Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

***பிரபாகரன் வருகைப் பத்து***

வானோங்கு தமிழினம், வளர்ந்தோங்கச் செய்தவனே
தேனோங்கு செந்தமிழால், தினமுன்னைப் பாடுகிறோம்
மானோங்கு தமிழர்க்கு, மருள்நீக்கும் மன்னவனே
வானோங்கு செங்கதிரே,வருவாய் இதுசமயம்

கையில் தமிழேந்திக்,கருத்தில் உனையேந்தி
மெய்யாக வழிநடப்போம்,மேலான எம்தலைவா
பொய்யான கதைகளும்,புனையான வார்த்தைகளும்
நைந்ததென நீஎழுந்து,வருவாய் இதுசமயம்

வஞ்சகத்தின் வலையதனில் வகையாக மானானோம்
குஞ்சரி மணவாளா,குணமுள்ள மாதவனே
வஞ்சகத்தின் தளையறுத்து,வண்டமிழர் குலம்காக்க
அஞ்சலென வந்திடுவாய்,ஆறுதலைத் தந்திடுவாய்

அஞ்சித்தலை குனிந்தும் அடிமைபோல் வாய்புதைந்தும்
அஞ்சலென வந்தவர்க்கு, ஆதரவு சொல்லிடவே
நெஞ்சம் நிறைந்திருக்கும், நீதிமனுச் சோழனே
கொஞ்சம் விரைந்திங்கே, வருவாய் இதுசமயம்

மெய்யிருக்கும் இவ்வுயிரும், ஏங்குதய்யா உனைக்காண
பொய்யிருக்கும் இவ்வுலகம், பேசுதய்யா புனைக்கதைகள்
ஐயா பிள்ளைவேலு, பெற்றெடுத்த ரத்தினமே
செய்யதமிழ்க் கொண்டுவாரும், பொய்யதனைப் பொடியாக்க

கூறாமற் குறைதீர்க்கும்,குறிப்பறிந்த மன்னவனே
தேறாத கவிஎனினும், திருமுன்பு சாற்றுகிறேன்
மாறாத துயரகல,மாயவனே நீ வருவாய்
ஆறாத வடுமாற,ஆயனென நீவருவாய்

பண்ணாறும் செந்தமிழால்,பரணியது பாடிடவே
வண்ணக் கரும்பட்டை, வாகையணி துப்பாக்கி
வன்புலிச் சின்னம்,வரைந்திட்ட தொப்பியுடன்
கண்மை நிறமீசை, கணம்பொருந்த வாருமையா

எண்டிசை நடுங்கவே,இன்றிங்கு வாருமே
தெண்டிரைச் சூழ்உலகில், தென்னிலங்கைத் தேறவே
கண்ணெடுத்துப் பாருமே, கயவர்கள் சோரவே
பண்பாடி அழைக்கிறோம், பாயஇது நல்லசமயம்

யாரென்ன சொன்னாலும், யான்உன்னை ஒருநாளும்
ஐயுற்ற தில்லையப்பா, கார்த்திகைத் திங்களில்
கவியெடுத்துப் பாடுவேன், வல்லவன் நின்புகழை
காலெடுத்து வாருமே, கவலைகள் நிலம்புதைய

வாழ்க தண்டமிழர், மீள்க தமிழர்நிலம்
ஆழ்க துயரெல்லாம், சூழ்க நலமெல்லாம்
வாழ்க தமிழ்ப்பாவை, வெல்க தமிழ்ப்படை
வளர்க ஒற்றுமை, வருக எம்தலைவர்
[vuukle-powerbar-top]

Recent Post