Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாணவர்கள் பொய் வழக்கில் கைது. காவல்துறைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் !!

கடந்த 23/10.14 அன்று மாணவர்கள் பிரபாகரன், செம்பியன் மற்றும் பிரதீப் ஆகியோர்களை காவல்துறை அதிகாலை கைது செய்தது. இம்மாணவர்கள் கத்தி படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள். இவர்கள் எந்த விதமான வன்முறை போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இருப்பினும் இவர்கள் 147, 148, 294 b, 307, 506 (2) போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக துறை. சட்டவிரோதமாக கூட்டம் கூடியது, வெடிகுண்டு தயாரித்தது , கொலை முயற்சி போன்ற ஆதாரமில்லாத அபாண்டமான பொய் வழக்குகளை காவல்துறை மாணவர்கள் மீது போட்டுள்ளது.

ராஜபக்சேவின் நெருங்கிய வணிகக் கூட்டாளியான  லைக்கா நிறுவனம் கத்தி படத்தை வெளியிடுவதை கண்டித்து தான் மாணவ அமைப்புகளும் தமிழ் அமைப்புகளும் போராடி வந்தன. இறுதியில் கத்தி பட குழுவும், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பும் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. கத்தி படமும் திட்டமிட்டபடி வெளியானது. ஆனால் கத்தி படம் வெளியான அடுத்த நாளே மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்ததற்கு முறையான காரணம் எதுவும் காவல்துறை சொல்லவில்லை. அதுமட்டுமில்லாது கடுமையான வழக்குகளை மாணவர்கள் மீது காவல்துறை போட்டுள்ளது மக்களாட்சியை கேள்விக்குறியாக்கி உள்ளது.

போராடும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை இந்திய அரசியல் அமைப்பு சொல்கிறது. இருப்பினும் தமிழர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் மாணவ சக்திகளை இப்படியான பொய் வழக்குகளை போட்டு அடக்கிவிடலாம் என்று அரசு நினைப்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும். மாணவர்களை இப்படி சர்வாதிகார முறையில் ஒடுக்கினால் மீண்டும் மாணவர்கள் யாரும் போராடத் துணிய மாட்டார்கள் என்ற தவறான கருத்தை அரசு கொண்டுள்ளது. ஆனால் உண்மையில் மாணவர்கள் அரசுக்கு எதிராக மேலும் பலமான போராட்டத்தை முன்னெடுக்கவே இந்த அராஜக செயல் தூண்டும் என்பதை அரசு மறக்கக் கூடாது.  மாணவர்களின் நியாயமா கோரிக்கையை அரசு மதிக்க வேண்டுமே தவிர அவர்களின் போராட்டத்தை காவல்துறை மூலமாக ஒடுக்கிவிடலாம் என்று தப்புக் கணக்கு போடக் கூடாது.

இப்போது கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக பல தமிழ் அமைப்புகளும் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. பொது மக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும்  மாணவர்கள் பக்கமே நிற்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பொய் வழக்கில் கைது செய்த மாணவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.  மேலும் மாணவர்களை அச்சுறுத்தும்படி அதிகாலை கைது செய்து பல பொய் வழக்குகளை அவர்கள் மீது போட்ட தமிழக காவல்துறைக்கு எங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  காவல்துறை மேற்கொண்டு மாணவர்களை கைது செய்யும் தவறான முயற்சியை இத்துடன் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.


- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழ்நாடு)

[vuukle-powerbar-top]

Recent Post