Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பண்பாட்டு சுற்றுலா - ௨ : முள்ளிவாய்க்கால் முற்றம். சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெரும் தமிழினத்தின் சாட்சி !

தஞ்சை பெரிய கோவில் பின்புலத்தில் உள்ள மிகப்பெரிய வெற்றியின் அடையாளத்தை தமிழகம் ஏந்தி இருப்பதை போல தமிழினம் சந்தித்த மிகப்பெரிய அழிவை அடையாளப்படுத்தி நிற்கிறது தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம். தமிழினம் பல நூறு ஆண்டுகள் சந்தித்திராத இனப்படுகொலையை, பேரழிவை தமிழீழத்தில் சந்தித்தது. இந்தியா உட்பட பல நாடுகள் கூட்டாக சேர்ந்து தமிழினத்தை அழித்தது. தமிழர்களின் வீரம் செறிந்த ஆயுதப் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தமிழீழத்தை தக்கவைக்க தமிழர்கள் இறுதி கட்டப் போரில் கொடுத்த விலை கொஞ்சமல்ல. ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் உயிர்கள் பலி வாங்கப்பட்டது. சர்வதேச நாடுகள் அனைத்தும் கைவிட்ட நிலையில் , இந்திய அரசு ஒப்புதல் வழங்க சாட்சிகள் இல்லாத இனப்படுகொலையை அரங்கேற்றியது சிங்கள இன வெறி அரசு. தமிழ் மக்களை அழித்ததும் இல்லாமல், தமிழர்களின் மாவீரர் இல்லங்கள், போர் நினைவுச் சின்னங்கள் என அனைத்தையும் இல்லாத இடம் தெரியாமல் அழித்தது சிங்கள அரசு. தமிழர்களுக்கு என்று ஒரு நினைவுச் சின்னம் இவ்வுலகில் இருக்கக் கூடாது என்று சிங்களம் எண்ணியது. ஆனால் அந்த எண்ணத்தை முறியடித்து எழும்பியது தான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.

தமிழர்களின் வெற்றியை தஞ்சை பெரிய கோவில் அடையாளப்படுத்தி நிற்பது போலவே தமிழர்கள் சந்தித்த தோல்வி, பேரழிவு, இனப்படுகொலை ஆகியவற்றை அடையாளபடுத்தி நிற்கிறது முள்ளிவாய்க்கால் முற்றம். பழ நெடுமாறன் ஐயா, திரு. நடராஜன் மற்றும் உலகத் தமிழர்கள் பலரின் பெரு முயற்சியால் உருவாகியது தான் முள்ளிவாய்க்கால் முற்றம். உலகில் எந்த நாட்டிலும் பார்க்க முடியாத ஒரு அதிசயத்தை இந்த முற்றத்தில் நாம் காணலாம். அதாவது, ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க தங்கள் உயிரையே தீக்கு இரையாக்கிய முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்களின் உருவங்கள் ஒரு புறம் பாறையில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் இனப்படுகொலையில் பலியான உயிர்கள், சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்கள், முகாம்களில் சிறை வைக்கப்பட்ட தமிழர்கள், சிங்கள வெறி பிடித்த அரசு நடத்திய வான்வழித் தாக்குதல் என இவையாவும் பாறையில் அழியாத சிற்பங்களாக செதுக்கப்படுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடுவாக விளங்கும் தமிழினப் படுகொலையை இதை விடச் சிறப்பாக வேறு எந்த வகையிலும் ஆவணப்படுத்த இயலாது. தமிழீழ தேசிய தலைவரின் புதல்வர்கள் சார்லஸ் , பாலச்சந்திரன் ஆகிய இருவருக்கும் தனியே கற்சிற்பம் வைக்கப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ்த் தாயானவள் இனப்படுகொலையில் பலியான புதல்வர்களின் சாம்பலை சுமக்கும் ஈமச் சட்டியுடன் முகப்பில் இந்த முற்றத்தில் காட்சி தருகிறாள். தமிழ்த் தாய்க்கு கீழே பார்வதி அம்மாளின் (பிரபாகரன் அவர்களின் தாயார்) சாம்பலும், முள்ளிவாய்க்கால் ரத்தம் தோய்ந்த மண்ணும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் முதல் மாவீரர் மண்டபம் இங்கு தான் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் இடது புறம் தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்குபெற்ற சிறந்த மனிதர்களின் ஓவியம் அற்புதமாக உயிரோவியமாக வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓவியங்கள் ஒவ்வொன்றும் பேசும் ஓவியங்களாக விளங்குகிறது . அந்த அளவிற்கு நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. மண்டபத்தின் வலது புறத்தில் தமிழகத்தின் சிறந்த போராளிகள், மொழிப் போர் ஈகிகள், வெள்ளையனை எதிர்த்து போராட்டம் செய்த வீரத் தமிழர்கள் ஆகியோர்களின் உருவங்கள் ஓவியமாக தீட்டப்பட்டு கட்சிப் படுத்தப்பட்டுள்ளது. தமிழீழத்தின் தமிழகத்தின் வரலாறும் இம்மண்டபத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மாவீரர் மண்டபத்தின் உள்ளே நுழைந்து அடுத்த கட்டடம் சென்றால் அங்கு முள்ளிவாய்க்கால் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் தமிழகத்தை சேர்ந்த எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கிய அத்துணை தமிழர்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கூட இந்த அளவிற்கு தமிழகத்தின் சிறந்த மனிதர்களை ஒரே இடத்தில் அடையாளப்படுத்தியது இல்லை.  இவர்கள் பலருக்கு நினைவு மணிமண்டபமும் கட்டியது இல்லை. ஆனால் இந்த முள்ளிவாய்க்கால் அரங்கம் சிறப்பு வாய்ந்த அத்துணை தமிழர்களின் படங்களையும் ஒரே இடத்தில வைத்து சிறப்பு செய்துள்ளது பாராட்டத்தக்கது.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுறையேனும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சென்று வரவேண்டும். தமிழர்களின் வீரத்தை, சிறப்பை , பெருமையை, போராட்டத்தை , இன்னல்களை அறிய வேண்டுமெனில் இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நிச்சயம் ஒவ்வொரு தமிழரும் சென்று வர வேண்டும். இப்படி தமிழர்களின் அடையாளத்தை தாங்கி நிற்கும் முற்றத்தை தான் தமிழக அரசு இடித்தது என்பது வெட்கக்கேடானது. தமிழக அரசே செய்ய வேண்டிய பணியை நெடுமாறன் ஐயா பெரு முயற்சியால் செய்து முடித்தார். ஆனால் அதையும் பொறுக்க முடியாமல் தமிழக அரசு தகர்க்க முனைந்தது மிகப்பெரிய கேடுகெட்ட செயலாகும். இறுதியில் முற்றத்தின் முகப்பை மட்டுமே இடித்து மிச்சத்தை விட்டுவிட்டது தமிழக அரசு. அதனால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தப்பித்தது. ஒவ்வொரு முறையும் சாம்பலில் இருந்து மீண்டும் தமிழினம் எழுந்து நிற்கும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் முற்றம் என்றுமே சாட்சியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

[vuukle-powerbar-top]

Recent Post