Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பண்பாட்டு சுற்றுலா -  ௧ : தஞ்சைப் பெரிய கோவில் (கல்வெட்டு குறிப்புகள் வரலாற்று செய்திகள்)

நானும் சிங்கை நண்பர் மோகன்ராஜ் அவர்களும் இருநாட்கள் பண்பாட்டு சுற்றுலா நிமித்தமாக தஞ்சை சென்று வந்தோம். தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி நாம் ஏற்கனவே பல செய்திகளை கேள்விப்பட்டிருந்தாலும், நாம் அறியாத பல செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை அங்கு சென்ற பின்னர் தான் அறிந்தோம். கோவில் கட்டடக் கலை ஆய்வாளர் திரு தென்னன் மெய்மன் அவர்கள் எங்களுக்கு கோவிலை சுற்றி காட்டினார். கல்வெட்டுகள், சிற்ப  நுணுக்கங்கள் பற்றிய செய்திகளை நம்மிடம் பகிர்ந்தார். இந்தக் கோவில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் கோவில் முழுவதும் உள்ள தகவல்கள் இந்தியிலும் உள்ளது. கோவிலின் வாசலில் தஞ்சைப் பெருவுடையார் கோவில் என்று பெயர் பலகை இல்லை. 'பிரகதீஸ்வரர்' கோவில்  கோவில் என்று வடமொழியில் தான் உள்ளது. தமிழர் கட்டிய கோவிலில் தமிழில் பெயர் பலகை இல்லை என்பது வருத்தமே. கோவிலின் கருவறையில் வடமொழி மந்திரங்கள் மட்டுமே ஒலிக்க, அதன் அருகைமையில் தமிழ் ஓதுவார்கள் மிகச் சத்தமாக தமிழ்ப் பாடல்களை ஓதியது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.

உலகப் பாரம்பரிய சின்னமாக இக்கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவ்வளவு எளிதில் கோவிலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர இயலாது. எனினும் கோவிலை சேதப்படுத்த பல வேலைகள் தொடர்ந்து  நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்ற செய்தியை தென்னன் மெய்மன் அவர்கள் கூறினார். அதில் ஒன்று கோவில் வளாகத்தில் ஆழ்துளை கிணறு 300 அடி ஆழத்திற்கு போடப்பட்டது. ஆழ்துளை கிணறு தோண்டும் போது 6 வகையான மணல் வகைகள் கிடைத்துள்ளது. அப்படங்களை நாம் பார்த்தோம். முன்னூறு அடி ஆழம்வரை மணலை கொட்டி அதன் மேல் கோவிலை அமைத்துள்ளனர் சோழர்கள் . மேலும் இந்த மணல் தஞ்சையில் இருந்து கொண்டு வரப்படவில்லை என்ற செய்தியும் கூறினார். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இந்த மணல் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்முடைய காலத்தில் மண் சோதனை செய்த பின்னர் கட்டடம் கட்டுவோம். அப்படி இருந்தும் பெரிய கட்டங்கள் ஆட்டம் காண்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் ஒரு கோவில் நீடிக்க வேண்டுமெனில் எப்படியான சோதனைகளை இந்த சோழர் கட்டடக் கலை நிபுணர்கள் கையாண்டு இருப்பார்கள் என்று எண்ணிப் பார்கையில் வியப்பாக உள்ளது.

ஒரே நேர்கோட்டில் சற்றும் சாய்வு இல்லாத ஒரு கோபுரத்தை இவ்வளவு நேர்த்தியாக உலகில் எவரும் கட்ட முடியாது என்பதற்கு தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பெரும் சாட்சியாக நிற்கிறது. தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலை தொழில் நுட்பம் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டில் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவிலில் தமிழர்களின் கட்டடக் கலை நுட்பத்தை காணலாம். ஆரிய இந்து மன்னர்கள் வடநாட்டில் கட்டிய கோவிலில் தமிழர்களின் தொழில் நுட்பத்தை நாம் காணலாம்.  இப்படி உலகமே வியக்கும் தமிழர்களின் கட்டடக் கலை, சிற்பக் கலைகளை தமிழக அரசு ஊக்குவிக்காமல் , இந்திய வரலாற்று ஆவணங்களில் கூட தமிழர் கோவில் கட்டடக் கலைக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது வேதனையான செய்தி.

தஞ்சை கோவில் மராத்தியர்கள் கட்டுப்பாட்டில்  சில காலம் இருந்துள்ளது, தெலுங்கர்கள் கட்டுப்பாட்டில் சில காலம் இருந்துள்ளது. இந்த காலங்களில் கோவிலில் பல மாற்றங்களை செய்துள்ளனர் . கோவிலை இடித்தும் , பாழ்படுத்தியும் உள்ளனர் வேற்றினத்தவர்கள். புதிய கட்டங்களை நெடுநிலை மாடத்துடன் இணைத்துள்ளனர். நாயக்கர் ஆட்சியில் உள்ளே முருகன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை வடிவமைத்த தமிழர்கள் மிகச் சிறப்பாக தங்கள் கட்டடக் கலை நுணுக்கத்தை பயன்படுத்தி உள்ளனர். முருகன் கோவில் சுற்றி நுண்துளைகள் அமைத்து மிக நேர்த்தியாக கட்டடத்தை வடிவமைத்து உள்ளனர். இந்த கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொறியியல் கணித முறை இக்காலத்தில் கூட பயன்படுத்த முடியாது என்றே கூறலாம். தமிழர்களின் சிறப்பு மிக்க கணித முறையை நாம் தொலைத்து விட்டோம் என்றே கூறலாம். இவை யாவையும் மீட்கும் கடமை தமிழர்களுக்கு உள்ளது.

தஞ்சை பெரிய கோவில் முழுவதும் கல்வெட்டுகள் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய கல்வெட்டும் இங்கு தான் உள்ளது. தமிழர்களின் ஆட்டை பெருவிழா என்ற தை புத்தாண்டு குறித்த செய்தியும் வாசலில் கல்வெட்டாக உள்ளது. உள்ளே சிவனடியார்கள் தங்கவும் அவர்களுக்கு உணவு தயாரிக்கவும் பயன்படுத்திய சமையல் அறை இன்றும் செயல்பாட்டில் உள்ளது. அதை நாம் பார்வையிட்டோம். இங்கு இப்போது இறைசோறு (பிரசாதம்) தயாரிக்கப்படுகிறது.

தமிழர்களின் ஆளுமை, கொற்றம் , தமிழினத்தின் அடையாளம் யாவும் தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் நிலை கொண்டுள்ளது. ஒவ்வொரு தமிழரும் தஞ்சை கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று  கோவிலை பார்வையிட வேண்டும் என்பதே இராசராச சோழனின் தொலைநோக்கு விருப்பமாகும். தஞ்சை பெருங்கோவில் வீழ்ந்தால் தமிழினமும் வீழும். இக்கோவில் நிலைத்து இருக்கும் வரை தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை. இது தமிழர்களின் வெற்றிச் சின்னம் என்பதை காலம் காலமாக நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது இக்கோவில். தமிழர்கள்  அனைவருக்கும் சொந்தமாக இக்கோவிலை மாமன்னன்  விட்டுச் சென்றுள்ளான். அதை உரிமையுடன் பேணிப்பாதுகாப்பது நம் அனைவரின் கடைமையாகும்.

தஞ்சைப் பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே !









[vuukle-powerbar-top]

Recent Post