Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காஷ்மீர் பேரிடரை வைத்து இந்திய தேசிய உணர்வை தூண்டும் இந்திய ஊடகங்கள் !

அண்மையில் காஸ்மீர் தேசத்தில் ஏற்பட்டுள்ள  வெள்ளப் பேரிடர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட காஷ்மீர் தேசத்திற்காக உதவ முன்வந்துள்ளனர். தமிழக அரசு தனது பங்கிற்கு நிதி உதவி செய்துள்ளது. இந்த பேரிடரில் காஷ்மீர் தேசத்தை இத்தனை ஆண்டுகள் சொந்தம் கொண்டாடும் இந்திய அரசு தனது ராணுவத்தை வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த மீட்பு பணியின் போது ராணுவம் செய்த மீட்பு பணிகளையும், கட்டுமானப் பணிகளையும்  படங்களாக , செய்திகளாக எடுத்து இந்திய தேசிய ஊடங்கள் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு இந்திய ராணுவத்தை புகழ்த்து தள்ளி வருகிறது. பொதுவாக கிரிக்கெட் போட்டிகளை வைத்து இளைஞர்களின் தேசப் பக்தியை தூண்டி விடும் ஊடகங்கள் , இப்போது ராணுவத்தை வைத்து தூண்டி வருகிறது. இந்த செய்திகளை இந்திய தேச பக்தர்கள் பெருவாரியாக பகிர்ந்தும் வருகின்றனர்.

நம்முடைய கேள்வி. இந்திய ராணுவத்தின் மீட்புப் பணிகளை செய்தியாக்கி புகழும் இந்திய ஊடகங்கள் ஏன் இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியங்களை பற்றி வாய் திறக்கவில்லை ? ராணுவ சிறப்பு சட்டம் மூலமாக கொல்லப்படும் மக்களை பற்றி ஏன் பேசவில்லை? ராணுவத்தால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் மணிப்பூர், காஸ்மீர் பெண்களைப் பற்றி ஏன் பேசவில்லை? இரோம் சர்மிளாவின் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தை பற்றி ஏன் பேசவில்லை. இந்திய காடுகளில் ராணுவம் நடத்தும் பச்சை வேட்டைப் பற்றி ஏன் பேசவில்லை?

காஷ்மீரில் ஏற்பட்ட பேரழிவில் மீட்டுப் பணியில் ஈடுபடும் பொறுப்பு அங்கே நிரந்தமாக நிலை கொண்டுள்ள இந்திய ராணுவத்தையே சாரும். தமிழகத்தில் ஏற்பட்டாலும் இந்திய ராணுவம் தான் மக்களை மீட்க வேண்டும். காரணம் காஸ்மீருக்கு , தமிழ்நாட்டிற்கு தனியாக ராணுவம் இல்லை. தமிழகத்திற்கு தனி ராணுவம் இருந்தால் மீனவர்கள் தாக்கப்படும் போது தமிழக ராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

காஷ்மீர் மக்களுக்கு சொல்லவொண்ணா துன்பத்தை இத்தனை ஆண்டுகள் இந்திய ராணுவம் கொடுத்து வந்துள்ளது. காஷ்மீர் தேசத்தை விட்டு ராணுவம் முழுமையாக வெளியேறினால் மட்டுமே காஷ்மீர் மக்களுக்கு உண்மையான நிம்மதி கிடைக்கும். பேரிடரின் போது மக்களை மீட்பதை விட ராணுவம் காஷ்மீரை விட்டு வெளியேறுவதையே அம்மக்கள் விரும்புகிறார்கள். மேலும் காஷ்மீர் தேசத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அம்மக்கள் இந்தியாவுடன் வாழ விரும்புகிறார்களா என்று இந்திய அரசு அறிய முற்பட வேண்டும். அதற்காக இந்திய ஊடங்கங்கள் குரல் கொடுக்க வேண்டும். அதை செய்வதை விட்டு விட்டு எளவு வீட்டில் அரசியல் செய்வது போல காஷ்மீரில் ஏற்பட்ட பேரழிவை வைத்து இந்திய நாட்டுப் பற்றை தூண்டி விட்டு குளிர் காய்வது மிகவும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்க முடிகிறது.

ஈழத்தில் இந்திய ராணுவம் நடத்திய கொடுமைகளை நாம் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அதை குறித்து எந்த இந்திய ஊடகங்களும் பேச முன்வருவதில்லை. ஈழத்தை முற்றிமும் அழித்து ஒழித்த சிங்கள ராணுவம் இப்போது ஈழத்தில் பேரிடர் ஏற்பட்டால் நிச்சயம் அங்கு சென்று அம்மக்களுக்கு உதவி செய்தாக வேண்டும். அப்படி செய்தால் சிங்கள ராணுவம் உத்தமர்களாக மாறிவிடுவார்களா ? அப்படி உத்தமர்களாக சிங்கள ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டால் அதை தமிழர்கள் ஏற்பார்களா ? அப்படித் தான் இந்திய ராணுவத்தின் உதவியை காஸ்மீர் மக்களும் பார்க்கிறார்கள். இந்திய ஊடங்கங்கள் ராணுவத்தை புனிதர்களாக சித்தரிக்கும் நடவடிக்கை இனி கைவிட்டு காஸ்மீர் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். போலியான ஒன்றுக்கும் உதவாத இந்திய தேசிய உணர்வை தூண்டும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

   







[vuukle-powerbar-top]

Recent Post