Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தமிழ்மொழி உரிமையை நிலை நாட்டவும் மொழியுரிமைக் கூட்டமைப்பு உருவாக்கம் !!

இன்று ஞாயிறு காலை சென்னை மேற்கு கே.கே நகரில் பல்வேறு தமிழ் அமைப்புகள், கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி இந்தியின் ஆதிக்கத்தை எவ்வாறு எதிர்கொள்வது, தமிழ் மொழியை எவ்வாறு ஆட்சி மொழியாக்குவது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வரும் 2015 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் ஈகியர் நாளை தமிழகமெங்கும் எப்படி எடுத்துச் செல்வது , பேரணி, மாநாடு, வீரவணக்கக் கூட்டடங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. சென்னையில் அனைத்து தமிழர் அமைப்புகளும் ஒன்றிணைந்து  மாபெரும் மொழியுரிமை பேரணி நடத்தப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. தமிழ் மொழிக்கான கொடி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் . அக்கொடியை தமிழர்கள் அனைவரும் ஏந்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியை கொண்டு வர மொழியுரிமை சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது . தமிழ் மொழி ஆட்சி மொழியாகாமல் இந்தித் திணிப்பை நிச்சயம் தடுக்க முடியாது என்பதை பலரும் வலியுறுத்தினர். ஆகவே வரும் ஆண்டில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதின் மூலமாக மட்டுமே தமிழ் மொழியை ஆட்சி அதிகாரத்தில் ஏற்ற முடியும். தமிழ் அதிகார மொழியானால் மட்டுமே தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் , மொழி விடுதலையே இனத்தின் விடுதலை என்பதும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்தாகும்.

மொழிப் போரில் கலந்து கொண்ட செயப்பிரகாசம், சீதையின் மைந்தன் போன்ற மூத்த மொழிப் போராளிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை முன்வைத்தனர், தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் இணையம் போன்ற அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாணவர் அணியினர், பத்திரிக்கையாளர், ஆவணப்பட இயக்குனர், பேராசிரியர், கல்வியாளர் போன்ற பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் பல்வேறு ஆலோசனைகளை கூறினர்.  இந்த கூட்டத்தை ஆழி செந்தில்நாதன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.


ஆகவே தமிழர்களே , நாம் வரும் 2015 ஆம் ஆண்டை மொழியுரிமை ஆண்டாக கடைபிடிக்க நாம் அனைவரும் அணியமாகுவோம் . இந்தித் திணிப்பை அகற்றுவோம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவோம். மொழி இன விடுதலையை வென்றெடுப்போம் . வாழ்க தமிழ் !! 
[vuukle-powerbar-top]

Recent Post