Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2014 ஆண்டு நாம் கடந்து வந்த பாதை:  தமிழையும் தமிழர்களையும் உயர்த்தும் பணி.

இந்த 2014 ஆங்கில ஆண்டு முடியும் இந்த கடைசி நாளில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பாக நடைபெற்ற சிறு சிறு முன்னெடுப்புகளை நாம் நினைவு கூர்கிறோம்.

௧. ஆண்டின் தொடக்கத்திலேயே நாம் தூய தமிழ் பேசுவோர் சங்கத்தை உருவாக்கி ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் பேச இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளித்தோம். அதற்காக போட்டிகளை உருவாக்கி பரிசுகளும் கொடுத்தோம்.

௨. இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் தமிழ் அமைப்புகளை ஒன்று திரட்டி சென்னை மரீனா கடற்கரையில் மொழியுரிமை பேரணியை நடத்தினோம்.

௩. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டோம். பின்னர் அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் அதியமான் அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டோம்.

௪. நடுவண் அரசு ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தோம் .

௫. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஆட்சி மொழி அதிகாரம் வழங்க வேண்டும் என்று சென்னையில் கொட்டும் மழையிலும் மொழியுரிமை போராட்டத்தை முன்னெடுத்தோம் .

௬. வங்கிகளில், வங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும் என்று இணையத்திலும், மக்களிடமும் நேரடியாக பரப்புரை செய்தோம் .

௭. வங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் இந்தித் திணிப்பை அகற்ற, பணம் வழங்கும் நிலையங்களில் 'இந்தித் திணிப்பை நிறுத்துக' என்ற வாசகம் பொருந்திய பசை ஒட்டிகளை ஒட்டினோம்.

௮. தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவும், தமிழ் பேசுவோருக்கு தனியார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கவும் 'நம் மொழி' என்ற குறும்படத்தை வெளியிட்டோம்.  இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

௯. தமிழ்த் தேசிய கருத்துகளை மக்களிடம் சேர்க்கும் விதமாக தமிழ் மென்னாடைகளை உருவாக்கி இணையத்தின் வாயிலாக மக்களிடம் எடுத்துச் சென்றோம். தமிழர்கள் வேலை வாய்ப்பை உருவாக்க தமிழர் கடை என்ற இணைய வணிகத்தையும் உருவாக்கினோம்.

௧௦. விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமான புலிப்பார்வை படத்தின் காட்சிகளுக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக புகார் கொடுத்து அக்காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுத்தோம். அதன் பின்னர் பல தமிழ்த் தேசிய அமைப்புகளும் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட  நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

௧௧. திருவள்ளூரில் உள்ள பாரதிசாசன் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினோம்.

௧௨ . சிங்கை தமிழ் ஆர்வலர் ஒருவருடன் இணைந்து தஞ்சை பண்பாட்டு சுற்றுலா சென்று தஞ்சை பெரிய கோவிலில்  ஆய்வுகள் மேற்கொண்டு அதை ஊடகத்தில் வெளியிட்டோம். பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றம் , தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் தொடர்பான பல செய்திகளை தமிழ் மக்களுக்கு வெளியிட்டோம்.

௧௩. தமிழ்த் தேசியம் சார்ந்த பல நூறு பதிவுகளை முகநூலிலும், இணைய செய்தி ஊடகத்திலும் வெளியிட்டு தமிழ் மொழியின் , தமிழர்களின் வளர்ச்சிக்கும் துணை நின்றோம்.

௧௪. தமிழ்த் தேசியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பல நூறு கருத்துப் படங்களை உருவாக்கியும், கட்டுரைகளை எழுதியும்  முகநூலிலும், செய்தி ஊடகத்திலும் வெளியிட்டோம். இது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

௧௫. தமிழக அரசுக்கு, நடுவண் அரசு நிறுவனங்களுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்ட விண்ணப்பங்கள் கையளித்தோம்.

௧௬. முகநூல் தமிழ் ஆர்வலர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து தமிழ் மொழி, தமிழ் இனம் சார்ந்த கலந்தாய்வை  மேற்கொண்டோம். இளைஞர்களை ஊக்குவிக்க சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசுகளை வழங்கினோம்.

இப்படியாக தொடர்ச்சியாக ஆண்டு முழுவதும் தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பிலும், தனிபட்ட முறையிலும் தமிழ், தமிழர், தமிழர்நாட்டின் உரிமையை நிலைநாட்ட முடிந்தவரை எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். வரும் ஆண்டிலும் இன்னும் பல்வேறு மொழி சார்ந்த , இனம் சார்ந்த நடவடிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தொடர்ந்து ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவை அனைத்தும் முகநூல் நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் நமக்கு வழங்கிய ஆதரவால் தான் சாத்தியமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் 2015  ஆண்டு மொழியுரிமை ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க மற்ற தமிழ் அமைப்புகளுடன், கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும். தமிழகத்தில் தமிழர் ஆட்சி கொண்டுவரவும் பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தளத்தில் எங்களோடு எங்கள் பணிக்கு துணை நிற்க விரும்பும் தோழர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுமாறும் கோரிக்கை வைக்கிறோம்.

இராச்குமார் பழனிசாமி
செயலாளர்
தமிழர் பண்பாட்டு நடுவம் 
[vuukle-powerbar-top]

Recent Post