Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாம் கொண்டாடும் ஒரு திருநாளை தவறாக உச்சரிக்கலாமா ?

வடநாட்டிலும் தென்னாட்டிலும் தீபாவளி என்னும் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் பின்புலத்தில் பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும், இப்பண்டிகையின் சாராம்சம் என்பது இருளை நீக்கும் ஒளியை மகிழ்ச்சியுடன் வரவேற்பது தான்.

தமிழர்களின் திருநாளான பொங்கல் விழாவைக் காட்டிலும் தீபாவளி என்னும் பண்டிகை தமிழர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இந்த பண்டிகைக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. தமிழர்கள் பண்டைய காலத்தில் கார்த்திகை மாதத்தில் இயற்கை விளக்கமாகிய தீயை வழிபட்டு வந்துள்ளனர். தமிழ்க் கடவுளான முருகனுக்கும் சிவனுக்கும் கார்த்திகை மாதம் உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் தான் கார்த்திகை தீபத் திருவிழாவும் பண்டைய காலம் தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் தமிழர்களால் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றும் உரிமை ஒரு குறிப்பிட்ட மீனவ சமுதாய மக்களிடம் இன்றளவும் உள்ளது. இந்த முறை மிகப்பழமையான காலம் தொட்டே நடைமுறையில் உள்ளது.

இந்தியாவிலேயே இந்த கார்த்திகை தீபத் திருவிழா மிகத் தொன்மையாதாகும். தீயை, சுடரை இறைவனின் அருள் விளக்கமாக தமிழர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்றாகும். அதே போல கார்த்திகை மாதத்தில் முருகப் பெருமானை நினைவு கூறும் வகையிலும் தமிழர் இல்லங்களில் அகல்விளக்கு ஏற்றி அவற்றை அணி அணியாக வைத்து தீப வழிபாடு செய்கின்றனர் தமிழர்கள். இப்படியாக தமிழர்கள் இயற்கை ஒளியை கடவுளாக வழிபாடு செய்துள்ளனர். இது தமிழர் மதத்தின் பிரிக்க முடியாத திருவிழாவாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது.

இந்த விழாவானது பிற்காலத்தில் ஆரிய இந்து மதத்தில் சேர்க்கப்பட்டது. இருளை நீக்கி ஒளியை தரும் தீயை நேரடியாக வழிபடும் முறையை ஆரிய மதம் தனக்குள் உள்வாங்கத் தொடங்கியது. அப்படி உள்வாங்கும் போது ஆரிய மதத்திற்கே உரிய இதிகாச கதைகளும் இந்த ஒளி விழாவுடன் பிணையப்பட்டது. வடநாட்டு ஆரியர்கள் இராமன் குறித்த கதையையும், தென்னாட்டு ஆரியர்கள் கிருஷ்ணன், நரகாசுரன் போன்ற கதையையும் இந்த திருவிழாவில் இணைத்தனர். இதனால் தமிழர்களின் தீப ஒளித் திருவிழா தீபாவளி என்று ஆரிய இந்து மதத்தில் வழங்கப்பட்டது, இப்போது இந்தியர்கள் பலரும் இந்த விழாவை  தீவாளி என்று அழைத்து வருகின்றனர்.

கார்த்திகை தீப விழா இன்றளவும் தமிழகத்தில் மிகப் புகழ் பெற்ற திருவிழாவாக இருந்தாலும் தீபாவளி என்ற பண்டிகையை வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் பொதுவான பண்டிகையாக பொதுவான நாளில் அனுசரிக்கப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் தீபாவளியை தீபம் + ஆவளி என்று பிரிக்கிறார்கள். அதாவது தீப வரிசை என்று பொருள். அதனால் தீபாவளி என்று வழங்கலாயிற்று. பின்பு தீவாளி என்று அழைத்தனர் வடவர்கள் . தீவாளி என்பதற்கு எந்த ஒரு பொருளும் இல்லை.

தீ என்னும் தமிழ் வேர் சொல்லில் இருந்து உருவான சொல்லே தீபம் என்பதாகும். தீ என்ற சொல் வடமொழியில் நெருப்பை குறிப்பதாக இல்லை. அந்த தீயினால் உண்டாகும் ஒளியை வழிபடுவது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பம்சமாகும். அதனால் இவ்விழாவை தீவாளி என்றோ, தீபாவளி என்றோ அழைப்பது தவறாகும். இதை முறையே தீப ஒளித் திருநாள் என்றே தமிழர்கள் வழங்க வேண்டும். அப்போது தான் இத்திருவிழா தமிழர்கள் இந்தியாவிற்கு, உலகிற்கு வழங்கிய திருவிழா என்பதும் உறுதியாகும். இந்த பண்டிகையின் பின்புலத்தில் பிணையப்பட்ட ஆரிய கதைகளை லட்சியம் செய்யாது தமிழர்களின் தொன்மையான இயற்கை ஒளி விழாவாக இந்த திருவிழாவை தமிழர்கள் அனுசரிக்க வேண்டும் , அதை முறையே தீப ஒளித் திருநாள் என்றே அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

- தமிழர் பண்பாட்டு நடுவம்

  
[vuukle-powerbar-top]

Recent Post