Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் 1 லட்சம் பேரை 'தாய் மதம்' திருப்புவோம் என்று கூறும் அர்ஜுன் சம்பத் அவர்களுக்கு தமிழர்களின் பதில்:

அர்ஜுன் சன்பத் அவர்களே,  முதலில் நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள். நீங்கள் பகவத் கீதை, சமஸ்கிருத வேதங்கள் முதலான நூல்களை பின்பற்றுகிறீர்கள் என்றால்  நீங்களே தாய் மதத்திற்கு திரும்பவில்லை என்று தான் பொருள். காரணம் தமிழர்கள் சமஸ்கிருத பண்பாட்டை, சமஸ்கிருத நூல்களை தழுவிய மதத்தை சார்ந்தவர் அல்லர். அவர்கள் தமிழர் பண்பாட்டின் அடிப்படையில், தமிழர் நூல்களின் அடிப்படையில் உருவான இயற்கை மதத்தை தழுவியர்கள். சிவனியம், மாலியம், முருகியம், ஆசீவகம், சன்மார்க்கம் போன்ற மெய்யியல் மற்றும் இறைநெறிகளை  உலகிற்கு கொடுத்தவர்கள் தமிழர்கள்.  இத்தகைய இறைநெறியை கொண்ட  இயற்கை மதத்திற்கு எந்த பெயரும் வரலாற்றில் இல்லை. அதனால் அந்த மதத்தை தமிழர் மதம் என்று மட்டுமே குறிப்பிட முடியும். ஆனால் ஆரியர்களின் (மனுவியலாளர்கள்) நயவஞ்சகத்தால் தமிழர்களையும் இந்து மதத்தினர் என்றே அழைக்கத் தொடங்கிய காரணத்தால் தான் தமிழர்கள் தங்கள் உண்மையான மத அடையாளத்தை இழந்தனர்.

ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் கட்டிய கோவிலில் தமிழர்களால் தமிழ் மொழியில் பூசை செய்ய முடிவதில்லை. தமிழ் மொழியில் இல்ல நிகழ்சிகளை நடத்த முடியவில்லை. எங்கும் எதிலும் சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்துகிறது. அர்ஜுன் சம்பத் அவர்கள் அணிந்திருக்கும் துண்டில் கூட சமஸ்கிருத எழுத்துரு தான் உள்ளது . இது எவ்வளவு பெரிய இழுக்கு ? தமிழரின் தோளின் மீது புரியாத அந்நிய மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. முதலில் இத்தகைய பண்பாட்டு சீர்கேடுகளில் இருந்து தன்மானத் தமிழராக வெளியே வாருங்கள்.

தாய் மதத்திற்கு அடுத்தவரை திரும்புமாறு அழைக்கும் நீங்கள் முதலில் தாய் இனத்திற்கு , தாய் பண்பாட்டிற்கு மாறுங்கள் . நமக்கு சற்றும் தொடர்பே இல்லாத ஆரிய மதத்தில் இருந்து வெளியேறுங்கள் . தமிழர் மதத்திற்கு மீண்டு வாருங்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களில் இருந்தும் பிராமணர்களை வெளியேறச் சொல்லுங்கள். தமிழ் ஆகமங்களை படித்த தமிழர்கள் கோவில் கருவறை உள்ளே சென்று பூசை செய்ய அனுமதி தாருங்கள். எல்லா தமிழ்ச் சாதியினரும் கோவிலில் பூசனை செய்ய போராட்டம் நடத்துங்கள். சமஸ்கிரத திணிப்பை நீக்கி தமிழ் மொழியை கோவில்களில் ஒலிக்கச் செய்யுங்கள். குடமுழுக்கு விழா தமிழில் நடத்த குரல் கொடுங்கள்.  நமது ஒப்பற்ற திருக்குறள், திருமுறைகள், திருவருட்பா, திருமந்திரம் போன்ற நூல்களை முதலில் படியுங்கள், பின்பற்றுங்கள். தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை போற்றுங்கள். தோளில் போட்டிருக்கும் துண்டை மாற்றுங்கள். எல்லா மக்களிடமும் அன்பு செலுத்துங்கள், அரவணையுங்கள்.  மக்கள் தானாகவே உங்களை தேடி வருவார்கள் .

இதை செய்வதை விட்டு விட்டு தாய் மதம் திரும்புங்கள் என்று  தமிழ் மக்களிடம் கூறுவது அவர்களை மீண்டும் வேறு ஒரு மதத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியே ஆகும். உங்களைப் போன்று மதம் மாறிய பல லட்சம் தமிழர்கள் மீண்டும் தமிழர் மதத்திற்கு  திரும்புமாறு அழைக்கிறோம்.

- தமிழர் பண்பாட்டு நடுவம்



[vuukle-powerbar-top]

Recent Post