Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பண்பாட்டு சுற்றுலா ௩ : தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் - தமிழர் வாழ்வியலின் ஆன்மா ! 

இரண்டு நாள் பண்பாட்டு சுற்றுலா நிமித்தமாக தஞ்சை சென்ற போது தஞ்சை பெருவுடையார் கோவில், முள்ளிவாய்க்கால் முற்றம் ஆகிய இடங்களை பார்த்துவிட்டு கடைசியாக தஞ்சைப் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு சென்றோம். இந்தியாவில் முதன் முதலாக மொழிக்காக தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிற்கு பிறகு தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் எம்,ஜி ஆர்  அவர்களால் இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் தொடங்க முதலில் எதிர்ப்பு தெரிவித்தது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தான். இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலமாக இருக்கும் நிலையில் தமிழ் மொழிக்கென்று ஒரு தனித்துவமான பல்கலைக்கழகம் உருவானால் அது பிற மாநிலங்களில் சிக்கல்களை உண்டுபண்ணும் என்று அவர் கருதினார். இருப்பினும் எல்லா எதிர்ப்புகளையும் மீறி இப்பல்கலைக்கழகம் 1981 ஆம் ஆண்டு உருவானது. 

1000 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு, கலைகள் போன்ற பல்வேறு துறைகளில் உயர் ஆய்வை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டது. பல்கலைக்கழக நிலப்பரப்பு தமிழகத்தின் நில வரைப் படத்தை போலவே அமைந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தை வானில் இருந்து பார்த்தால் 'தமிழ்நாடு' என்ற எழுத்துக்கள் தெரியும்படி கட்டடத்தை வடிவமைத்து வருகிறார்கள். தற்போது 'மி',  'ழ'  மற்றும் 'டு' ஆகிய கட்டடங்கள் தான் முடிவடைந்துள்ளன. 'த', 'நா' ஆகிய கட்டடங்களும் விரைவில் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிகிறது. (கூகிள் படத்தை பார்க்கவும்)

இங்கு நாம் சென்ற போது இப்பல்கலையில் முனைவர் படிப்பை மேற்கொள்ளும் கட்டடக் கலை ஆய்வாளர் தென்னன் மெய்மன் அவர்கள் நமக்கு ஒரு சில ஆய்வு மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதில் ஒருவர் தொல்காப்பியத்தின் தொன்மையை ஆய்வு செய்கிறார். மற்றொரு மாணவி பதினென்கீழ்க் கணக்கும் , மனுதர்மும் கூறும் அறத்தை ஒப்பாய்வு செய்கிறார். இன்னொரு மாணவி  வேதாத்திரி மகரிசியின் வாழ்க வளமுடன் என்னும் வாசகத்தின் பயனைப் பற்றி ஆய்வு செய்கிறார். மாணவர்களை சந்தித்த பிறகு தமிழ் மெய்யியல் துறையில் பணியாற்றும் தமிழிசை முனைவர் திரு நல்லசிவம் அவர்களையும் சந்தித்து தமிழிசையும் கர்நாடக இசையும் குறித்த ஒப்பாய்வை பேட்டியாக எடுத்தோம். 

இப்படி பல மாணவர்கள் பல துறைகளில், பல கோணங்களில் ஆய்வு செய்வதற்காக சுமார் 1.5 லட்சம் நூல்களை இங்குள்ள நூலகத்தில் சேகரித்து உள்ளனர். தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான இந்த நூலகத்தில் தமிழர்களின் படைப்புகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பான நூலகத்தில் எவ்வாறு தமிழர்களின் அனைத்து வரலாற்று நூல்களும்  சேகரித்து வைக்கப்பட்டிருந்ததோ அவ்வாறே இங்கும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பான நூலகம் சிங்கள இன வெறியர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட காரணத்தால் ஒரு லட்சம் நூற்கள் தமிழர்களை விட்டு நிரந்தரமாக மறைந்தது என்பது மிகப்பெரிய வேதனையான செய்தி. 

தமிழர்களின் வரலாற்றை, பண்பாட்டை கால ஓட்டத்தில் நாம் தக்க வைக்க வேண்டுமெனில் தமிழர்கள் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வுகளின் மூலமாகவே நாம் வரலாற்றை மீட்க் முடியும். தமிழர்களுக்கு என்று வரலாறே இல்லை, நாகரிகமும் இல்லை என்று தமிழ் மக்களை நம்ப வைத்த ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் தமிழர்கள் பதிலடி கொடுக்க வேண்டுமெனில் நிச்சயம் நாம் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதில் மொழியியல் , மெய்யியல், தொல்லியல் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதற்கு அமைவாகத் தான் கீழ்க்கண்ட பல துறைகள் இந்த பல்கலையில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.    

