Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வாக்கெடுப்பில் தனி நாட்டிற்கான வாய்ப்பினை இழந்த ஸ்காட் இன மக்கள்.   தேசிய இன மக்களும் அடக்கியாளும் அரசுகளும் கற்க வேண்டிய பாடம்!

ஸ்காட்லாந்து செல்லும் வரை நான் ஐக்கிய அரசாங்கத்தில் உள்ள எல்லா நாடுகளும் ஒரே பண்பாடு, ஒரே மொழி கொண்ட தேசங்கள் தான் என்று எண்ணியிருந்தேன். இங்கிலாந்து மக்களும் வெள்ளையின மக்கள் தான் ஸ்காட்லாந்து மக்களும் வெள்ளையின மக்கள் தான். இவர்கள் இருவருக்குள் என்ன பெரிய வேறுபாடுகள் இருக்கப் போகிறது என்று எண்ணியிருந்த எனக்கு ஸ்காட்லாந்து சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் தனித்துவமான இனம். அவர்களுக்கான மொழி, உணவுப் பழக்கங்கள், பாரம்பரிய உடைகள், குடும்ப வாழ்க்கை முறைகள் என எல்லா வகையிலும் இங்கிலாந்து மக்களிடம் இருந்து வேறுபடுகின்றனர். ஸ்காட் இன மக்கள். ஐக்கிய அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் ஸ்காட்லாந்து மக்களுக்கான தனி பாராளுமன்றம் அவர்களுக்கு உள்ளது. இங்கிலாந்து நாணயத்தில் இருந்து வேறுபட்ட நாணயம் ஸ்காட்லாந்துக்கு உள்ளது. 'பவுண்ட்ஸ்' என்று பொதுவாக சொன்னாலும் ஸ்காட்டிஷ் பவுண்ட்ஸ் என்பது இங்கிலாந்து பவுண்ட்ஸ் போல இருக்காது. நாணயங்களில் கூட அவர்களுக்கான உரிமை இருக்கிறது.

மேலும் ஸ்காட்லாண்டு நாட்டிற்கு தனி குடிவரவு சட்டம் உள்ளது. ஐக்கிய அரசாங்கம் பொதுவான நுழைவு சீட்டை கொடுத்தாலும் ஸ்காட்லாண்டு நாட்டின் குடிவரவு சட்டங்கள் இங்கிலாந்தில் இருந்து வேறுபடும். அப்படி ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட நாடாகவே ஸ்காட்லாந்து இன்று வரை விளங்கி வருகிறது. எனினும் ஸ்காட்லாந்து மக்கள் தங்களை ஆங்கிலேயே மக்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கவே ஆசைப் படுகின்றனர். தங்களை பெருமைமிக்க 'ஸ்காட்' என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஸ்காட்லாந்து முழுமையாக ஐக்கிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனி நாடாக உருவாக வரலாற்றில் ஒரு சிறப்பான வாய்ப்பு அமைந்தது, அது தான் ஸ்காட்லாண்டு மக்களிடம் எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பு. இந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து பிரிந்து போக வேண்டும் என்று 45 % மக்களும், பிரிய வேண்டாம் என்று 55 % மக்களும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் ஸ்காட்லாந்து தனிநாடாக உருவெடுக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்புக்கு பின்னர் இங்கிலாந்து பிரதமர் ஸ்காட்லாந்து மக்களுக்கு கூடுதல் அதிகாரமும், ஸ்காட்லாந்து அரசுக்கு கூடுதல் தன்னாட்சியும் வழங்கவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இது 45 % மக்கள் ஸ்காட்லாந்து தனி நாடாக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு கிடைத்த பரிசாகும். தனி நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்த மக்களும் இப்போது ஏமாற்றம் அடையவில்லை. அவர்களுக்கான , அவர்களது பண்பாட்டை, உரிமைகளை  தக்க வைக்கக் கூடிய அதிகாரம் இப்போது அவர்களுக்கு கிடைக்க உள்ளன. ஐக்கிய அரசாங்கம் இன்னும் சிறப்பான கூட்டாச்சியை நோக்கி நகரும் எனத் தெரிகிறது. ஸ்காட்லாந்தில் குவிந்து வரும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்த புதிய கொள்கைகள் உருவாக்கப்படும். இங்கிலாந்து தற்போது உருவாக்கியுள்ள கடுமையான குடிவரவு சட்டங்கள் மேலும் வலுவடையும் என்றே தெரிகிறது. இதன் மூலம் ஸ்காட்லாந்து மக்களின் மொழி, மண், இன உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும்.

