் வீட்டில் விட்டு விட்டு வருமாறு கூறினர். நானும் எனது குடும்பத்தை அவர்கள் மகிழுந்தில் ஏற்றிக் கொண்டு குடும்பத்தை வீட்டில் கொண்டு வந்து சேர்த்தேன்.

பிறகு இயக்க முடியாத நிலையில் இருந்த என்னுடைய மகிழுந்து இருக்கும் இடத்திற்கு விரைந்தேன். உதவி செய்த இந்த அறிமுகமாகாத நண்பர்கள் அவர்களுடைய மகிழுந்தில் இருந்த மினகலவடுக்கை என்னுடைய மகிழுந்தில் பொருத்தி என்னுடைய மகிழுந்தை இயக்கிக் கொடுத்தனர். பிறகு என்னுடைய மகிழுந்தை அவர்கள் மின்கலத்தின் துணையுடன் என்னுடைய வீடு வரை ஒட்டி வந்தேன். வீட்டில் மகிழுந்தை விட்டபின்பு  அந்த மின்கலத்தை கழற்றி அதை தானியில் வைத்துக்கொண்டு அதை நண்பர்களின் மகிழுந்தில் பொறுத்துவதற்கு புறப்பட்டோம்.  அவர்களுடைய  மகிழுந்தில் மீண்டும் அந்த மின்கலவடுக்கை பொருத்தி அவர்களுடைய மகிழுந்தை இயக்கினார்கள் அந்த நண்பர்கள். பிறகு நான் வந்த அதே தானியில் வீடு திரும்பினேன். இந்த நிகழ்வு முடிய சுமார் இரண்டு மணிநேரம் பிடித்தது. இப்படியான உதவியை செய்தவர்களுக்கு வெறும் நன்றியை மட்டுமே தெரிவித்துக் கடந்து விட முடியாது. இருப்பினும் நள்ளிரவு நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை அவர்களுக்கு உரித்தாக்கி அவர்களின் தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு விடை பெற்றேன்.

இந்த இளைஞர்கள் யார் என்னவென்று தெரியாது. இருப்பினும் இவர்களுக்கு, நமக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

'செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.'

என்ற வள்ளுவ வாசகத்திற்கு இணங்க இந்த இளைஞர்களின் உதவி அமையப் பெற்றுள்ளது. எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் என் குடும்பத்தையும் , என்னையும், எனது மகிழுந்தையும் நல்லபடியாக வீடு கொண்டு வந்து சேர்த்த அந்த நல்லுலங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தமிழர்களின் இயல்பான ஒப்பற்ற உதவும் குணத்தை கண்டு எம்மினத்தின் மீது எனக்கு அளவு கடந்த மரியாதையும் பெருமையும் மேலிட்டது.

இதைப் பற்றி சொல்வதற்கு என்ன காரணம் ? என்னைப் போல பலரும் சில நேரங்களில் துன்பத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற உதவும்  குணத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் பலரின் துன்பங்களை நாம் களையலாம். வள்ளுவரின் குறட்பாக்களை படிப்பதோடு நில்லாமல் அந்த குறளுக்கு தக்கவாறு நாம் நடந்து கொள்ளும் போது எது எவ்வளவு பெரிய நன்மையை தருகிறது! இன்று பிறருக்கு செய்யும் உதவி பிற்காலத்தில் அது நமக்கு வேறு ஒருவரின் மூலமாக நம்மை வந்தடைகிறது. அதனால் முடிந்தவரை நாம் பிறருக்கு உதவி செய்வோம். எனக்கு தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டிய அந்த நான்கு இளைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முகநூலில் மட்டுமல்ல நேரிலும் அவர்களை சந்தித்து தெரிவித்துக் கொள்வேன். நல்லவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.



[vuukle-powerbar-top]

Recent Post