Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காலையில் வாடகை மகிழுந்து நிறுவனத்துடன் வாக்குவாதம் !!

ஒரு மகிழுந்து வாடகைக்கு வேண்டும் என புதிதாக தொடங்கப்பட்ட OLA  மகிழுந்து நிறுவனத்தை அலைபேசியில் அணுகினேன். தொடர்பு கிடைத்ததும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்ட குரல் மூன்று நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசியது. பொறுத்துக் கொண்டேன். அதன் பின்பு அழைப்பை எடுத்த பெண்மணி ஏதோ இங்கிலாந்து மக்களிடம் பேசுவது போல ஆங்கிலத்தில் 'Good Morning Sir , how may I assist you' என்று பேசத் தொடங்கினார். உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டேன். தெரியும் என்றார். எனக்கு ஒரு வண்டி வேண்டும் அனுப்புங்கள் என்றேன். சிறுது நேரம் காத்திருப்புக்குப் பின் மீண்டும் அந்த பெண் 'Sorry for keeping you online Sir '  என்றார். இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.

நீங்கள் தமிழ் மண்ணில் தானே வணிகம் செய்கிறீர்கள் ? பின்பு ஏன் தமிழில் பேச மறுக்கிறீர் ? தமிழில் பேசினால் உங்களுக்கு வணிகம் குறைந்து விடுமா என கேட்டேன் . அதற்கு அந்தப் பெண் , சார் எங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அழைப்பு வரவில்லை பல மாநிலங்களில் இருந்து அழைப்பு வருகிறது அதனால் தான் நாங்கள் தமிழில் பேசுவது இல்லை என்று பதில் கூறினார் அப்பெண்மணி.

உங்களுக்கு எங்கிருந்தெல்லாம் அழைப்பு வருகிறது , அமெரிக்காவில் இருந்து வருகிறதா ? இங்கிலாந்தில் இருந்து வருகிறதா ? அல்லது டெல்லி மும்பைக்கு வண்டி வேண்டும் என்று யாராவது வேண்டுகோள் விடுகிறார்களா ? ஒரு கணக்கெடுப்பு எடுங்கள் , ஒரு நாளைக்கு எத்தனை பேர் தமிழகத்தில் இருந்து உங்களை அழைக்கிறார்கள், எத்தனை பேர் தமிழகத்திற்கு வெளியே இருந்து அழைக்கிறார்கள் என்று புள்ளி விவரம் எடுங்கள் . நிச்சயமாக தமிழகத்தில் இருந்து தான் உங்களுக்கு அதிக அழைப்புகள் வரும் . தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ் தெரியும் , இருந்தும் நீங்கள் தேவையே இல்லாமல் ஆங்கிலத்தை எங்கள் மீது திணிக்கிறீர்கள் . முதலில் தமிழில் பேசுங்கள் , உங்கள் வாடிக்கையாளருக்கு தமிழ் தெரியவில்லை என்றால் மட்டுமே ஆங்கிலம் பேசுங்கள் . அதைவிட்டு விட்டு அனைத்து தமிழர்களிடமும் ஆங்கிலம் தான் பேசுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது வீண் . உங்கள் மகிழுந்து ஓட்டுனர் அனைவர்க்கும் ஆங்கிலம் தான் பேசுகிறார்களா ? மண்ணின் மொழியை மதிக்காமல் தமிழகத்தில் ஏன் வணிகம் செய்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்தேன். கடைசியில் அவர் சாரி சார் என்றார் . நான் இது குறித்து உங்கள் நிறுவனத்திடம் பேசுங்கள் நானும் புகார் கொடுக்கிறேன் என்று கூறி  அழைப்பை முடித்தேன்.

தோழர்களே ! நாம் ஒருவருக்கு வணிகம் கொடுக்கும் போது தயவு செய்து நமக்கு அவர்கள் நம் மொழியில் சேவை வழங்குமாறு கேட்போம் . நம் மொழியை புறக்கணிக்கும் வணிக நிறுவனங்களுக்கு நாம் பணம் கொடுப்பதில்லை என்று உறுதி ஏற்போம் .

[vuukle-powerbar-top]

Recent Post