Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மரணத்தின் பிடியில் இருந்து பர்மா சிறுவனை காப்பாற்றிய நம் தமிழ் மொழி !

பர்மாவில் பல லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே . இருப்பினும் அங்கு வசிக்கும் தமிழர்கள் பலர் இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலே உள்ளனர் என்பது பலருக்கும் தெரியாது. தமிழ் மொழியை அவர்கள் விரும்பிப் படிக்க நினைத்தாலும் பர்மா நாட்டு அரசு தமிழ் மொழியை வளர்ச்சி அடைய விடாமல் பார்த்து வருகிறது. இந்தியாவில் உள்ள இந்தித் திணிப்பு போலவே   பர்மா நாட்டிலும் பர்மா மொழி மக்களின் மீது திணிக்கப்பட்டு வருகிறது. அதனால் பர்மா நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் அருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது,

தமிழ் மேல் தீராத பற்று கொண்ட பர்மா வாழ் தமிழ் இளைஞர்கள் தமிழ் அடையாளத்துடன் தாங்கள் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு குழுவாக செயல்படத் தொடங்கினர். அக்குழுவில் சியாமளா என்ற பெண்ணும் தன்னுடனிய சிறந்த பங்களிப்பை நல்கி வந்தார். இப்பெண்ணுக்கு  அன்புச் செல்வன் என்ற 3.5 வயது ஆண் பிள்ளையும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அன்புச் செல்வன் ஒரு வயது இருக்கும் போதே அவனுக்கு சிறு நீரகத்தில் புற்று நோய் உள்ளது என்பது கண்டறியப்பட்டது. பர்மாவில் உள்ள மருத்துவர்கள் புற்று நோயை நீக்க சிறு நீரகத்தை நீக்க வேண்டும் என்று கூறினர். அதனால் வேறு வழியில்லாமல் சிறுவனின் வலது சிறுநீரகம் அகற்றகற்றப்பட்டது. இருப்பினும் சிறுவனுக்கு தொடர்ந்து கதிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சில மாதங்கள் இவ்வாறு கழிந்தது. சிகிச்சையில் இருந்த சிறுவனின் புற்று நோய் குணமானது என்று நினைத்த சியாமளாவிற்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மற்றுமொரு சிறுநீரகத்திலும் ஒரு புற்று நோய் கட்டி வளர்ந்திருப்பது அப்போது தான் தெரிந்தது. இதை நீக்குவதற்கு பர்மாவில் போதிய வசதிகள் இல்லை என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மேலும் இந்த வகையான அறுவை சிகிச்சை செய்ய சென்னை அப்போலோ புற்று நோய் மருத்துவமனைக்கு தான் போக வேண்டும் என பரிந்துரை செய்தனர் மருத்துவர்கள். ஆனால் இதற்கு ஆகும் செலவு சுமார் 5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டது. இப்போது தான் வாழ்கையில் முன்னேறி வரும் சியாமளாவிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. இருப்பினும் தன்னுடைய பிள்ளையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவருக்கு இருந்தது.

இந்த நிலையில் தான் தமிழ் நாடோடிக் குழு என்ற அமைப்பினர்  பர்மா வாழ் இளையோர் குழுவான மியன்மார் இளந்தமிழர் இயக்கத்தினரை சந்தித்தனர். பர்மா தமிழ் இளையோர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து அங்கிருக்கும் தமிழர்களின் வாழ்வு முன்னேற வேண்டும் என்று பல முன்னெடுப்புக்களை செய்ய முன்வந்தனர் தமிழ் நாடோடிக் குழுவினர். அப்போது சியாமளாவின் பிரச்சனை குறித்து நாடோடிக் குழுவிற்கு சொல்லப்பட்டது. தமிழகத்தை மையமாக கொண்டு இயங்கும் நாடோடிக் குழுவினர் சியாமளாவிற்கு நிதி திரட்டி சிறுவன் அன்புச் செல்வனை சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க திட்டமிட்டனர்.  முகநூலில் இது குறித்து பதிவும் போட்டனர். முகநூல் பதிவை பார்த்த சிங்கை , மலேசிய தமிழ் நண்பர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வந்தனர். சியாமளாவின் பயண செலவு , மூன்று மாதங்கள் தங்கும் செலவு , மருத்துவ செலவு என அனைத்தையும் சேகரித்து தந்தனர் தமிழ் நாடோடிக் குழுவினர். அவர்கள் செய்த இந்த பெரும் உதவியால் சிறுவன் அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

இந்த சிகிச்சையின் போது சிறுவனின் நுரையீரலிலும் புற்று நோய் பரவி இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதனால்  நுரையீரலின் சில பகுதிகள் அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூற புற்று நோய் பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதியும் நீக்கப்பட்டது. இடது சிறுநீரகத்தில் உருவான புற்று நோய் கட்டியும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து சிறுவன் இப்போது கதிர் வீச்சு சிகிச்சையில் உள்ளான். இன்னும் சில நாட்களில் சிகிச்சை முடிந்து சிறுவனும் அவனது தாயார் சியாமளாவும் மீண்டும் பர்மாவிற்கு செல்ல உள்ளனர்.

சியாமளாவிடம் இது குறித்து நாங்கள் பேசிய போது, அன்புச் செல்வனின்
சிகிச்சைக்கு உதவி அவனது உயிரை காப்பாற்றிய அனைத்து தமிழர்களுக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும் தமிழால் இணைந்த தமிழர்கள் தமிழ் இன உணர்வால் தங்களுக்குள் உதவிகளை பகிர்ந்து கொண்ட காரணத்தால் ஒரு சிறுவனின் உயிர் இப்போது காப்பாற்றப்பட்டுள்ளது என்ற தகவலை கூறினார் சியாமளா. மொழியால் இணைந்த தமிழினம் ஒற்றுமையுடன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்தால் தமிழர்கள் நிச்சயம் எல்லா தளங்களிலும் வெற்றி காண்பார்கள் என்பதற்கு இந்த பர்மா தமிழ்ச் சிறுவனின் வாழ்கையே சிறந்த சான்றாகும். தற்போது  அறுவை சிகிச்சை முடிந்த சிறுவன் அன்புச் செல்வன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விளையாடி வருகிறான். இவன் மேலும் எவ்வித நோய்நொடியும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம்.

பி.கு : தற்போது சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிறுவனும் அவனது தாயாரும் உள்ளனர் . வரும் 27 ஆம் தேதி இவர்கள் பர்மாவிற்கு கிளம்புகின்றனர். சிறுவன் அன்பு செல்வனை நேரில் வாழ்த்த விரும்புபவர்கள் நம்மை தொடர்பு கொள்ளலாம்.
  
[vuukle-powerbar-top]

Recent Post