Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மேன்மன் ஆதியின்  பிறந்த நாள் விழா - பெரியோர், நண்பர்கள் புடைசூழ தமிழர் முறைப்படி விளக்கேற்றி  கொண்டாடப்பட்டது !

தமிழர்கள் தங்கள் பிறந்த நாள் விழாவை தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திருவள்ளுவர், வள்ளலார், தமிழ்த் தாயை முன்னிலைப்படுத்தியும், இயற்கை கடவுளான அருட்பெருஞ்சோதியின் முன்னிலையிலும் எங்கள் மகன் மேன்மன் ஆதியின் பிறந்த நாள் விழா இனிதே கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்கமாக முதலில் திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து ஒலிக்க அனைவரும் எழுந்து நின்று இயற்கை ஒளியான கடவுளுக்கு மரியாதை செலுத்தி வணங்கினர். அதன் பின்னர் விழாவிற்கு வந்திருந்த குழந்தைகள் அனைவருக்கும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. திருக்குறள் தெரியாத குழந்தைகள் கூட பரிசுகள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அந்தக் கணமே திருக்குறள் கற்று போட்டியில் பங்குபெற்றனர்.

பின்னர் ஆங்கில வழக்கப்படி இனிரொட்டி வெட்டி , விளக்கை அனைத்து பிறந்த நாள் கொண்டாடுவதை போல அல்லாமல், இனிப்புகள் வழங்கி குத்து விளக்கு ஏற்றி பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது. பெற்றோர்களின் நெருங்கிய உறவினர்கள் குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக குத்து விளக்கை ஏற்றி பிறந்த நாள் விழாவை சிறப்பித்தனர்.

பின்னர் வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள், சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் மலர்கள் கொடுக்கப்பட்டது. பல்லாண்டு வாழ்த்து ஒலிக்க , அவையோர்கள் அனைவரும் ஒன்றாக பல்லாண்டு வாழ்த்தை முழங்க பிறந்த நாள் கொண்டாடும் பிள்ளைகள் மீது மலர் பிள்ளைகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி அவர்கள் மீது மலர் தூவினர். அவையோர்கள் அனைவரையும் பிள்ளைகள் வணங்கி அவர்களின் மேலான வாழ்த்துகளுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர். அதே நேரம் பல்லாண்டு வாழ்த்துப் பாடல் பின்னணி இசையாக ஒலித்தது. நிகழ்சிக்கு முகநூல் செய்தியை பார்த்து வந்திருந்த நண்பர்கள் தங்கள் வாழ்த்துரைகள் வழங்கினர். தமிழர் முன்னேற்றக் கழக தலைவர் திரு அதியமான் நேரில் குடும்பத்துடன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவசர காலத்தில் நமக்கு உதவி செய்த முன்பின் தெரியாத நண்பர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்கள் காலத்தே செய்த  உதவியை அரங்கில் எடுத்துக் கூறி அவர்களுக்கு அவையோர்களால் மரியாதை செய்யப்பட்டது. பெரியோர் , சான்றோர் பெருமக்கள் பிள்ளைகளை வாழ்த்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் சாதி, மத பேதமில்லாமல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர் .

குழந்தைகள் மகிழ நாட்டுப்புறப் பாடல் ஒலிக்கச் செய்து  இசை நாற்காலி, பந்து கடத்துதல் போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டது. வெற்றியாளர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இறுதியில் வந்திருந்த அனைவரும் உணவருந்தி தங்கள் மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர் . நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது என்று பாராட்டினர். வந்திருந்த குழந்தைகள் பெரியவர் அனைவருக்கும், திருக்குறள் , தொல்காப்பியம் நூற்கள் பரிசாக வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு பாரதிதாசனார் கவிதைகள் நூல் நினைவுப் பரிசாக  வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை பற்றி பகிர்வதின் நோக்கம் தமிழர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் போது தமிழர் நெறிப்படி, தமிழர் பண்பாட்டிற்கு அமைய தமிழ்க் குடும்பங்களை ஒன்றிணைத்து பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டும் என்பதற்குத் தான். இதுவரை ஆங்கில வழியில் நாம் பிறந்த நாள் விழாவை கொண்டாடி இருந்தாலும் , இனி வரும் காலத்தில் நாம் அனைவரும் தமிழ் வழியில் இது போன்ற இல்ல நிகழ்வை நடத்தினால் , நம்முடை மொழி, இனம் , பண்பாடு அனைத்தும் காக்கப்படும். நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து நண்பர்கள், உறவினர்கள், பெரியோர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.





    
[vuukle-powerbar-top]

Recent Post