Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2015 ஆம் மொழியுரிமை ஆண்டாக  பிரகடனம் செய்வோம் !!

1965 ஆம் ஆண்டு இரண்டாம் மொழிப்போர் தொடங்கியது. இதில் பலநூறு தமிழர்கள் தங்கள் மொழிகாக்க தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக தக்க வைத்தனர் . அவர்கள் செய்த அந்த பெரும் தியாகத்தால் தமிழகத்தில் இந்தி தான் ஆட்சி மொழி என்ற நிலை மாறியது. இந்தியாவிலும் ஆங்கிலம் ஒரு துணை ஆட்சி மொழியாக உருவாகியது . இதன் விளைவாக இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளும் அழிவில் இருந்து தப்பித்தது . அதனால் இந்தியாவில் உள்ள அனைவரும் மொழிப்போர் ஈகியர்களுக்கு நன்றிக் கடன் படவேண்டும். இவர்களை தமிழர்கள் நெஞ்சில் வைத்து  வணங்கி போற்றிட வேண்டும். இந்திய சுதந்திர தினத்திற்கு ஒப்பாக நாம் மொழிப்போர் ஈகியர் நாளை நினைவு கூர வேண்டும். ஆனால் நாம் அப்படி செய்யத்  தவறிய காரணத்தால் இன்று இந்தியும் ஆங்கிலமும் கொஞ்சம் கொஞ்சமாக நம் மொழியை கொன்று வருகிறது . எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை மாறி எங்கும் இந்தி எதிலும் ஆங்கிலம் என்ற நிலை உருவாகி உள்ளது.

இன்னும் இந்தியாவில் தமிழ் மொழி ஆட்சி மொழியாகவில்லை என்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய அவமானமாக உள்ளது . இந்தி அரசு தமிழை ஆட்சி மொழியாக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகிறது. தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து போராடாத வரை நம் தமிழ் மொழி ஆட்சிக் கட்டிலில் ஏறாது. அதனால் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகாரமும் கிடைக்காது . தமிழர்கள் இந்தி அரசின் கீழ் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழும் நிலை தான் நீடிக்கும் . இந்த நிலையை இன்றைய தலைமுறை மாற்ற முன்வர வேண்டும் . இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் மொழியின் உரிமையை நாம் நிலைநாட்ட வரும் 2015 ஆம் ஆண்டை மொழி உரிமை ஆண்டாக அறிவிப்போம் , பிரகடனப்படுத்துவோம். வரும் இந்த ஆண்டில் மொழி போர் ஈகியர்கள் ஆண்டு முழுவதும் நினைவு கூரும் விதமாக பேரணிகள் , பொதுக் கூட்டங்கள் , கருத்தரங்கங்கள் , பட்டி மன்றங்கள், நாடகங்கள் என பல  பல நிகழ்சிகளை நடத்துவோம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க அரசியம் , சமூக போராட்டங்களை முன்னெடுப்போம் . மாணவர்களை இப்போராட்டத்தில் இணைப்போம் . நம் மொழியை அதிகாரமிக்க மொழியாக மாற்ற நம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் .

இக்கருத்தை அனைத்து தமிழகக் கட்சிகளும், அமைப்புகளும் , தமிழ் சங்கங்களும் , இயக்கங்களும் முன்னெடுத்து செல்ல வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். மொழிப் போர் ஈகியர் நாளான ஜனவரி 25 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட தலைநகரிலும் வீரவணக்க கூட்டங்களை நடத்துவோம் . இதற்கு எல்லா கட்சிளும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகிறோம் . சென்னையில் ஜனவரி 25 ஆம் தேதி மெரீனா கடற்கரையில் மொழி உரிமை பேரணி நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
நம் கோரிக்கைகள் :
2105 ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவது
அனைத்து நடுவண் அரசு நிறுவனங்களிலும் தமிழே ஆட்சி மொழி
அனைத்து நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை.
அனைவருக்கும் இலவச தரமான தாய் மொழிக் கல்வியை அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து முற்றிலும் இந்தித் திணிப்பு அகற்றப்பட வேண்டும்.
தமிழ் வழியில் படித்தோருக்கே அரசு வேலை என்பதை உறுதி செய்தல் வேண்டும்.  
தமிழக அரசு பணியாளர்கள் குழந்தைகள் தமிழக அரசு பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் .
திருக்குறளை தேசிய நூலக அறிவித்தல் .

இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் நாம் மொழிப் போர் ஈகியர்களுக்கு செய்யும் உண்மையான நன்றிக் கடனாகும்.










 . 
[vuukle-powerbar-top]

Recent Post