ஓலைச்சுவடியில் துறை 
கையெழுத்துப்படியியல் துறை 
கல்லெழுத்தியல் துறை 
ஆழ்கடல் தொல்லியல் நடுவத்துறை 
தமிழ் மேம்பாட்டுப்புலம் 
அயலக தமிழியல் துறை 
மொழிபெயர்புத் துறை 
அகரமுதலித் துறை 
குமுகவியல் துறை
அறிவியல் தமிழ், தமிழ் மேம்பாட்டுத் துறை
கல்வியியல் துறை 
மொழியியற் புலம் 
இலக்கியத் துறை 
மொழியியல் துறை 
மெய்யியல் துறை 
பழங்குடியினர் ஆய்வு நடுவத் துறை 
இந்திய மொழிகள் பள்ளித் துறை
நாட்டார் வழக்காற்றியல் துறை 
அறிவியற் புலம் 
சித்த மருத்துவத் துறை 
பண்டை அறிவியல் துறை 
தொழிலக, நில அறிவியல் துறை 
கணினியியல் துறை 
கட்டிடவியல் துறை 
சூழலியல், மூலிகையியல் துறை 

இப்படி ஒவ்வொரு துறையின் கீழும் பற்பல துணைத்துறையும் இங்கே நிறுவப்பட்டுள்ளது. தமிழ் சமூகம் தனக்கான இனக்கட்டமைப்பை  உருவாக்க வேண்டுமெனில் முதலில் அதற்கான வலுவான மெய்யியல் பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும். இதை முறையாக மீட்டெடுக்க தவறிய காரணத்தால் தான்  தமிழினம் மிகப்பெரிய அழிவை சந்தித்தது. தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் வேற்றின மக்களுக்கு கைமாறியது. தமிழ் நாட்டில் தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை இழுவுபடுத்தி நூல் எழுதியும், மேடையில் பேசியும் தமிழகத்தில் இனப்பகைவர்களால்  அரசியல் செய்யவும் முடிந்தது. 

இந்த கீழ்மையை நாம் காலத்தில் வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு நிறைய ஆய்வுகள் தேவை. கற்றுத்தேர்ந்த அறிவர்களால் மட்டுமே தமிழ்ச் சமூகம் நிலைநிறுத்தப்படும். வீட்டிற்கு ஒருவரை பொறியாளராக , மருத்துவர்களாக உருவாக்கும் நாம் வீட்டிற்கு ஒரு பிள்ளையை ஒரு தமிழ் ஆய்வாளாராக உருவாக்க முயல வேண்டும். அப்படியான முயற்சிக்கு தமிழக அரசால் நிறுவப்பட்ட இந்த தமிழ்ப்பல்கலைக் கழகம் நிச்சயம் துணை புரியும். தமிழ் அறிவர்களை உருவாக்கும் இந்த பல்கலைக்கு ஆபத்து இல்லாமல் இல்லை. தமிழர் அல்லாதவர்களின் ஆட்சியில் பல சிக்கல்களை இன்றுவரை சந்தித்து வருகிறது இந்த பல்கலைக்கழகம். ஜெயலலிதாவின் ஆட்சியில் பல முறை இந்த பல்கலை வளாகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. பல்கலைகழகத்தின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து பல போராட்டங்களும் நடைபெற்றது. 

இப்படியான சூழலில், தமிழகத்தில் உண்மையான தமிழர் ஆட்சி மலரும் வரை நாம் மிகமும் கவனமாக இந்த அறிவுக் களஞ்சியமான பல்கலைக்கழகத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு இது நிலைத்திருக்க தமிழர்கள் நாம் அனைவரும் நம்மாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளை இங்கு பயிற்றுவிக்க வேண்டும். நம் பிள்ளைகளே இந்த பல்கலைக்கழகத்தை எதிர்காலத்தில் பொறுப்புடன் நிர்வகிக்கும் நிலையை நாம் உருவாக்கிட வேண்டும். 

தமிழர்களின் ஒப்பற்ற அறிவை உலகம் தெரிந்து கொள்ள , அடுத்த தலைமுறைக்கு நம் அறிவை கடத்திச் செல்ல நிச்சயம் தஞ்சைப் பல்கலைக் கழகம் பல்லாண்டு வாழ வேண்டும். நமது அறிவுடைமையாக, தமிழர் வாழ்வியலின் ஆன்மாவாக விளங்கும் தஞ்சைப்பல்கலைக் கழகத்தை நாமே பாதுகாப்போம். தமிழர் அடையாளத்தை மீட்டு, தமிழ்த் தேசிய கட்டமைப்பை வலுப்படுத்துவோம். வாழ்க தமிழ் !

 

       
[vuukle-powerbar-top]

Recent Post