Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊழலை வைத்து அரசியல் செய்யும் தேசியக் கட்சிகள் நாட்டுப்பற்றை வைத்து அரசியல் செய்யும் இந்துத்வா கட்சிகளை விட ஆபத்தானவை ! 

அண்மைக் காலமாக தமிழகத்தில் இயங்கும் ஆம் ஆத்மி கட்சி ஜெயலலிதாவின் தண்டனை குறித்தும், அவரின் சொத்துக் குவிப்பு பற்றியும், ஊழலுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பெரிய பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது. ஆம் ஆத்மி என்ற இந்தி ஆதரவு பெருநிறுவன கட்சி தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையை பற்றி இது வரை வாய்திறந்து பேசியதாக தெரியவில்லை. ஆனால் ஊழல் பற்றி மட்டும் தொடர்ந்து பேசி அரசியல் செய்து வருவதை பார்க்க முடிகிறது. 

இந்தியாவில் தலைவிரித்தாடும் ஊழல் குறித்து எந்தவித புரிதலும் இல்லாமல் ஊழல் ஊழல் என்று ஒப்பாரி வைத்து அரசியல் செய்வது ஒரு வித அரசியல் தந்திரமே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஊழல் எங்கிருந்து பிறக்கிறது? அதற்கான மூல காரணங்கள் என்ன? அதை களைவதற்கான வழிமுறை என்ன என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் இவர் ஊழல் செய்து விட்டார், அவர் ஊழல் செய்து விட்டார் என்று மக்களிடம் பரப்புரை செய்து இந்தக்கட்சி பெயர் வாங்கி வருகிறது. 

பிரமிடு ஒப் கருப்சன் (Pyramid of Corruption) என்ற நூலை ஒரு முறை ஆம் ஆத்மி கட்சி படித்து விட்டு ஊழல் ஒழிப்பை பற்றி பேசட்டும் என்று நாம் அவர்களுக்கு பரிந்துரை செய்கிறோம். அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்ட நாட்டில், மாநில, மாவட்ட, நகராட்சி, ஊராட்சி என அனைத்திலும் தன்னாட்சி மறுக்கப்பட்ட நாட்டில் ஊழல் ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்பதை இந்த நூல் விளக்குகிறது. அடிப்படை இந்திய அரசியல் அமைப்பே ஊழலுக்கு வழி சமைக்கிறது. இந்தியாவின் தோல்வியுற்ற அரசியல் அமைப்பை மாற்றாமல் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்பதை நாம் உணரவேண்டும். 

தேசிய இனங்களின் உரிமைக்கு எதிராக இந்திய அரசு நடத்தி வரும் இன அழிப்பு போரை தடுக்காமல், அதை தட்டிக் கேட்காமல், இந்திய அதிகார மையத்தை கேள்வி கேட்காமல் ஊழல் ஊழல் என்று ஊளையிடுவது எந்த வகையில் நியாயம் ? நடுவண் அரசின் அதிகாரத்தை வைத்து பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் நாட்டின் இயற்கை வளங்கள் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றன.  மண்ணின் மைந்தர்கள் மற்றும்   பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது . இதையெல்லாம் தட்டிக் கேட்க வக்கில்லாதவர்கள் ஊழலை பற்றி பேசுவது நகைப்புக்கு உரியது.  

இந்தித் திணிப்பு, சமஸ்கிரத திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு போன்றவற்றை தட்டிக் கேட்க வேண்டிய ஆம் ஆத்மி மற்றும் இன்னபிற தேசிய கட்சிகள் மௌனமாக இருக்கும் மர்மம் என்ன ? இந்திய மொழிகள் அனைத்தும் சமம் என்றால் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கக் வேண்டும் என்று தமிழர்களுக்கு சார்பாக ஏன் ஆம் ஆத்மி கட்சி இதுவரை குரல் கொடுக்கவில்லை? ஈழத் தமிழர் சிக்கல், மீனவர் சிக்கல், மீத்தேன் சிக்கல் , முல்லைபெரியாரு சிக்கல், நியூற்றினோ சிக்கல் போன்ற தமிழர் வாழ்வாதார சிக்கல் குறித்து ஆம் ஆத்மி பேச மறுப்பது ஏன் ? கூடங்குளம் அணு உலைப் பிரச்சனையில் கூட எந்த ஒரு தெளிவான முடிவையும் ஆம் ஆத்மி கட்சி எடுக்கவில்லை. அக்கட்சியின் மேல்மட்ட பொறுப்பாளர்கள் அணு உலையை குறித்து தெளிவான கொள்கையை வரையறுக்கவில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு சிக்கல்களை குறித்து பேசாமல், மொழி உரிமை இன உரிமை குறித்து பேசாமல் ஊழல் பற்றி மட்டும் பேசி தமிழகத்தில் கால் ஊன்றி விடலாம் என்று கனவு காண்கிறது ஆம் ஆத்மி கட்சி. 

முதலில் தமிழகத்தில் அரசியல் செய்ய தமிழர்களின் உரிமைகள் குறித்து குரல் கொடுக்க வேண்டும் தேசிய கட்சிகள். இன உரிமைகள், அரசியல் உரிமைகள் கிடைத்த பிறகே நாம் ஊழலை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும். உரிமைகள் இல்லாத நாட்டில் ஊழல் ஒழிப்பு என்பது சாத்தியமில்லை. இந்திய அரசியல் அமைப்பை மாற்றி ஒவ்வொரு தேசிய இனங்களும் தன்னாட்சி  உரிமைகள் பெரும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டால் மட்டுமே ஒரு தூய்மையான அரசை நிறுவ முடியும். அதுவரை ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடு என்பது இந்துத்வா நாட்டுப்பற்றுக் கட்சிகளின் நிலைப்பாட்டை விட ஆபத்தானவை.    




[vuukle-powerbar-top]

Recent Post