இதிலிருந்து இந்தியா, இலங்கை, சீனா போன்ற கிழக்கு நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன ?

தேசிய இனங்களை அடிக்கி ஆளும் இந்தியா, இலங்கை, சீனா போன்ற நாடுகள் ஐக்கிய அரசாங்கம் எப்படி ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுத்துள்ளதோ அதே போல தன்னாட்சி அதிகாரத்தை தேசிய இனங்களுக்கு வழங்க முன்வர வேண்டும். ஒற்றை மொழி, ஒற்றை இனம், ஒற்றை பண்பாடு போன்ற மனித குல விரோதமான கொள்கைகளை இந்த அரசுகள் கைவிட வேண்டும். குறிப்பாக இந்தியா, அனைத்து மாநிலத்திற்கும் முழுமையான தன்னாட்சி உரிமைகளை வழங்கி பாராளுமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை  மாநில சட்டமன்றங்களுக்கும் கொடுக்க வேண்டும். ராணுவம் உள்ளிட்ட சில முக்கியமான துறைகளை மட்டுமே நடுவண் அரசின் கீழ் வைத்துக் கொண்டு மற்ற அனைத்து துறைகளையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல் வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான மொழிக் கொள்கை , கல்விக் கொள்கை அந்தந்த மாநிலங்களே தீர்மானிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதில் நடுவண் அரசும் தலையிடக் கூடாது. எங்கோ டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழகத்தின் தலை எழுத்தை  மாற்றும் நடவடிக்கையில் நடுவண் அரசு ஈடுபடக்கூடாது. தேசிய இன உரிமைகளில் டெல்லி அரசு தலையிடக் கூடாது. தமிழகத்தின் சட்ட திட்டங்களை, உரிமைகளை  நடுவண் அரசும், டெல்லி ஊடங்கங்களும் மதிக்க வேண்டும்.

என்றாவது ஒரு நாள் தேசிய இனங்கள் தாங்கள் தனிநாடாக பிரிந்து போக வேண்டும் என்று எண்ணினால் பிரிந்து போவதற்கான உரிமையை நடுவண் அரசு வழங்க வேண்டும். பொது வாக்கெடுப்பு மூலமாக நடுவண் அரசு அதற்கு உதவ வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மட்டுமன்றி , இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கும் ஈழ தேசத்திற்கும் பொது வாக்கெடுப்பு முறையில் ஈழ நாட்டு கோரிக்கையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். ஈழத் தமிழர்களிடைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் அடிமைப் பட்டிருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், தமிழகம் போன்ற தேசங்களிலும் பொதுவாக்கெடுப்பு நடத்த நடுவண் அரசு உதவ வேண்டும்.

தேசிய இன அரசியல் உரிமைகளை நடுவண் அரசுகளிடம் இருந்து முழுமையாக மீட்க மாநில அரசுகள் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும். மக்களும் போராட வேண்டும்.  அப்போது தான் உண்மையான கூட்டாச்சி முறை இந்தியாவில் மலரும். இலங்கையிலும் ஈழ தேசம் உருவாகி தமிழின மக்கள் உரிமைகளுடன் வாழமுடியும்.  












 

[vuukle-powerbar-top]

Recent Post